இராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் கி.பி.1727ல் ஆமர் பகுதியை ஆண்ட இரண்டாம் ஜெய்சிங் என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்திய வாஸ்து சாஸ்திரம் மற்றும் சிற்ப சாஸ்திரப்படி ஜெய்ப்பூர் நகரத்தை வித்யாதர் பட்டாச்சார்யா என்பவர் நிர்மாணித்தார். ஜெய்ப்பூரில் ஏராளமான கோட்டைகளும் அரண்மனைகளும் அமைந்துள்ளன. அவற்றில் சில புகழ் பெற்ற கோட்டைகளின் கட்டடக்கலை குறித்து இந்தப் பதிவில் அறிவோம்.
ஆமர் கோட்டை, ‘ஆம்பர் கோட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. இது 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆமர் நகரத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. ராஜா மான்சிங் என்பவரால் இக்கோட்டை 1592ல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது. ஜெய்ப்பூர் பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் இக்கோட்டையினை விரும்பிக் கண்டு களிக்கிறார்கள்.
ஜெய்கர் கோட்டை (Jaigarh Fort) ஆமர் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. தனது போர் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் மன்னர் இரண்டாம் சவாய் ஜெய்சிங் இக்கோட்டையினை 1726ல் கட்டத் துவங்கினார். ஆம்பர் கோட்டையின் வடிவத்தில் அமைக்கப்பட்ட ஜெய்கர் கோட்டை வடக்கு தெற்காக மூன்று கிலோ மீட்டர் நீளமும். கிழக்கு மேற்காக ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இக்கோட்டையில் மிகப் பெரிய பீரங்கி உள்ளது. ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்கர் கோட்டை அமைந்துள்ளது.
ஆரவல்லி மலையில் அமைந்துள்ள மற்றொரு கோட்டை நகார்கர் கோட்டையாகும். இக்கோட்டை முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நகார்கர் கோட்டை என்று அழைக்கப்பட்டது. நகார்கர் என்றால் புலி என்று பொருள். இக்கோட்டை, ‘டைகர் கோட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. நகார்கர் கோட்டை 1734ம் ஆண்டில் மகாராஜா சவாய் ஜெய்சிங் II என்பவரால் கட்டப்பட்டது. சவாய் ராம்சிங் 1868ல் இக்கோட்டையினைப் புதுப்பித்தார். இந்தக் கோட்டை ஜெய்ப்பூரின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
ஜெய்ப்பூர் மன்னர் இரண்டாம் ஜெய்சிங் இந்த அரண்மனையை 1729 முதல் 1732 காலங்களில் கட்டி முடித்தார். இதனை வடிவமைத்துக் கட்டியவர் வித்யாதர் பட்டாச்சாரியா. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணல் கற்களைக் கொண்ட இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது. நகர அரண்மனையில் முபாரக் மஹால் மற்றும் சந்திர மஹால் என்ற இரண்டு கட்டடங்கள் அமைந்துள்ளன. ஜெய்ப்பூர் மன்னரின் குடும்பத்தினர் தங்கும் இடமாகத் திகழ்ந்தது சந்திர மஹால் ஆகும். சந்திர மஹால் அரண்மனை நகர அரண்மனை வளாகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஏழு தளங்களைக் கொண்டது. இந்த அரண்மனை கலைநயம் மிக்கதாகத் திகழ்கிறது. தற்போது இந்த அரண்மனையில் ஜெய்ப்பூர் மன்னர் பரம்பரையினர் வசிக்கின்றனர். முபாரக் மஹால் எனும் வரவேற்பு மண்டபம் நகர அரண்மனையின் முகப்பில் அமைந்துள்ளது. இந்த மஹால் 19ம் நூற்றாண்டில் மஹாராஜா சவாய் மதோ சிங் எனும் மன்னரால் கட்டப்பட்டது. முபாரக் மஹால் இஸ்லாமிய - ஐரோப்பிய கட்டட அமைப்பில் கட்டப்பட்டது. நகர அரண்மனையினை பொதுமக்கள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பார்வையிட அனுமதிக்கிறார்கள்.
ஹவா மஹால் என்றால். ‘காற்று அரண்மனை’ என்று பொருள். 1799ம் ஆண்டில் ஹவா மஹாலை இரண்டாம் ஜெய்சிங்கின் பேரனும் மஹாராஜா சவாய் மாதோசிங்கின் மகனுமான சவாய் ப்ரதாப் சிங் என்பவர் உருவாக்கினார். இந்த அரண்மனை உஸ்தா லால் சந்த் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சவாய் ப்ரதாப் சிங் கிருஷ்ண பக்தி உடையவர். இதன் காரணமாக இந்த மஹால் கிருஷ்ணரின் கிரீட வடிவில் அமைக்கப்பட்டது. இந்த அரண்மனையில் சிறிய ஜன்னல்கள் 953 உள்ளன. ஜரோக்கள் என்று அழைக்கப்படும் இந்த ஜன்னல்கள் சிக்கலான பின்னல் வேலைப்பாடுகளால் அமைந்தவை. இந்த அரண்மனையின் ஐந்தடுக்குக் கட்டடம் தேன்கூட்டைப் போன்று அறுகோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இந்த அரண்மனை சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னும். ஜெய்ப்பூரின் அரச குடும்பத்தினர் கோடைக் காலங்களில் ஓய்வெடுக்கும் இடமாக ஹவா மஹாலை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினர். ஹவா மஹால் இராஜஸ்தான் அரசு தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது. ஹவா மஹால் ஜெய்ப்பூர் நகரத்தின் வடக்கில் பிரதான சாலை கூடும், ‘பதி சௌபத்’ என்ற இடத்தில் அமைந்துள்ளது.