வரலாற்றில் பல்வேறு ராஜ்ஜியங்களை மன்னர்கள் தங்களின் அடையாளங்களாக பல்வேறு விதத்தில் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் சில கோட்டைகளும் மாளிகைகளும் இன்றுவரை நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இவை அந்த மன்னர்களின் கட்டடக் கலையை எடுத்துக்காட்டுவதோடு அவர்களின் புகழ் பாடுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் மன்னர்கள் யாராலும் வெல்ல முடியாத ஜன்ஜிரா கோட்டை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மும்பை முதல் கோவா வரையிலான கொங்கன் கடற்கரையில் 17ம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் கடலை ஒட்டி அமைந்துள்ள கோட்டைதான் ஜன்ஜிரா. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக இன்று வரை அது காட்சியளிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடற்கரை நகரான முருத் அருகே அரபிக் கடலில் உள்ள ஒரு தீவில் கடலால் சூழப்பட்ட ஒரு தனித்துவமான கோட்டையாக ஜஞ்ஜிரா கோட்டை விளங்குகிறது. இதுதான் இந்தக் கோட்டையின் பலமாகவும் திகழ்கிறது. ஜன்ஜிரா ஜல்துர்கா (கடல் கோட்டை) புகழ் பெற்ற நிஜாம்ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த அகமதுநகர் சுல்தானின் சேவையில் அப்சீனிய மந்திரி மாலிக் அம்பரால் கட்டப்பட்டது.
வழக்கமான சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு பதிலாக ஓவல் வடிவத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தக் கோட்டையை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனதாம். இந்தக் கோட்டையின் சுவர் 40 அடி உயரம் கொண்டதாகவும் 19 வட்டமான தாழ்வாரங்களையும் மற்றும் வளைவுகளையும் உள்ளடக்கி உள்ளது இக்கோட்டை.
இதில் சிலவற்றில் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளதை இன்றளவும் காணலாம். அங்கிருந்து கடல் வழியாக வரும் கப்பல்களையும் கண்காணிப்பது இக்கோட்டையின் சிறப்பாக உள்ளது. மேலும், இந்தக் கோட்டையில் ஒரு மசூதியின் இடிபாடுகள், ஒரு அரண்மனை, நீரோடைகளில் இருந்து நீர் வழிந்தோடும் ஒரு குளியலிடம், குளிர்ந்த மற்றும் இனிமையான நீரைக் கொண்ட ஒரு ஆழமான கிணறு ஆகியவை உள்ளது. இது உண்மையில் உப்புக் கடலின் நடுவில் ஒரு இயற்கை அதிசயம் என்று சொல்லும் அளவிற்கு நன்னீரைக் கொண்டுள்ளது. இது சோர்வுற்ற பார்வையாளர்களின் தாகத்தைத் தணிக்க இன்னும் தண்ணீரை வழங்குகிறது.
இந்தக் கோட்டையைச் சுற்றி கடல் இருப்பதால் கப்பல் வழியாக மட்டுமே இந்த கோட்டையை அடைய முடியும். படகு சவாரி மூலம் கோட்டையை அணுகலாம் கடற்கரையில் உள்ள ராஜபுரி என்ற கிராமத்திலிருந்து ஜன்ஜிரா கோட்டைக்கு பார்வையாளர்கள் செல்லலாம். சுதந்திரம் அடைந்து இந்தக் கோட்டை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இந்தக் கோட்டையை யாராலும் அசைக்க முடியவில்லை.
பலமுறை முயற்சித்தும் ஜன்ஜிரா கடல் கோட்டையை அண்டை பிரதேசங்களை ஆண்ட மன்னர்கள் யாரும் கைப்பற்ற முடியாத, அசைக்க முடியாத கோட்டையாக இருந்துள்ளது.
வீர சிவாஜி 13 முறை முயற்சி செய்தும் இக்கோட்டையைக் கைப்பற்றுவது தோல்வியில் முடிந்ததோடு, அவரது மகன் சாம்பாஜி நீருக்கடியில் சுரங்கம் அமைத்த முயற்சியும் தோல்வி அடைந்ததாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை கட்டப்பட்டு இருந்தாலும் காற்று மற்றும் அலைகளின் இயற்கை அழிவுகளால் தாக்கப்பட்டாலும், இன்றளவும் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய, யாரும் வெல்லாத ஒரு கம்பீரமான இந்தியக் கோட்டையாக அமைந்துள்ளது இந்த ஜன்ஜிரா கோட்டை.