அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். அபிஜித் என்றால் வெற்றி என்று பொருள். நல்ல காரியங்கள் செய்ய நல்ல நேரம் பார்க்க வேண்டும். ஆனால், சூரியன் உதயகாலம், அஸ்தமனகாலம், உச்சிகாலம் தோஷமற்ற நேரங்கள் ஆகும். இந்த நேரத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யலாம். ஏனெனில், திதி, கிழமை, நட்சத்திர தோஷம் கிடையாது.
புராணங்களின்படி திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் வதம் செய்தது அபிஜித் முகூர்த்தத்தில்தான் என சொல்லப்படுகிறது. அதனால் இது அனைத்துவிதமான தோஷங்களையும் நீக்கக்கூடிய நேரம் என சொல்லப்படுகிறது. வேத ஜோதிடத்தில் உள்ள நட்சத்திரங்களில் 28வது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அதேபோல, அபிஜித் முகூர்த்த காலமான பகல் முடிந்து உச்சகாலம் ஆரம்பிக்கும் அந்த முகூர்த்த காலமும் நல்லதையும் வெற்றியும் தேடித்தரும். நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரை உள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.
திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரம் ஆகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்வது கடினமாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்தை பார்த்து விட்டால் அனைத்து காரியங்களும் வெற்றிதான். அதேபோல பகல் முடிந்து உச்சிகாலம் ஆரம்பிக்கும் அந்த முகூர்த்த காலமும் நல்லதையும் வெற்றியையும் தேடித்தரும்.
திங்கள்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும் மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம்.
வீடு யோகம் அமையவும், கடன் பிரச்னை தீரவும் செவ்வாய்க்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
குழந்தை பாக்கியம் பெறவும் இழந்ததை மீட்கவும் புதன்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ள வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும்.
திருமணம் நடைபெறவும், விரும்பியவரையே திருமணம் செய்யவும் வெள்ளிக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக் கொள்ளலாம்.
சனிக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொண்டால் வம்பு வழக்கில் இருந்து வெற்றி கிடைக்கும். உடல்நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம்.
வாழ்வில் உள்ள அனைத்துவிதமான துன்பங்கள் நீங்குவதற்கும் ஞாயிற்றுக்கிழமை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட எல்லாவித நன்மைகளும் நடைபெறும்.