

சுவாமி விவேகானந்தரின் (Swami Vivekananda) பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி, அவரது 163வது பிறந்த நாளாக, இந்தியா முழுவதும் தேசிய இளைஞர் தினமாக (National Youth Day) கொண்டாடப்படுகிறது.
1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்த இவர், இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அத்வைத வேதாந்த தத்துவங்களைப் பரப்பியவராகவும் திகழ்ந்தவர்.
இந்திய அரசு 1984-ல் இந்த நாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.
1985 முதல், இந்திய இளைஞர்களின் நலனைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
ஏன் தேசிய எழுச்சி இளைஞர் தினமாக அறிவிக்கப்பட்டது?
இளைஞர்களை எழுச்சியடையச் செய்த அவரது தத்துவங்கள் மற்றும் இந்திய இளைஞர்களுக்கான உத்வேகம், இதன் முக்கியத்துவமாக காணப்படுகிறது.
சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லம் பற்றிய செய்திகள் நாம் எல்லோரும் அறிந்ததே.
இதற்கு முன் ஜனவரி 26/01/1897 அன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சி நம்மை எல்லோரும் பெருமைப்பட வைக்கும் நிகழ்வு ஆகும்.
அது என்னவென்று தெரிந்துகொள்வோமா?
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலை நிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர், என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
அதற்கு முழுக் காரணம் ராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் பாஸ்கர சேதுபதி ஆவார், என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் அது தான் உண்மை.
அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு கப்பலில் இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் விவேகானந்தர்.
பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கரச் சேதுபதி.
விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் வேண்டுகோளை மறுத்து, அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.
பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலகச் சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கரச் சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னைக் கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார்.
இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கரச் சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது.
இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால், அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கரச் சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிழ்ந்தார் விவேகானந்தர்.
மறுநாள் 27/01/1897 அன்று ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் தரிசனம் செய்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை, அவர் தன் கைப்பட விசிட்டர் புக்கில் எழுதி உள்ளார். அதுவும் கல்வெட்டாக ஶ்ரீ ராமநாதர் கோயிலில் காணப்படுகிறது. அந்த பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய அவர் கையெழுத்து அந்த கல்வெட்டில் காணப்படுகிறது.
I have great pleasure on testifying to the politeness and ready service of the Priests and Supervisors of this temple.
Rameswaram. SdVivekanandar.
ராமநாத கோவிலில் அவர் சொற்பொழிவு ஆற்றிய உரை தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. இதுவும் கோயிலில் காணப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்து நூறாண்டுகள் கழித்து, விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய பாம்பன் குந்துகால் பகுதியில் நினைவிடம் கட்ட வேண்டும் எனப் பணிகளை ஆரம்பித்தபோது விவேகானந்தர் நினைவிடத்திற்குரிய இடம், மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது.
ராமகிருஷ்ண தபோவனத்தில் இருந்து நிலத்தை விலைக்குக் கேட்டு, மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினரை அணுகினார்கள். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குப் பல தலைமுறைகளாக நெருக்கமாக இருந்து வந்த மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் பாஸ்கரச் சேதுபதியின் வழியைப் பின்பற்றி இலவசமாகவே ஐந்து ஏக்கர் நிலத்தை அளித்து நினைவிடம் கட்ட அனுமதித்தனர்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் வருடந்தோறும் ஜனவரி 26 அன்று விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூறும் விதமாகச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள், விவேகானந்தர் நினைவிடத்துக்கு ஆர்வத்துடன் வருகின்றனர்.
இங்கிருக்கும் கண்காட்சிக் கூடத்தில் விவேகானந்தர் பாம்பன் கடற்கரையில் வந்திறங்கிய போது, அவரைச் சேதுபதி மன்னர் வரவேற்ற காட்சி, அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ரதத்தில் விவேகானந்தர் பயணித்த காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் ஓவியங்களா தத்ரூபமாகத் தீட்டப்பட்டுள்ளன. இங்கு விவேகானந்தர் வாசக சாலையும் அமைந்துள்ளது.
விவேகானந்தர் நினைவிடம் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. பாம்பனில் இருந்து தென்னந்தோப்புகள் ஊடாகக் கடல் காற்றைச் சுவாசித்தபடியே 4 கிலோ மீட்டர் நடந்தும் செல்லலாம்…