காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் 4வது நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இப்பண்டிகை வழிவழியான நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை எடுத்துரைப்பதாகும். இந்நாளில் பெரியோர்களிடம் ஆசி பெறுதல், பல்வேறு விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் அல்லது வீர சாகசப் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கொத்தை ஐந்து பெண்கள் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை வாங்கி கல்லில் உரசி பாதத்தில், முகத்தில் பூசிக் குளிப்பர். உடன் பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைப்பு விடுத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் பரிசை பெறுவார்கள். அதேபோல், சகோதரிகளையும், உடன்பிறந்தவர்களையும் அழைத்து விருந்து கொடுத்து ஒன்று கூடி பேசி மகிழ்வதே காணும் பொங்கல்.
இன்றும் கிராமங்களில் இந்த நடைமுறை காணப்படுகிறது. மேலும், தற்போது காணும் பொங்கலன்று மக்கள் குடும்பத்துடன், சொந்த பந்தங்களுடன் கடற்கரை, ஆற்றங்கரை, பொழுதுபோக்கும் இடங்களிற்கும் செல்வார்கள்.
காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கண் பண்டிகை என்ற பெயர்களும் உண்டு. இன்று திருமணமாகாத கன்னிப் பெண்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்து கொண்டு (கற்கண்டு, கரும்புத்துண்டு , பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை அடங்கும்) தங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை போன்ற ஏதாவது ஒரு நீர்நிலைகளுக்கு சென்று தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து சுற்றி நின்று கும்மி அடித்து, பாட்டு பாடி கற்பூரம் ஏற்றி இறைவனை வழிபடுவார்கள்.
இப்படி தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு கலாசாரமாக விளங்குகிறது பொங்கல் பண்டிகை விழாக்கள்.