மெக்சிகோவை பிறப்பிடமாகக் கொண்டு, சென்ட்ரல் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற வேர்க்காய் ஜிகாமா. விஷத்தன்மை கொண்டதொரு பீன்ஸ் செடியின் வேரில் தோன்றி வளரும் ட்யூபர் காய் இது. சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்டது. மாவுச் சத்து நிறைந்த இந்தக் கிழங்கு ஆப்பிள் அல்லது பேரிக்காயின் சுவை கொண்டது. இதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இதில் அதிகம். ஒரு கப் காயில் 20 mg வைட்டமின் C உள்ளது. இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தவும், தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய ஃபிரி ரேடிகல்களை அழிக்கவும், சில வகை கேன்சரை உருவாக்கும் செல்களின் பரவலைத் தடுக்கவும் உதவுகின்றன. வீக்கத்தையும் குறைக்கச் செய்யும்.
இதிலுள்ள அதிகளவு மாவுச்சத்து மற்றும் கரையாத, கரையக்கூடிய நார்ச்சத்துக்களானவை ஆரோக்கியமான செரிமானத்தைத் தரவும், மலச்சிக்கலை நீக்கவும் செய்கின்றன; எடை குறைப்பிற்கும் உதவி புரிகிறது. ஜிகாமாவில் ஃபிளவனாய்ட், சபோனின், கோலின், ஃபோலிக் அமிலம், பைரிடாக்சின், பைட்டோ ஈஸ்ட்ரோஜன், இன்யூலின் போன்ற உயிர் வேதியல் கலவைகள் உள்ளன.
பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், மக்னீசியம், கால்சியம், வைட்டமின் C, B காம்ப்ளெக்ஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது குறைந்த கலோரி மற்றும் குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதன் இன்சுலின் எதிர்ப்பு குணம் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் நிர்வகிக்க உதவுகிறது. ஜிகாமா ஜூஸ் இரத்த நாளங்களில் இரத்தக் கட்டி உருவாவதைத் தடுத்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைத் தடுக்கிறது.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய காய், ஒரு விஷச் செடியின் வேரில் வளர்வதால், அதை நன்கு கழுவி, சற்றே தடிமனான அதன் தோலை முழுமையாக சீவிவிட்டு சாலட்டுடன் சேர்த்து அல்லது அப்படியேயும் சாப்பிடலாம்.