முருகப்பெருமானுக்கு உகந்த விழாக்களில் நிச்சயம் இடம்பெறுவது காவடிகள். வேண்டுதலின் பொருட்டு இந்தக் காவடிகள் பக்தர்களால் எடுக்கப்படுகிறது. இதில் பால் காவடி, சந்தன காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி, மச்சக்காவடி, வேல்காவடி, வெள்ளிக்காவடி, தாளக்காவடி என்று நிறைய வகைகள் உண்டு. வேண்டுலின் பொருட்டு விரதத்துடன் தங்கள் தோளின் மீது சுமந்து ஆடியபடி செல்லும் ஆண்கள் பெண்களுடன் சிறு காவடிகளை சுமந்து செல்லும் குழந்தைகளும் நம்மைக் கவர்வர்.
இப்படிச் சுமக்கும் ஒவ்வொரு காவடிக்கும் அதற்குரிய தனிப்பட்ட ஒரு பலன் இருப்பதாகக் கூறுகின்றனர். உதாரணமாக, பால் காவடி செல்வச் செழிப்பை தரும் என்றும், சந்தனக் காவடி வியாதிகளை தீர்க்கும் என்றும், பன்னீர் காவடி நல்ல மனநிலையை தரும் என்றும், அன்னக்காவடி வறுமையை நீக்கும் என்றும், அக்னி காவடி பில்லி சூனியம் ஏவல்களை நீக்கும் என்றும், சர்ப்ப காவடி குழந்தை வரம் அளிக்கும் என்றும், கற்பூரக் காவடி ஆரோக்கியத்தை தரும் என்றும், தேர் காவடி பெரும் ஆபத்துகளை விலக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதையொட்டியே அந்தந்தக் காவடிகளின் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.
அந்த வகையில் இதுபோன்ற காவடிகளை அமைப்பதில் தனித்துவம் பெற்று விளங்குகிறார்கள் தம்மம்பட்டி கைவினை மரக் கைவினை கலைஞர்கள். அண்மைக் காலமாக தமிழகத்தின் மரச்சிற்ப நகரம் என்ற பெருமையை தம்மம்பட்டி பெற்றுள்ளதை அறிவோம். மரச் சிற்பங்களுக்கு பெயர்பெற்று விளங்கும் இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் செய்யும் மரக்காவடிகள் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்திற்காக கடல் கடந்து வெளிநாடுகள் செல்வது பெரிய விஷயமாக உள்ளது.
இந்தக் காவடிகள் எப்படி உருவாகின்றன தெரியுமா? வேங்கைமரம் முருகனுக்கு உகந்தது என்ற ஐதீகத்தின்படி தகுந்த வேங்கை மரத்தினை தேர்வு செய்து அதில்தான் காவடிகள் உருவாகின்றன. இரண்டு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட வேங்கை மரப் பலகைகளில் காவடிகளை தயாரிக்கிறார்கள். இரண்டு பலகை நடுவில் தண்டு என்பது காவடிக்கான அடிப்படை. முருகன், விநாயகர் போன்ற தெய்வ வடிவங்களை நுட்பமாக இழைத்து பலகையில் ஓவியமாக வரைந்து அதை மெல்லிய உளியால் செதுக்குகிறார்கள். பிறகு அதனை பாலீஷ் செய்து மற்ற அலங்காரங்களை செய்து முடிக்கிறார்கள். இதற்கடுத்து காவடியின் வளைவான மேல் பகுதி மூங்கிலைக் கொண்டு அமைக்கப்படுகிறது.
குறைவான செலவில் வாகை மரத்தில் காவடிகள் செய்வதும் உண்டு. காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் பெரும்பாலும் அந்தக் காவடிகளை சம்பந்தப்பட்ட கோயில்களிலேயே ஒப்படைத்து விடுவார்கள். இன்னும் சிலர் அதை தங்கள் வீடுகளிலேயே அழகுக்காக வைத்துக்கொள்வதும் உண்டு.
தம்மம்பட்டியை பொறுத்தவரை இங்கு செய்யப்படும் மரச்சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தக் காவடிகளின் சிறப்பை அறிந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாரம்பரியமான இந்த மரக்காவடிகளை இங்கிருந்து வரவழைத்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி மகிழ்கின்றனர். தம்மம்பட்டியில் உள்ள மூன்றாம் தலைமுறையினரும் இந்த மரச் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது, பாராட்டத்தக்கது.