பொதுவாக, மனிதர்கள் சிறுவயதில் இருந்து தங்களுடைய திறமையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால், வயது வந்த பின்பு கூட சிலர் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் யாரையும் சார்ந்து இருக்காமல் தானே சுயமாக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் தன் வாழ்க்கையை பற்றி தீர்மானிக்கவும் எல்லோராலும் முடிவதில்லை. எப்போதும் பிறரை சார்ந்தே இருப்பதால், அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால், சிலர் தனக்குத்தானே ஆசிரியர்களாகி தன் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கிறார்கள். அவர்கள் இதற்காக யாரையும் சார்ந்து இருப்பதில்லை.
தனக்குத்தானே ஆசிரியராக இருப்பதன் நன்மைகள்:
தைரியசாலிகள்: இவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் சுயபுரிதலும் அதிகம். தங்களுடைய சிந்திக்கும் திறனால், தங்கள் நம்பிக்கைகள். கருத்துக்கள் போன்றவற்றை தைரியமாக வெளிப்படுத்துவார்கள். முடியாது என்று சொல்ல வேண்டிய இடங்களில் தயக்கமின்றி சொல்வார்கள். பிறரை திருப்திப்படுத்தி காரியம் சாதிக்க வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை.
கடினமான காலகட்டங்களை எளிதாக எதிர்கொள்வது: இவர்களால் சவால்களை எதிர்கொண்டு கடினமான காலகட்டங்களை கூட சமாளிக்க முடியும். அவற்றிலிருந்து எளிதாக மீண்டும் வருவார்கள். நல்ல மனப்பக்குவம் இருக்கும். பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட பிரச்னைகளை திறமையாக சமாளிக்கத் தெரிந்தவர்கள்.
உறவுகளை வளர்ப்பதில் வல்லவர்கள்: இவர்கள் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பதால் சொந்தங்களை, உறவுகளை மதிக்காமல் இருப்பவர்கள் என்று அர்த்தமல்ல. பிறரின் கருத்துக்களை மதிக்கும் அதேநேரம் தங்களுடைய கருத்துக்களில் உறுதியாக இருப்பார்கள். அதை தங்கள் உறவுகளுக்குப் புரிய வைப்பார்கள். நல்லவிதமாக உறவுகளைப் பேணுவதில் வல்லவர்கள்.
பொறுப்புசாலிகள்: பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். பொறுப்புகளை தட்டிக்கழிக்க எப்போதும் விரும்ப மாட்டார்கள். புதிய சூழ்நிலை, புதிய இடம், புதிய ஊர் என்று எதற்கும் தயங்காமல் புதிய அனுபவங்களுக்குத் தங்களை தயார் செய்து கொண்டு கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிப்பார்கள்.
பிறரை எப்போதும் திருப்தி செய்து வாழ்வது என்பது ஒரு கட்டத்தில் அலுப்பையும் சலிப்பையும் தரும். ஆனால். தனக்குத்தானே ஆசிரியர்களாகி வாழ்பவர்கள் தன்னுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் சுய சிந்தனையின் பேரில் எடுக்கப்படும் முடிவுகளால் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.