கலைக்கூடமாகத் திகழும் நெல்லையப்பர் திருத்தேரோட்டம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம்
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம்

திருநெல்வேலி நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காந்திமதியம்மன் சமேத ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தத் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தின்போது ஊரே திருவிழா கோலம் பூண்டுவிடும். இந்த ஆண்டு, நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பது 518வது ஆண்டு தேரோட்டம் ஆகும்.

தற்போதுள்ள நெல்லையப்பர் தேர் கி.பி. 1504ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழகத்திலேயே பழம்பெருமை வாய்ந்த இந்த நெல்லைப்பர் தேர் எந்தவிதத்திலும் இயந்திரங்களின் உதவி இல்லாமல் முழுக்க முழுக்க பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. திருவாரூர் தேர் அளவில் பெரியது, முதன்மையானது. திருநெல்வேலி தேர் இரண்டாவது பெரிய தேர். ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.

நெல்லையப்பர் தேரின் அச்சு ஒரே வார்ப்பில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சு லண்டனில் செய்து கொண்டுவரப்பட்டதாகும். இதற்கு முன்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை மர அச்சுதான் இருந்தது. நெல்லையப்பர் கோயிலின் தேருக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் கூட தொடர்பு இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துக்காக பாடுபட்ட பலரும் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்தி இருக்கிறார்கள். அத்துடன் 1948ம் ஆண்டு சுதந்திர தின வெற்றியை கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷப கொடியோடு தேசியக்கொடியும் பறக்க விடப்பட்டது.

நெல்லையப்பர் தேரில் நான்கு வெளிச்சக்கரங்களும் நான்கு உள்சக்கரங்களும் இருக்கின்றன. இந்தத் தேர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வரையிலும் 13 அடுக்குகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால், தேரை இழுத்துச் செல்லும்போதும், திருப்பும் போதும் சிரமம் ஏற்பட்டதால் அதன் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு ஒன்பது அடுக்குகளாக மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், ரத வீதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் தேர் செல்லும் வீதிகளில் குறுக்கு நெடுக்குமாக சென்ற மின்சார வயர்கள் போன்றவற்றின் காரணமாக மீண்டும் தேரின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது ஐந்து அடுக்குகளாக ஆக்கப்பட்டு அலங்காரத்துடன் தேர் இழுக்கப்படுகிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த நெல்லையப்பர் தேர், கம்பீரமாக அதற்கென்ற ஒரு ராஜ கம்பீரத்துடன் வலம் வருகிறது. தேரின் அடிப்பாகத்தில் அலங்கார மண்டபம் போன்ற அமைப்பு விளங்க, அபூர்வ சிற்பங்கள் பார்ப்பவர் கண்களை கவர்கின்றன. தேர் நகரும்போது அசைந்தொலிக்க சிறுமணிகளை இதில் கட்டியுள்ளனர். மேலே அஷ்டதிக் பாலகர்களுக்கு நடுவே வண்ணக்கோலமாக துணி உருளைகள் தவழ்ந்து ஆடுகின்றன. மேலே உச்சியில் அழகான கோபுர உருவமும், அதன் மேலே பறக்கும் வெற்றி கொடியும் நம் பாவங்களை பொடி பொடியாக்கும் மங்கலச் சின்னங்களாகத் திகழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
கீமோதெரபி சிகிச்சை பெறும்போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க ப்ளீஸ்! 
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம்

முழு அலங்காரத்துடன் இருக்கும் இந்தத் தேர் 450 டன் எடையும், 85 அடி உயரமும் கொண்டது. சதுர வடிவில் இருக்கும் இந்தத் தேரின் முன்பகுதியில் காந்திமதியம்மன் சமேதராக நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. அதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கிறார்கள். இடப்பக்கம் கங்காளநாதர் சிற்பம் குண்டோதரன், மான், மோகினிடன் இருக்கிறது. அடுத்து ராவணன் கைலாய மலையை அசைக்கும் சிற்பம், வலப்பக்கத்தில் நடராஜரும் தேரின் பின்பகுதியில் மகாவிஷ்ணுவின் தசாவதார சிற்பங்களும் இருக்கின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் சிற்பம் உள்ளது. தேரின் கீழ் மட்டத்தில் பூத கணங்கள் வரிசையாக இருக்கின்றன. தேரின் பின் பகுதியில் அகஸ்திய முனிவர், தவம் செய்யும் யோகிகள் என பல சிற்பங்கள் உள்ளன. இப்படி நடமாடும் கலைக்கூடமாக திகழும் இந்தத் தேர் நாளை காலை (21.06.2024) சுமார் 7 மணியளவில் திருநெல்வேலி திருவீதிகளில் வலம் வர உள்ளது.

மற்ற கோயில்களில் தேருக்கு முன் சக்கரங்களில்தான் சறுக்குக் கட்டைகள் போடுவார்கள். ஆனால், எடை மிகுந்த நெல்லையப்பர் தேருக்கு உள்ளே இருக்கும் சக்கரங்களுக்கும் சறுக்குக் கட்டை போடுவார்கள். இது மிகவும் ஆபத்தான, கவனமாக செய்ய வேண்டிய பணியாகும்.

நெல்லையப்பர் கோயிலில் ஐந்து தேர்கள் உள்ளன. இறைவனுக்கு ஒன்று, இறைவிக்கு ஒன்று, இவர்களின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் சுப்ரமணியர் ஆகியோருக்கு ஒவ்வொன்று, சிவபெருமானின் கணக்கர் சண்டிகேஸ்வரருக்கு ஒன்று என ஐந்து தேர்கள் உள்ளன. இவை ஒன்றை விட ஒன்று அளவில் பெரியதும் சிறியதுமாகும். தேரோட்டம் அன்று அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணிய தேர் முதலில் இழுக்கப்படும். பின்பு பெரிய தேரான நெல்லையப்பர் தேரும் அதன் பின்பு காந்திமதியம்மன் தேரும் இழுக்கப்படும். இரண்டு தேர்களும் நிலை வந்து சேர்ந்த பிறகு சண்டிகேஸ்வரரின் தேர் கடைசியாக இழுக்கப்பட்டு தேர் திருவிழா நிறைவு பெறும்.

பொதுவாக, சிவபெருமானின் தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அனைத்து இறை மூர்த்தங்களும் எழுந்தருளுவதாக ஐதீகம். ஆகவே, நெல்லையம்பதி தேரோட்டத்தைக் காண்டு களித்து அனைவரும் சிவனாரின் பேரருளை பெற்று சிறப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com