காலங்கள் பல கடந்தும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தொட்டி பாலம்!

மாத்தூர் தொட்டி பாலம்
Mathur Thotti bridge

மது கலையும் கலாசாரமும் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிகழ்ந்ததாக உள்ளது. அது, வீடு கட்டும் கலையிலிருந்து பாலம் கட்டும் கலை வரை என விரிந்து கிடக்கிறது. சில பாலங்கள் ஆச்சரியப்படுத்தும், இன்னும் சில பாலங்கள் அதிசயிக்க வைக்கும். இந்த வரிசையில் இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது, கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலம் பற்றித்தான். இந்தப் பாலம் மிகவும் புகழ் பெற்றது. 1966ம் ஆண்டு கட்டப்பட்ட இது, ஆசியாவின் மிக உயரமானதும், மிகவும் நீளமானதுமானது எனப் போற்றப்படுகிறது.

இந்தத் தொட்டிப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. பாலத்தின் உள்ளே தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டதாகும். தண்ணீா் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. இந்தப் பாலத்தின் மூலம், மலையின் ஒரு பகுதியில் இருந்து தண்ணீர் பாசனத் தேவைக்காக விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் இது தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தப் பாலம், தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப் பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாகக் கொண்டு வரப்படுகிறது. இந்த நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.

சுற்றுலா பயணிகள் இந்தத் தொட்டிப்பாலத்தை பார்வையிட்டு மகிழ, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்துள்ளது. இந்தத் தொட்டி பாலம் பகுதியில் நாம் நின்றால் எப்பொழுதுமே குளிர்ச்சியான சூழ்நிலைதான் நிலவும். அவ்வளவு இயற்கையான அழகை ரசித்தபடி குளிர்ச்சியாக நாம் இந்த தொட்டிப் பாலத்தை ரசிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் முயற்சியால் கட்டப்பட்ட இந்தப் பாலம், பிரபல சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாட்கள் பயன் தர சில எளிய ஆலோசனைகள்!
மாத்தூர் தொட்டி பாலம்

இந்தத் தொட்டிப் பாலமானது அருவிக்கரை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. இது திருவட்டாரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலையிலும் அமைந்துள்ளது. இங்கே குழந்தைகள் பூங்காவும், குளித்து மகிழ்வதற்கான நீராடும் துறையும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பயணிகள் பார்வையிட்டு கண்டுகளிக்கலாம். கன்னியாகுமரி சுற்றுலா செல்லும் பொழுது அவசியம் இந்த தொட்டிப் பாலத்திற்கு ஒரு விசிட் அடித்து விட்டு வாருங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com