வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாட்கள் பயன் தர சில எளிய ஆலோசனைகள்!

வீட்டு உபயோகப் பொருட்கள்
Household appliances

யிரக்கணக்கில் பணம் போட்டு வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆசை ஆசையாக வாங்கினால் மட்டும் போதாது, அவற்றை நன்கு பராமரிக்கவும் தெரிந்து வைத்திருக்க  வேண்டும். தினசரி நாம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாட்கள் நமக்குப் பயன் தர சில எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேனை எப்போதும் ஓட விட வேண்டிய அவசியமில்லை. புகை அதிகமாக இருக்கும்பொழுது அல்லது சமையலறை மிகவும் வெப்பமாக இருக்கும்போது மட்டும் ஓட விட்டால் போதும்.

மின் விசிறியின் பிளேடுகளில் அழுக்குகள் தூசிகள் சேரச் சேர அதன் திறன் பாதிக்கப்படும். எனவே, அவற்றை நேரம் கிடைக்கும் பொழுது ஈர ஸ்பான்ஞ் வைத்து அழுத்தி துடைத் தெடுக்கவும். அப்படித் துடைக்கும்பொழுது பிளேடை கீழ் நோக்கி இழுத்துப் பிடித்துக் கொண்டு அழுத்தித் துடைக்க பிளேடுகள் லேசாக வளைந்து போகும். இதனால் மின்விசிறியின் திறனும் பாதிக்கப்படும். எனவே துடைக்கும் போது கவனம் தேவை.

வாட்டர் ஹீட்டர்களில் ஸ்டோரேஜ் மாடல், இன்ஸ்டன்ட் மாடல் என்று இரண்டு வகைகள் உள்ளன. ஸ்டோரேஜ் மாடலை தேர்ந்தெடுப்பதே மின்சார சிக்கனத்திற்கு வழிவகுக்கும். இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் அதிகமாக செலவாவதுடன் பராமரிப்பு செலவும் அதிகரிக்கும்.

இடி, மின்னல் வரும் சமயங்களில் டிவி மற்றும் கேபிள் கனெக் ஷனை நிறுத்தி சுவிட்ச் ஆப் செய்வதுடன் பிளக்கையும் எடுத்து விடுவது பாதுகாப்பானது. அதேபோல், வெளியூர் செல்லும் சமயங்களில் வீட்டை பூட்டும்போது கேபிள் மற்றும் டிவிக்குரிய மின்சார இணைப்பை துண்டித்து விட்டு செல்வது பாதுகாப்பானது.

மின்சார சப்ளை வோல்டேஜில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே ஏ.சி., ஃபிரிட்ஜ் பாதிக்கப்படாமல் இருக்க இரண்டுக்கும் ஸ்டெபிலைசர் பொருத்துவது அவசியம்.

வாஷிங் மெஷினில் ஃப்ரென்ட் லோடிங் மற்றும் டாப் லோடிங் என இரண்டு மாடல்கள் உண்டு. இதில் டாப் லோடிங் மாடலில் மின்சாரம் மற்றும் தண்ணீர் சிக்கனமாக செலவழியும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் இந்த மாடலை வாங்குவது சிறந்தது. வாஷிங் மெஷினை குளியலறையில் வைத்தால் தண்ணீர் பட்டு எளிதில் துருப்பிடித்து விடும். அதேபோல் பால்கனி, வராண்டா போன்ற வெயில் நேரடியாக படும் இடங்களில் வைத்தாலும் பெயிண்ட் சீக்கிரம் போய் வெளிறி விடும்.

இதையும் படியுங்கள்:
சருமப் புற்றுநோய் அறிகுறிகளும் தடுப்பு வழிமுறைகளும்!
வீட்டு உபயோகப் பொருட்கள்

வாக்குவம் கிளீனரை உபயோகப்படுத்தியதும் தூசி சேகரிக்கும் பையை உடனடியாக சுத்தம் செய்தல் அவசியம். அதிலும் குறிப்பாக வீட்டில் யாருக்கேனும் டஸ்ட் அலர்ஜி இருந்தால் ஜாக்கிரதையாக சுத்தம் செய்யவும்.

ஃபிரிட்ஜ், டிவியை வெயில் படும் இடத்திலோ, அடுப்பிற்கு அருகிலோ வைப்பதை தவிர்க்கவும். அத்துடன் சுவற்றை ஒட்டியும் வைக்காமல் இருப்பது அவசியம்.

பிரிட்ஜின் கதவை அடிக்கடி திறந்து மூடினால் வெளியில் உள்ள வெப்பக் காற்று உள்ளே சென்று அதிக நேரம் ஓட வேண்டி இருக்கும். இதனால் மின்சார செலவு அதிகரிக்கும். குளிர்சாதன பெட்டியில் அதிக சூடான பொருட்களை அப்படியே வைக்காமல் ரூம் டெம்பரேச்சருக்கு வந்ததும் வைப்பது மின்சார சிக்கனத்திற்கு வழிவகுக்கும். குளிர்சாதன பெட்டியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை   டீஃப்ரோட்ஸ்ட் செய்வது நல்லது. இல்லையெனில் உள்ளே ஐஸ் படிந்து அதிக மின்சாரம் செலவாகும்.

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும்பொழுது அதற்கு எவ்வளவு நாட்கள் வாரண்ட்டி, எத்தனை ஃப்ரீ சர்வீஸ், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் எது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. அத்துடன் வாரண்டி கார்டில் மறக்காமல் விற்பனை தேதி, கடை முத்திரையிட்டு வாங்கிக் கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com