
உலகின் பெரும்பாலான மனிதர்கள் கடவுள் வழிபாடு மிக்கவர்களாய் இருக்கின்றனர். தெய்வங்களை முன்னிலையாக வைத்து காரியங்களை நடத்துகிறவர்களாகவும், அதீத பக்தியில் மூழ்கினவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களுள் ஆவிகளை வழிபடுபவர்களை பற்றி அறிந்தவர்கள் சிலர்.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் துளு நாட்டின் பகுதிகளான, தெட்சண கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்ட கிராம பகுதி மக்கள், காட்டுப்பன்றியின் முக வேடமிட்டு, அதை வணங்குவதே பூத கோலா ஆட்டம். இதன் மைய தெய்வமே பஞ்சூர்லி.
பூத கோலம்
பூத கோலம் என்பது கர்நாடகத்தில் துளு இன மக்களால் போற்றப்படும் தெய்வீக நடனம் ஆகும். பூதம் என்றால் ஆவி மற்றும் கோலம் என்றால் நாடகம் அல்லது நிகழ்ச்சி என்று பொருள். மக்களால் வழிபடப்படும், பஞ்சூர்லியின் தெய்வீக வேடத்தை அணிபவர்கள் விரதம் இருந்து; மிகவும் பரிசுத்தமாக தன்னை பராமரித்து; முழுமன பக்தி நிலையை அடைய அவ்வின மக்களின் தெய்வீக பிரார்த்தனையே காரணமாகிறது.
பஞ்சூர்லி மட்டுமல்லாது இதுபோன்ற பல தெய்வ ஆவிகள் மக்களால் வழிபடப்படுகின்றன. பொதுவாக, பூத கோலா ஆட்டம், தொடர்ச்சியாக அல்லாமல் குறிப்பிட்ட சில சடங்குகளுக்கு மட்டும் நடைபெறுகிறது.
சரி இப்பொழுது பஞ்சூர்லியை பற்றி பார்ப்போமா?
பஞ்சூர்லி என்பதற்கு காட்டுப்பன்றி என்று அர்த்தமாம். ஐந்து காட்டு பன்றிகள் உள்ள கூட்டத்தில், ஒரு பன்றி மட்டும் தனித்து நிற்பதை கண்ட பார்வதி தேவி, அதை தன்னோடு கைலாசத்திற்கு அழைத்துச் செல்கிறார். பற்களின் வளர்ச்சியால், அதன் தொந்தரவு தாங்காமல் அங்குள்ள பயிர் நிலங்களுக்கு பாதகம் ஏற்படுத்துகிறது அப்பன்றி. வயல் நிலங்களில் உள்ள பயிர்களை தன் பற்களால் சேதப்படுத்துகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத சிவன், அதைக் கொல்ல முயற்சிக்கும்போது, பார்வதி தேவி அவரை தடுக்க, மாறாக சிவன் அப்பன்றிக்கு கைலாசத்தில் இருக்க அனுமதி மறுத்து, பூமிக்கு அனுப்பி விடுகிறார். பின்னர் அப்பன்றியை பயிர் நிலங்களை பாதுகாக்கும் தெய்வீக ஆவியாக இருக்க கட்டளையிட, அது அப்படியே ஆயிற்று.
இப்படியாக, பஞ்சூர்லி எனும் தெய்வீக ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தெய்வ நிலையை அடைந்து ஆடும் நடனமாக பூதக் கோலாக் கருதப்படுகிறது. அனைவராலும் இந்த நடனத்தில் பங்கேற்க முடியாது. இதற்காக பயிற்சி பெற்றவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியுமாம். மேலும் இவர்கள் சமுதாயத்தில் மதிக்கத்தக்கவர்களாய் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களையும், தங்கள் வயல் நிலங்களையும் பாதுகாக்க வந்த தெய்வமாக இந்த பஞ்சூர்லி வழிபடப்படுகிறது.