
2022-ம் ஆண்டு ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் கன்னட திரை உலகில் பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தின் துளு பேசும் மக்கள் இன்றும் பின்பற்றி வரும் சடங்குகளில் முக்கியமான ஒன்று 'பூத கோலா'. இந்த தெய்வ வழிபாட்டையும், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் அடிப்படையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான இந்த படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான "காந்தாரா சாப்டர் 1" படத்தை தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். இதிலும் அவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
முதல் பாகத்திற்கு முந்தைய கதையை கூறும் படமாக 2ம் பாகத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் காந்தாரா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் நடித்து வந்த திருச்சூரைச் சேர்ந்த விஜூ திடீரென கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர் கடந்த மாதம் கேரளாவில், சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல் இந்த படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி கடந்த மாதம் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.
இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணையின் நீர்த்தேக்க பகுதியில் அதிகம் ஆழம் இல்லாத இடத்தில் ஒரு சிறிய படகில் வைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
அப்போது அந்த படகில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க, துணை நடிகர்கள், கேமரா குழுவினர் என 30 பேர் இருந்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்பட அனைவரும் அணை நீரில் தத்தளிக்க, அவர்களை அங்கு தயாராக இருந்த மீட்பு படையினர் மீட்டனர்.
உயிர்சேதம் இல்லாமல் அனைவரும் தப்பினாலும், பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகள், நவீன எந்திரங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை அணை நீரில் மூழ்கி நாசமாகின. படகு கவிழ்ந்தபோது சிலர் பீதியடைந்ததாகவும், ஆழமற்ற பகுதி என்பதால் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு வந்துவிட்டதாகவும் மூத்த படக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். மேலும் "ஆவிகள் ஏதோ ஒரு வகையில் எங்களை ஆசீர்வதித்திருப்பதை இது காட்டுகிறது" என்று படக்குழு அவர் கூறினார். ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தைத் தொடங்குவதற்கு முன்பு ரிஷப் ஷெட்டி முறையான சடங்குகளைச் செய்து ஆசிர்வாதங்களைப் பெற்றதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த மாதம் இதேபோல் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 3 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதால் நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் காந்தாரா சாப்டர்-1 படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவை அனைத்து தற்செயலாக நடந்ததா அல்லது ஏதாவது அமானுஷ்யத்தின் வேலையா என்று கலக்கத்தில் படக்குழுவினர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.