சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் வழங்கும் 2024 ஆண்டுக்கான ‘சாமானிய ஹீரோக்கள்’ விருது வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ஷகீல் அக்தர் நிகழ்ச்சியில் தலைமை விருதினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்குரிய விருது பெற்ற மூன்று நபர்கள்:
* மேரி தாமஸ், சமூக சேவகர் - செல்வி நினைவு இல்லம் அறக்கட்டளை,
* திலகவதி பி, முதல் பெண் கட்டைக் கூத்து கலைஞர்,
* டாக்டர் ஜோசிகா என், தலைமை கால்நடை மருத்துவர் - பெசன்ட் நினைவு விலங்கு மருந்தகம்.
2016ம் ஆண்டு முதல் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ‘சாமானிய ஹீரோக்கள்’ (Unsung Heroes) விருதுகளை வழங்கி வருகிறது. சுயநலம் மிகுந்த இந்த உலகத்தில், தன்னலம் கருதாமல் சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு மகத்தான சேவை செய்து வருபவர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிப்பதே இந்த விருதின் நோக்கமாகும். ஐந்தாவது ஆண்டாக இந்த விருதுகளை சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.
தலைமை விருந்தினர் ஷகீல் அக்தர் பேசுகையில், "சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர, இந்த சாமானிய ஹீரோக்கள் தன்னலமற்ற சேவை செய்து வருகின்றனர். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, நாம் அனைவரும் எந்த விதத்திலாவது சக மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.
58 வயதான மேரி தாமஸ் பேசுகையில், "நான் 1999ல் செல்வி நினைவு அறக்கட்டளையைத் துவக்கி, மரணத்தை எதிர்நோக்கியுள்ள எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யத் துவங்கினேன். நர்ஸ்கள் கூட அவர்களை கவனித்துக்கொள்ள முன்வரவில்லை. குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, மன நோயால் பாதிக்கப்பட்ட கர்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தின்போது கூடவே இருந்து கவனித்துக் கொள்வேன். என்னால் இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும். அதற்கான ஆர்வம் எனக்கு உள்ளது. ஆனால், எனது உடல்நிலை ஒத்துழைக்க மறுக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
கட்டைக்கூத்து என்பது கிராமப்புறங்களில் நடக்கும் முழு இரவு பாரம்பரிய நாடக வடிவமாகும். ஆண்கள் மட்டுமே பங்கேற்றுவந்த கட்டைக்கூத்துக் கலையில் தடம் பதித்த முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர், திலகவதி ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முறைப்படி அந்தக் கலையைக் கற்றுக் கொண்டு, தற்போது சொந்தமாக கூத்துக் குழு ஒன்றை நடத்திவரும் அவர், தமிழ் நாடெங்கும் பல்வேறு கட்டைக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அவர் தனது ஏற்புரையில், "குக்கிராமத்துப் பெண்ணான நான் இன்று உங்கள் முன் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு கட்டைக்கூத்துக் கலைதான் காரணம். கைபேசிகளுடனேயே காலத்தைக் கழிக்கும் குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் கலை ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் எனது லட்சியம்” என்று அவர் கூறினார்.
பெசன்ட் மெமோரியல் பிராணிகள் மருத்துவ மையத்தின் தலைமை கால்நடை மருத்துவர் ஜோசிகா நாவுக்கரசு, கால்நடை மருத்துவத்தில் கருணை மற்றும் நிபுணத்துவத்திற்காக விருதளித்து அங்கீகரிக்கப்பட்டார். “நாங்கள் ஒரு மாதத்திற்கு 2,000 விலங்குகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகளை அளிக்கிறோம். இதில் நாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை முதல் எலும்பு முறிவு சிகிச்சை வரை அனைத்தும் அடங்கும். கால்நடை மருத்துவராக விலங்குகள் நலனில் பணியாற்றுவது மிகவும் கடினமான பணியாகும். இருப்பினும், விலங்குகள் நலம் என்பது ஒரு தனிநபர் அல்லது ஒரு அமைப்பின் பொறுப்பு அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு" என்று டாக்டர் ஜோசிகா கூறினார்.