

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே!-விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே!விம்மி விம்மியிரு
கைத்தலை மேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இரு புண்ணிய பாவமுமே!
என்பது பட்டினத்தார் பாடியது! இதன் முழுப் பொருளையும் தெரிந்து கொள்ளப் படித்தவர்களால் மட்டுமே முடியும்! படிக்காத பாமரனுக்கும் இதனைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா? இலக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவல்லவா?
பார்த்தார் நம் கவிஞர்! ‘பாத காணிக்கை’ என்ற படத்தில் பக்குவமான வாய்ப்பு வந்தது! சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்!
அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இலகுவாக்கினார் பட்டினத்தாரை!
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், பசுவின் பின்னால் மட்டுமே செல்லக் காலம் கணித்த படிக்காத அந்த மாட்டுக்காரப் பையனின் வாயிலும் பட்டினத்தாரைக் கொண்டு சேர்த்தார். மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டும் போதும், திரும்ப வீட்டுக்கு ஓட்டி வரும்போதும் அவன் ரசித்துப் பாடினான், பொருள் பொதிந்த இப்பாடலை!
அன்று! ரேடியோ மட்டுமே கோலோச்சிய காலம் அது! வானொலியில் அந்தப் பேராசிரியை பேசுகிறார். தலைப்போ, ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்!’
‘கவிஞர்கள் பழம் பாடல்களைக் காப்பியடித்தே தங்கள் கவித்துவத்தை வளர்த்துக் கொண்டு, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் சுயமாகச் சிந்தித்து அல்லவா பாடல்களை இயற்ற வேண்டும்? அவ்வாறு செய்வதில்லையே!’ என்றும்,
‘ஆச்சா!போச்சா!’ என்றும்,
‘கவியரசர் கண்ணதாசனும் இதற்கு விதிவிலக்கில்லை!’ என்றும், அவரின் எத்தனை பாடல்கள் பழம் இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறி,
கவிஞரைக் கிழித்துத் தொங்க விடுகிறார்கள். பட்டி தொட்டிகளிலும் அவர்கள் பேச்சு எதிரொலிக்கிறது!
வானொலியில் ஒலிபரப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே போராசிரியை வீட்டு போன் விடாமல் அடிக்கிறது! அத்தனை கால்களும் அவரைப் பாராட்டி!
“அம்மணி! அப்படியே உண்மையைப் போட்டு உடைத்து விட்டீர்கள்! பாராட்டுகள்!” - ஒருவர்
“மேடம்! வணக்கம்! நீங்கள் சொன்ன பிறகுதான் எங்களுக்கும் உண்மை விளங்குகிறது! நன்றி மேடம்!” - இன்னொருவர்
“இவ்வளவு இருக்கிறதா? எங்களுக்குத் தெரியவில்லை அம்மா! நன்றாகக் கவிஞருக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறீர்கள்! பாராட்டுகள் அம்மா”- வேறொருவர்
இப்படிப் பலரும் பாராட்ட, பேராசிரியை உச்சி குளிர்ந்து உட்கார்ந்திருக்கும் நேரத்தில் மற்றொரு கால் வருகிறது!
‘ம்! இவர் என்ன சொல்லிப் பாராட்டி வாழ்த்தப் போகிறாரோ!’ என்ற எதிர்பார்ப்பில் அசால்டாக ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தவர், அசந்து போகிறார்!
“அம்மா வணக்கம்! நான் கண்ணதாசன் பேசுகிறேன்! உங்கள் வானொலி உரையைக் கேட்டேன்! மிக நன்றாக இருந்தது! அருமையாகப் பேசினீர்கள்! பாராட்டுகளும், வாழ்த்துகளும்!”
பேராசிரியையின் கைகளில் ஏனோ சிறு உதறல்! ‘ம்!’ என்று சொல்லக்கூட வாயும், தொண்டையும் ஒத்துழைக்கவில்லை!
கவிஞர் மேலும் தொடர்கிறார்...
“இலக்கியத்தில் உள்ளவற்றின் பொருளை முழுமையாக உணர்ந்து கொள்ள உங்களைப் போன்று மெத்தப் படித்தவர்களாலும், பண்டிதர்களாலும் மட்டுமே முடியும்! இலக்கியம், படித்தோரோடு மட்டுமே நின்று விடுதல் விரும்பத்தக்கது இல்லையே! பாமரனையும் அது சென்றடைவதில் அல்லவா அதன் வெற்றி அமைந்திருக்கிறது! அதனைத்தானே அம்மா நாங்கள் செய்கிறோம்! உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்!”
“நமது திருமணங்கள் அக்கினி சாட்சியுடன், உறவினர்கள் சூழ்ந்திருக்க, மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் வேத மந்திரங்களை ஓதி, கரம் பிடிக்கிறார்கள்!
அந்த மந்திரத்தில் முக்கியமானது - ‘நான் மனமாக இருப்பேன்! நீ வாக்காக இருந்து பேசு!’ என்ற பொருள் தரும் சமஸ்கிருத வாக்கியமாகும்! இதன் பொருள் பெரும்பாலானோர்க்குப் புரிவதில்லை! ஏனோ, எந்திர கதியில் சொல்லி விட்டுச் சென்று விடுகிறார்கள், பொருளைப் புரிந்து கொள்ளாமலே! அதனை யார்தான் புரிய வைப்பது? அது கவிஞர்களின் கடமையல்லவா? அதைத்தானே அம்மா நான் செய்தேன்!”
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்! இது எல்லோருக்கும் புரியுமல்லவா?”
கவிஞர் பேசி முடிக்கும் முன் “ஐயா! தவறு செய்து விட்டேன்!என்னை மன்னித்து விடுங்கள்!” என்று அரற்றிய பேராசிரியை அதன் பின்னர் கூறுகிறார்...
“அதற்குப் பிறகு கவிஞரின் மேல் நான் கொண்ட மதிப்பு பன்மடங்காயிற்று!”
என்று!
அதன் காரணத்தை ஆராய்ந்தால், யாரோ பேசினார்கள் என்றில்லாமல், கனிவாக, அன்பாக, பண்பு நிலை மாறாமல் தன் நிலையை எடுத்துக் கூறிய கவிஞரின் பாரம்பரியப் பண்பே என்கிறார்கள், பின்னர் வந்த விமர்சகர்கள்!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்!
நிலை உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்!
கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள்தானே!
தன் காலத்தைப் பட்டினத்தார் விளக்க, கண்ணதாசன் தன் காலத்தை விளக்கிய மாபெரும் கவிஞர்தானே!