
சங்க காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை தமிழில் தோன்றிய கவிஞர்களில், தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
பல்வேறு பரிமாணங்களைத் தன் வாழ்க்கையில் கொண்ட இந்தக் கவிஞரைச் சரியாகப் புரிந்து கொள்ள, அன்னாரது ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தைக் காண வேண்டும்.
மகாகவி பாரதியாரே கூறி இருக்கிறார் – 'அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும், ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்' என்று.
கவி உள்ளத்தைக் காணாதவருக்குக் கவிஞர் தெரியமாட்டான்; கண்ணதாசனும் தெரியமாட்டார்!
தொட்ட இடமெல்லாம் நல்லதொரு கருத்தைப் புதுவிதமாக பல்லாயிரக் கணக்கானோருக்கு அளித்த கவிஞர் அவர்.
எடுத்துக் காட்டிற்குச் சில கருத்துக்களை அவர் மொழியிலேயே காண்போமா?
காதல் கவிதைகள் ஏன் ஐயா இப்படி...?
காதல் கவிதைகளில் தனியொரு முத்திரையைப் படைத்தவர் கண்ணதாசன்.
அது கொஞ்சம் 'ஓவர்' என்று நினைத்தாரோ என்னவோ ராசிங்கபுரம் க.முருகேசன், கண்ணதாசனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி:
சாமத்து நடப்பை எல்லாம்
சந்தியில் அறியப் பாடி
காமத்துச் சுவையைத் தொட்டு
கவிகளில் எழுதலாமோ?
கள்ளினும் கொடிய காமம்
கருவெனக் கொண்டு மனதைக்
கிள்ளிடும் வண்ணம் எழுதிக்
குவிப்பதில் என்ன லாபம்?
கன்னியர் அழகை எல்லாம்
கவிகளில் புனைந்து பாடி
சின்னவர் மனதை எல்லாம்
சிதைப்பது என்ன ஞாயம்?
துள்ளிவிடும் இளமை வேகம்
தூண்டிடும் கவிகள் வேண்டா!
தெள்ளிய ஓடை போலும்
தேன் கவி சொல்லு கண்ணா!
இதற்கு கவிஞர் அளித்த பதில்:
"ஆண்டவனுக்குச் சொல்கிறேன். இனிமேல் படைக்கும் ஆண் பெண்களை எல்லாம் 'அந்த தன்மை' இல்லாதவர்களாகவே படைப்பாயாக! அந்தத் தன்மை இருக்கும் வரை அவர்களுக்கும் கிளர்ச்சி இருக்கும். எனக்கும் உணர்ச்சி இருக்கும். என்ன செய்ய? எல்லாருக்கும் காமம் உண்டு. அதை நான் தூண்டி விடவில்லை. அந்தப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கிறேன். அவ்வளவு தான்!"
கவிஞரின் காதல் பாடல்களை, அவரது இந்த பதிலில் உள்ள கருத்தைக் கொண்டு புதிய பார்வையில் பார்க்க வேண்டும்! அப்போது கவிஞர் நன்கு மிளிர்வார்.
உலகக் கவிஞன் கண்ணதாசன்:
உலகளாவிய விதத்தில் உயர்ந்த கவிதைகளைப் படைத்த அத்தனை பேரும் அவருக்குத் தெரிந்தவர்களே!
அவர்களின் கவிதா வரிகளைச் செப்பனிட்டு காலத்திற்குத் தக தமிழில் தந்தவர் அவர். எடுத்துக் காட்டிற்கு ஒரு பாடலைப் பார்ப்போம்.
இதோ அவரது வார்த்தைகள் (அர்த்தமுள்ள இந்துமதம் ஆறாம் பாகம்):
'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே - அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்...
- என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
இது ஷேக்ஸ்பியர் வரிகளின் தமிழாக்கம். ரோமியோ - ஜூலியட்டில்
'Sleep Dwell upon Thine Eyes
Peace Thy breast
Would I Were Sleep and Peace
So Sweet to Rest'
தூங்குவது போலும் சாக்காடு; தூங்கி
விழிப்பது போலும் பிறப்பு – என்றான் வள்ளுவன்.
இப்படி ஏராளமான உலகக் கவிஞர்களின் உன்னதக் கருத்துக்களை அவரது பாடல்களில் காணலாம்!
கணவன் – மனைவி உறவு
அற்புதமான கணவன் மனைவி உறவைப் பற்றி அவர் கூறுகிறார் இப்படி (அர்த்தமுள்ள இந்துமதம் ஆறாம் பாகம்):
“பெண்டாட்டி தானே, சொல்லிவிட்டுப் போகிறாள்’ என்றும் ‘கணவன் தானே பேசட்டும்’ என்று விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது. உடல் வலிக்காது. ஊர் சிரிக்காது.
ஒரு படத்தில் நான் ஒரு பாடல் எழுதினேன்:
“நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தாலென்ன நமக்குள்ளே!”
ரசிகர்களின் மனதில் நிலைப்பவர்:
கண்ணதாசன் எழுதினார் இப்படி (எனது சுயசரிதம் - வனவாசம்):
'இன்று நான் தவறாகவே ஒன்றை எழுதி விட்டாலும் அதைத் ‘தவறு’ என ஒப்புக் கொள்ளாமல், புது அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள் ரசிகர்கள்'
இப்படி அவர் கூறியது உண்மைதான்.
பெரிய இடத்துப் பெண் படத்தில் ‘கட்டோடு குழலாட’ பாடலில் 'பச்சரிசி பல் ஆட' என்று பாடியவரை, "இளமங்கைக்குப் பல் எப்படி ஆடும்? கிழவிக்கு அல்லவோ ஆடும்?" என்று கேட்டார் ஒரு ரசிகர். தவறு தான் என்று ஒப்புக் கொண்டார் கவிஞர். ஆனால் கவிஞரை விட்டுக் கொடுக்கவில்லை ரசிகர்கள் – விதவிதமான பொருத்தமான விளக்கங்களைத் தந்தனர். முகத்தோடு சேர்ந்து ஆடின பற்கள் என்பதும் ஒரு விளக்கம்.
தாயில்லா பிள்ளை படத்தில், 'மாமாமரத்து கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம், கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்' என்று பாடலை அமைத்தார் கவிஞர். "மாடத்தில் கூடு என்பதால் தானே அதன் பெயரே மாடப்புறா ஆனது. அது எப்படி மாமரத்து கிளையில் கூடு கட்டும்?" என்று கேட்டார் ஒரு ரசிகர். கவிஞர் திகைப்பதற்குள் ரசிகர் ஒருவர் பதில் அளித்து விட்டார்.
'அந்தக் கதையைப் பாருங்கள். அதற்குத் தக மாடத்தில் வாழ்வதை விட வெளியில் வாழ்வதை அந்த வரியால் கதைக்கு ஏற்ப அழகுறச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர்' என்றாரே பார்க்கலாம் அவர்!
கவிஞர் உட்பட அனைவரும் கப்சிப்!!
ஆரோக்கியமுடன் வாழ ஆசை!
புங்கம்பட்டியைச் சேர்ந்த ரசிகர் இர. இலாபம் சிவசாமி ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி:
‘பொன்னுடல் பிறந்தேன்’ பகுதியில் ‘சாவை மகிழ்ச்சியாக வரவேற்கும் என்னை விட்டு சாகவே விரும்பாத அவரை கொண்டு போய் விட்டார்’ என்று கூறும் தாங்கள், ‘ஶ்ரீ கிருஷ்ண காந்தன் பாமாலைப் பகுதியில்’, ‘கனிவுடைய வயதிலொரு எழுபது கொடுத்தென்னைக் காத்தருள் கிருஷ்ண காந்தா’ என்றும், ‘பதி நினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம் பார்த்தருள் கிருஷ்ண காந்தா’ என்றும் விவரமறியாத எனை பல வயது வாழவிடு விமலனே, கிருஷ்ண காந்தா’ என்றும், முரண்பாடாகக் கூறியிருப்பது ஏன்?
இதற்குக் கவிஞரின் பதில்:
'நான் வயது கேட்கிறேன். ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். ஆனால் மரணம் வந்து விடுமோ என்று அஞ்சுவதில்லை. நான் இறந்து விட நேர்ந்துவிடும் என்று தோன்றும் போது, மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுவேன். சுருங்கச் சொன்னால் ஆரோக்கியமாக நடமாட விரும்புகிறேன். சாவுக்குப் பயப்படவில்லை.'
நான் நிரந்தரமானவன்; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
24-6-1927 அன்று பிறந்த கவிஞர் 17-10-1981 அன்று 54ம் வயதில் மறைந்தார்.
‘கலங்காதிரு மனமே’ என்று தொடங்கிய அவர் பாடல் வாழ்க்கை, ‘கண்ணே கலைமானே’ என்று முடிந்தது.
அவர் பூதவுடல் தான் மறைந்தது. புகழ் உடம்பு காலமெல்லாம் நிலைத்திருக்கும்.
இதற்கும் அவரது பாடல் ஒன்று உண்டு:
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
உண்மை, காலத்தை வென்றவர் அல்லவா கவிஞர் கண்ணதாசன்!!