
கேரளா "கடவுளின் சொந்த நாடு" (God's Own Country) என்று அழைக்கப்படுகிறது. அதன் பசுமையான இயற்கை அழகுகள், காயல் பகுதிகள், செழிப்பான கலாச்சாரம், பாரம்பரிய ஆயுர்வேதம், அற்புதமான திருவிழாக்கள், சுவையான உணவு வகைகள் மற்றும் கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. அதிலும் குறிப்பாக குத்துவிளக்கு என்பது வெறும் விளக்கு மட்டுமல்ல; காலத்தால் அழியாத ஒரு படைப்பு மற்றும் கேரளத்தின் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் சின்னமாகும்.
கேரளாவில் பாரம்பரிய விளக்குகளின் வகைகள்:
நிலவிளக்கு (தரை விளக்கு):
நிலவிளக்கு என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான பித்தளை அல்லது வெண்கலத்தால் ஆன பாரம்பரிய விளக்காகும். இந்த விளக்குகள் கேரளாவின் சின்னமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோவில் சடங்குகள், சுபநிகழ்ச்சிகள், வீட்டு பிரார்த்தனைகளின்போது இந்த நில விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
கோவில்களில் காலையில் முதலில் ஏற்றப்படுவதும், இரவில் கடைசியாக அணைக்கப்படுவதும் இந்த நில விளக்குகள்தான். தெய்வீக இருப்பை குறிக்கும் இவை கருவறையில் வைக்கப்படுகிறது. விஷு பண்டிகையின்போது நிலவிளக்கு விஷு கனி ஏற்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். இது வரும் ஆண்டிற்கான செழிப்பு மற்றும் நம்பிக்கையை குறிக்க பழங்கள், தானியங்கள் மற்றும் பூக்களுடன் ஏற்றப்படுகிறது.
இந்தப் பாரம்பரிய விளக்கு பெரும்பாலும் ரிப்பட் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது. இவை பல்வேறு மையக் கருக்களை கொண்டுள்ளது. குறிப்பாக மயில் வடிவமைப்பு மிகவும் பிரபலமானது. இது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அடிப்படைத் தட்டு (கீழ்பாகம்), மையத் தூண் (கண்டம்) மற்றும் மைய நீளமான கிரீடத்துடன் இணைக்கப்பட்ட வட்ட சுருள் கிணறு (தட்டு). நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் உட்பட பல வகையான நிகழ்வுகளின் தொடக்கத்தில் ஏற்றப்பட்டு ஒரு அலங்காரப் பொருளாகவும் உள்ளது.
தூக்கு விளக்கு (தொங்கும் விளக்கு):
ஒரு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட தொங்கும் விளக்கு. பொதுவாக கோவில்களிலும், பெரிய வீடுகளிலும் கூரைகள் அல்லது கம்பங்களில் தொங்கவிடப் படுகின்றன. கோவில் பாணி குத்து விளக்குகள் பெரியதாகவும், விரிவானதாகவும், பெரும்பாலும் தொங்கும் அல்லது பல திரி வடிவமைப்புகளைக் கொண்டதாக இருக்கும். பித்தளை, வெண்கலம் மற்றும் மண் போன்ற பல்வேறு பொருட்களால் தூக்கு விளக்குகள் செய்யப்படுகின்றன. பல முகங்கள் கொண்ட விளக்குகள் அல்லது சிக்கலான வேலைபாடுகளுடன் கூடிய விளக்குகள் என பல்வேறு வடிவமைப்புகளில் காணப்படுகின்றன.
பொறை விளக்கு:
பொறை விளக்கு பெரும்பாலும் வெண்கலத்தால் செய்யப்படுகின்றன. பாரம்பரிய பூஜை நிகழ்வுகள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்றப்படுகிறது. இவை பல அளவுகளிலும், வெவ்வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றன. இது தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது.
சங்கலவட்டம் விளக்கு:
கேரளக் கோவில்களில் பரவலாக பயன்படுத்தப்படும் விளக்கு இது. வெண்கலத்தால் ஆன இந்த விளக்கின் பின்புறம் நோக்கி ஒரு நீண்ட கைப்பிடியும், எண்ணெயை பிடிக்க நடுவில் ஒரு குழியும், சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு சிறிய கரண்டியும் சங்கலவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பல அடுக்கு விளக்கு:
பல அடுக்குகளைக்கொண்ட பிரம்மாண்டமான மற்றும் விரிவான விளக்கு இது. பண்டிகைகளின் போதும், கோவில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கிலும் பல திரிகள் உண்டு. அற்புதமான காட்சியை உருவாக்கும் இந்த சங்கலவட்டம் எனப்படும் பல அடுக்கு விளக்கு.
தீப ஸ்தம்பம் (விளக்கு கோபுரம்):
கோவில் முற்றங்களில் காணப்படும் இவை பல அடுக்கு விளக்குகளைக் கொண்ட ஒரு உயரமான தூணாகும்.
கைவிளக்கு (ஆரத்தி விளக்கு):
பூஜைகள் மற்றும் ஆரத்தி விழாக்களின்போது பயன்படுத்தப்படும் இந்த சிறிய விளக்கு தெய்வங்களுக்கு முன்பு எளிதாக பிடித்து அசைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
களிமண் விளக்குகள்:
எளிமையான களிமண் விளக்குகள் விஷு மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின்பொழுது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இவை பொதுவாக இயற்கை சாயங்கள் அல்லது வடிவங்களால் அலங்கரிக்கப் படுகின்றன.