
ஆவணி மாதத் திருவோணமன்று அனைத்துக் கேரலைட்சும் வாழுமிடம் எங்கணுமே வண்ணப் பூக்களால் வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு அழைத்திடுவர் மகாபலியையே!
எல்லா இனத்தவரும், அனைத்து மதத்தவரும் ஒன்றுபட்டுக் கொண்டாடும் உயர்வான பண்டிகையிது! பூக்கள் அலங்காரம் பொலிவுடனே நிகழ்வதால் அறுவடைத் திருநாளென்றும் அழைப்பதும் முறை தானே!
வாமணன் உருவினிலே வந்துதித்த திருமாலும் மூன்றடி மண் கேட்க, முத்தாய்ப்பாய் மகாபலியும் ஆகட்டுமென்றே அகமகிழ்ந்து ‘சரி!’ சொல்ல, மூன்றாமடியை முடியிலேற்று பாதாளம் சென்றதாய் பகிர்கிறது வரலாறு!
மக்களின் மீது கொண்ட மகத்தான அன்பினாலே, வரம் பெற்றே மகாபலியும் ஒவ்வோராண்டும் ஓணத்தன்று வீடுகள் தோறும் விசிட் வருகிறார்!
மன்னன்-மக்கள் உறவினை இதை விடப் புனிதப்படுத்திட வேறெதுவுமேயில்லை! பத்து நாட்கள் தொடரும் பண்டிகை!அத்தம், சித்திரா, சுவாதி என்று முதல் மூன்றும் பெயர் பெற்றிட இந்த நாட்களில் இனிய பரிசுகள் கைகள் மாறி கவினுறவைப் பெருக்கிடும்!
நான்காம் நாளாம் நல்ல விசாகத்தில் ஒன்பது சுவைகளில் ஓரறுபத்துநாலு வகைகளில் ஓணசாத்யாவால் ஊரே மணந்திடும்!ஐந்தாம் நாள் அனுஷத்தில் வஞ்சிப் பாட்டுடன் வளமான படகுப்போட்டி!
திருக்கேட்டை திருமூலம் பூராடம் உத்திராடமென்று ஒன்பது நாட்கள் உருண்டே ஓடிட, திருவோண தினத்தன்று திகட்டாத பெருவிழா! பரிசுண்டு, உணவுண்டு படகுப்போட்டியும் உண்டு!எல்லா வயதினரையும் எழுச்சி பெறச் செய்யும் முத்தான விழாவிது! முழுதான பண்டிகையிது!
மக்களை மதித்திடும் மகத்தான மன்னனும், மன்னனை வணங்கிடும் மாண்புடை மக்களும் இருந்த நாடே இந்தியா என்பதை உலகுக்கே உணர்த்திடும் உன்னதத் திருவிழாவிது!
ஆள்வோரும், ஆளப்படுவோரும் இப்படித் தான் இருக்க வேண்டுமென்ற இலக்கணத் திருவிழாவிது! இதனையே பின்பற்றி இவ்வுலகம் நடந்திட்டால் அமைதியும், சமாதானமும் அரங்கேறி உலாவரும்! உலக மக்கள் எல்லாரும் ஒன்று பட்டு வாழ்ந்திடுவர்!