

காகதீய வம்சம் 12-14 ஆம் நூற்றாண்டு வரை இன்றைய தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்த ஒரு சக்திவாய்ந்த தென்னிந்திய தெலுங்கு வம்சமாகும். இவர்களின் ஆட்சி காலத்தில் குண்டூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கோழி முட்டை வடிவ 186 கேரட் வைரம்தான் கோஹினூர் வைரம்.
கி.பி 1323 இல் டெல்லி சுல்தானகத்தின் (முகமது பின் துக்ளக்) படையெடுப்பால், கோகினூர் வைரம் ஆப்கானிஸ்தான் வழி வந்த சுல்தான்கள் வசம் சென்றது .1526 ம் ஆண்டு பாபர் நாமா -இப்ராகிம் லோடியை பானிபட் போரில் வென்றதன் மூலம் கைப்பற்றப்பட்ட கோஹினூர் வைரம். அது பின்னர் ஷாஜஹான் அரியணையை அலங்கரிக்க பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அது அவுரங்கசீப் வசம் சென்றது. கோஹினூர் வைரம் ஒரு சிறிய கோழி முட்டையின் அளவில் இருந்தது. ஒருவேளை அதை விற்றால், அந்தப் பணத்தைக்கொண்டு முழு உலகுக்கும் இரண்டரை நாட்களுக்கு உணவளிக்க முடியும் என்று அப்போது கூறப்பட்டது.என்கிறார் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்ப்.
1530 ம் ஆண்டில் பட்டை தீட்டப்பட்ட கோஹினூர் வைரம் மெகலாயர்கள் கருவூலத்தில் இருந்தது. அதற்குப் பிறகு 1739 ம் ஆண்டில் தில்லியை படையெடுத்த நாதிர்ஷா அதை தந்திரமாக பறித்துச் சென்றார். ஆனால் அவர் பாதி வழியிலேயே படுகொலை செய்யப்பட்டார்.
1739 ம் ஆண்டு ஒரு வழியாக ஈரான் சென்றது கோஹினூர் வைரம். அந்த வைரத்திற்கு 'ஒளி மலை' என பொருள்படும் 'கோஹினூர்' என பெயரிடப்பட்டது அங்குதான். நாதிர்ஷா மரணத்திற்கு பிறகு கோஹினூர் வைரம் அவரது தளபதி அகமது ஷா அபுதாபி வசம் சென்றது. அதற்கு பிறகு ஆப்கானிஸ்தானை ஆண்ட ஷா ஹூகாவிடம் வைரம் 1813 ம் ஆண்டு சிக்கியது. ஆனால், அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பின் அவர் பஞ்சாப்யை ஆண்ட மன்னர் ரஞ்சித் சிங்கிடம் அடைக்கலம் புகுந்தார்.
வைரத்தை வலுக்கட்டாயமாக ரஞ்சித் சிங் வாங்கிக் கொண்டார். அவர் இறந்தவுடன் பஞ்சாப் பகுதியை 1849 ம் ஆண்ட 10 வது துலிப் சிங் வசம் சென்றது கோஹினூர் வைரம். அவர் ரஞ்சித் சிங் மகன். நயவஞ்சகமாக பஞ்சாப் பகுதியை தம்முடன் இணைத்து கொண்ட பிரிட்டிஷ் தளபதி டல் ஹவுசி பிரபு கோகினூர் வைரத்தை பிரிட்டன் உரிமையாக்கிக் கொண்டார்.
1852 ம் ஆண்டு கோகினூர் வைரத்தை டெல்ஹவுசி பிரபு தனது இடுப்பில் கட்டிக்கொண்டு கப்பல் ஏறி பிரிட்டன் வந்தார். அந்தக் கப்பல் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி பிரிட்டனை அடைந்துது. அங்கு அது ஆல்பர்ட் இளவரசர் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே அது விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அப்போதுதான் கோஹினூர் வைரத்தை பட்டை தீட்டும் முடிவு எடுக்கப்பட்டு வைரம் பட்டை தீட்டப்பட்டது. வைரம் 42 சதவீதம் குறைந்து 186 கேரட்டில் இருந்து 105 கேரட் எடைக்கு மாறியது. பின்னர் கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டது.
கோஹினூர் லண்டனைச் சென்றடைந்தபோது, அது கிரிஸ்டல் பேலஸில் பிரிட்டிஷ் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோஹினூர் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியின் வாயில்களுக்கு மக்கள் வந்தபோது, உள்ளே செல்வதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. லண்டனில் இதற்கு முன் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதில்லை என்று தி டைம்ஸ் எழுதியது.
ஒட்டாவா கார்ல்டன் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் டேனியல் கின்ஸ்லே கோஹினூர் வைரத்தை நிர்வகித்த அனைத்து ஆண்களும் துர் மரணம் அடைந்தது உண்மைதான் என்கிறார் தனது ஆய்வின் மூலம். அதனால்தான் அதனை விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அவர் தம் கிரீடத்தில் அணிய வழங்கினர் என்கிறார்.
தற்போது அது 'டவர் ஆஃப் லண்டன் மியூசியத்தில் உள்ளது. கோஹினூர் வைரம் இந்தியாவில் கண்டெடுக்கப் பட்டதால் இந்தியாவும், ஈரான் மன்னர் நாதிர்ஷா அதை பல ஆண்டுகள் வைத்திருந்ததால் ஈரானும், அன்றைய பாகிஸ்தான் லாகூரில் ஆட்சி நடத்திய சீக்கிய மன்னர் ரன்ஜித்சிங் வசம் வைரம் பல ஆண்டுகள் இருந்ததால் பாகிஸ்தானும். ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் வசம் சில காலம் இருந்ததால் ஆப்கானிஸ்தானும் கோஹினூர் வைரத்தை தனக்கே சொந்தம் என்று இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் என 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் பிரிட்டன் யாருக்கும் கொடுக்க முடியாது என்று கூறி வருகிறது.