
இன்றும் சில வீடுகளில் காலையில் எழுந்து கோலமிட்டு; அதைப் பார்த்த பிறகு வெளியில் வரும் பெரியவர்கள் இருக்கிறார்கள். கோலக் கலைக்கு அவ்வளவு சிறப்பையும், மதிப்பையும் ஏன் கொடுக்கிறார்கள் ? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
தங்கப்பொடி நுணுக்கி
தரையில கோலமிட்டா-
தரையில போறவங்க
தங்கப்பொடி யாருதுண்ணா தடமோ சர்க்காருது
தங்கப்பொடி எங்களது!
என்று கோலத்தை சிறப்பித்து பாடும் நாட்டுப்புறப் பாட்டு ஒன்று உண்டு. சினிமாவிலும்,
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
காலாலே நிலத்திலே கோலம் போட்டு காட்டுறா
உன் வாசலில் என்னை கோலமிடு இல்லை என்றால் ஒரு சாபமிடு
போன்ற பாட்டுகளும் கோலத்தின் சிறப்பை கூறுவதாக உள்ளன. தமிழகத்தில் கோலக்கலை மிக வளர்ந்துள்ள நிலையில், அதைப் பற்றிய சிந்தனையும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
கோலக் கலை என்பது புள்ளியையும், கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கலை. நம் முன்னோர்கள் கோலங்களை இடம், பொருள், அமைப்பு, கலை, மந்திரம், விழா ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி உள்ளார்கள் .
இட அடிப்படையில்: அரங்கக் கோலம், மணல் கோலம், நீர்க்கோலம், அனல் கோலம் என்றும்,
பொருள் அடிப்படையில்: மாக்கோலம், மலர்க் கோலம், தானியக் கோலம், சுண்ணாம்புக் கோலம், வண்ணக் கோலம், செம்மண் கோலம், விபூதிக்கோலம், உப்புக் கோலம் எனவும் வகைப்படுத்தினார்கள்.
அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தபடி வாசலில், பூசை அறையில், திண்ணையில் ,முற்றத்தில், அடுப்பு ஓரங்களில், திருமண மேடைகளில் கோலம் வரைந்தார்கள்.
அமைப்பு: கோட்டுக் கோலம், சதுரக் கோலம் ,கட்டக் கோலம், நேர்க்கோட்டுக் கோலம், குறியீட்டுக் கோலம், உருவக் கோலம் என்று அமைப்பை அடிப்படையாகக் கொண்ட கோலங்களும் இட்டனர்.
கலை: சிற்பக் கோலம், இசை கோலம் என்று கலை அடிப்படையாகக் கொண்ட கோலங்களையும், முக்கோணம், அருங்கோணம், எண்கோணம் போன்ற மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கோலங்களையும் வரைந்தார்கள்.
அவரவர் இறை நம்பிக்கைக்கு ஏற்றபடி நவக்கிரகக் கோலம், மனைக்கோலம், கண்ணன் கோலம், சித்ரகுப்த கோலம், நட்சத்திரக் கோலம், லிங்கக் கோலம், வரலக்ஷ்மி நோன்புக் கோலம், சங்குக் கோலம், சேத்திரக் கோலம் போன்றவற்றையும் வரைந்தார்கள்.
விழா: அவரவர் கொண்டாடும் விழாக்களை அடிப்படையாகக் கொண்டு பொங்கல் கோலம், தீபாவளி, மார்கழி கோலம், கார்த்திகை கோலம், தீபக் கோலம், தேர்க் கோலம், கிருஷ்ணர் பாதக்கோலம், சூரியக் கோலம் போன்றவற்றை கோலமாக வரைந்தனர்.
இறை நம்பிக்கையில் மூழ்கி முத்தடுத்தவர்கள் ஸ்ரீ சக்கரம், இருதய கமலம், முத்தாரத்தி, ஐஸ்வர்ய கோலம், வாகனக் கோலம், தெய்வ உருவக் கோலம் போன்ற கோலங்களை பூஜை அறையில் வரைந்து வழிபட்டார்கள்.
மங்கள காரியத்திற்கும் அமங்கள காரியத்திற்கும் வெவ்வேறு கோலங்களை பயன்படுத்தினார்கள். கோலத்தில் மிகப்பெரிய பிரபலமான கோலங்கள் இரண்டு. ஒன்று அந்தாதிக்கோலம் மற்றொன்று சகஸ்தர தளம்.
அதிக புள்ளி வைத்து வரையப்படும் இதயக் கமலம் சகஸ்தரதளம் எனப்படுகிறது.
நேர் புள்ளி வரிசையில் நூறாயிரம் புள்ளிகள் அமைத்து அதனை ஓர் இடத்தில் தொடங்கி எல்லா புள்ளிகளையும் சுற்றி வளைத்து தொடங்கிய இடத்திலேயே வந்து முடியும் கோலம் அந்தாதி கோலம் எனப்படுகிறது. இந்த கோலத்தை நான்கு பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அதன் வடிவம் மாறாது.
நன்மைகள்:
கோலங்களை வரையும் போது மனம் அங்கும் எங்கும் அலைபாயாமல் ஒரே சிந்தனையோடு உள்ளது. அதனால் மனக்கட்டுப்பாடும், மன ஒருமையும் அதிகரிக்கிறது. அவை சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கிறது.
புள்ளிக் கோலங்கள் கணித அறிவை வளர்த்தெடுத்து புத்தியை கூர்மையாக்கும் திறன் கொண்டவை. கோலம் வரையும் போது பெரும்பாலும் முதுகு வளைந்து நெளிந்து உட்கார்ந்தது தான் போட முடியும். அந்நிலையானது ஜீரண மண்டல மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வேலை செய்ய பெரிதும் உதவி செய்கிறது.
கோடுகள், குறுக்குக் கோடுகள், வளைவுகள் கொண்ட வடிவ கணிதக் கோலங்கள் போடும்போது விரல் நடுக்கமும், நரம்பு தளர்ச்சியும் நீங்குகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் வளர்கிறது. படைக்கும் ஆற்றலையும், கற்பனை சக்தியையும் கோலங்கள் அதிகரிக்கின்றன. இவ்வாறு நம் வாழ்வியலோடு ஒட்டி பிறந்த கலையாக கோலம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் காலையில் எழுந்ததும் கோலமிடு என்கிறார்கள் பெரியவர்கள்.