ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊழலற்ற ஜனநாயகம்! சோழர்களின் குடவோலை ரகசியங்கள் என்ன?

ஏழு தலைமுறைக்கு தடை! கையூட்டு, வாரிசு அரசியலை வேரோடு அழித்த சோழர் தேர்தல் விதிகள். நேர்மை, ஒழுக்கம், கடுமையான விதிகள்—நவீன தேர்தலுக்கு சவால் விடும் சோழர் கால நிர்வாகம்.
சோழர்கால தேர்தல் - குடவோலை முறை
kudavolai - குடவோலை முறை
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குடவோலை தேர்தல் மூலம் ஜனநாயகத்தின் மாண்பினை உலகிற்கு உணர்த்தியவர்கள் சோழர்கள். நவீன தேர்தல் முறையை விட சிறப்பானதாகவும் வேட்பாளர்கள் நேர்மையுடன் பொதுநலம் கொண்டவராகவும் , தன்னலம் இல்லாத வராகவும் ஊழல் செய்யாதவராகவும் இருக்கும் வகையில் ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

கிபி 9 -ஆம் நூற்றாண்டு முதல் 16 - ஆம் நூற்றாண்டு வரை குடவோலை தேர்தல் முறை செயல்பாட்டில் இருந்தது. இதற்கு ஆதாரமாக முதலாம் பராந்தக சோழனின் உத்திரமேரூர் மற்றும் தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கல்வெட்டுகள் உள்ளன. உலக வரலாற்றில் தேர்தல் நடைமுறையை முதலில் கொண்டு வந்தவராக பராந்தக சோழனே அறியப்பட்டுள்ளார். குடவோலை தேர்தல் முறை இன்றைய தேர்தல் ஜனநாயக முறைக்கு முன்னோடியாக இருந்தது. இம்முறையில் கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சோழர் கால குடவோலை முறை தேர்தல்:

இந்த முறையில் ஒரு ஊரில் தகுதியுடையவர் 30 லிருந்து 40 பேர் வரை இருக்கலாம். அவர்களின் பெயரை ஒரு ஓலையில் எழுதி , ஊரார் அனைவரையும் முன்னிலையில் ஒரு குடத்தில் இடுவார்கள். அதில் ஒரு ஓலையை ஏதேனும் ஒரு சிறுவனை விட்டு எடுக்க சொல்வார்கள். அந்த சிறுவன் எடுக்கும் ஓலையில் யார் பெயர் இருக்கிறதோ? அவரே வெற்றி பெற்றவராவார். அவர் 320 நாட்கள் வரை அந்த ஊர் சபைக்காக நிர்வாகம் செய்யவேண்டும்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்தது ஊர் சபை. இந்த சபையில் உள்ளவர்கள் சிறு குழுக்களாக வாரியம் என்ற பெயரில் பிரிந்து உள்ளூர் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்றவற்றின் தூர்வாரும் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் சபையினர் வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்பு சொல்லவும், தண்டனை கொடுக்கவும் அதிகாரம் கொண்டிருந்தனர்.

குடவோலை தேர்தலில் நிற்கத் தகுதிகள் :

1. ஒரு ஊர் 30 குடும்பங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் , அந்த குடும்பத்திலிருந்து ஏதேனும் ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. தேர்தலில் நிற்பவருக்கு கால் வேலி நிலமாவது சொந்தமாக இருக்கவேண்டும்.

3. புறம்போக்கு நிலத்திலோ, பிறர் இடத்திலோ வீடு கட்டி இருக்கக் கூடாது. சொந்த இடத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

4. 35 வயது நிரம்பியவராகவும் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

5. குறிப்பிட்ட அளவு கல்வி தகுதி பெற்றிருக்கவேண்டும்.

6. செயல்களை செய்வதில் திறமை மிகுந்தவராக இருக்க வேண்டும். இதை 'காரியத்தில் நிபுணன் ' என்று கல்வெட்டு கூறுகிறது.

7. ஒழுக்கம் மிகவும் முக்கியம் , ஒழுங்கீனமாக இருப்பவருக்கு தகுதியில்லை.

8. நல்ல மனம் கொண்டவராகவும் , நேர்மையான வழியில் சம்பாதிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

9. ஒருமுறை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் , மீண்டும் போட்டியிட முடியாது.

10. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் 3 முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்படாமலும் இருக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதிகள் வேட்பாளரின் நல்ல மனதையும் , நேர்மையையும் , ஒழுக்கத்தையும் முக்கியமாக கருதுகிறது. அதேவேளை தொடர்ச்சியாக ஒரே நபரை தேர்ந்தெடுக்காமல் இருப்பதால் ஊழல் செய்யும் வாய்ப்புகள் குறைகிறது.

மராமரத்து பணிகள் - குடவோலை முறை
கிராம சபை பணிகள் - குடவோலை முறை

குடவோலை தேர்தலில் போட்டியிட யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை?

1. ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரியாக கணக்கு காட்டாவிட்டால் அவர் எப்போதும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் மட்டுமல்லாமல் அவரது மகன், பெயரன் , சகோதரன் , சகோதர சகோதரியின் மகன்கள் , மாமன்கள் , மச்சான்கள், மாப்பிள்ளைகளள, பெரியப்பா , சித்தப்பாக்கள் , திருமண சம்பந்தம் செய்து கொண்டவர்கள் , தாய் வழி , தந்தை வழி சொந்தங்கள் என அவரது உறவினர்கள் கூட தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டது.

2. கள் குடிப்பவன் , பிறன்மனை அபகரித்தவன், பிறர் பொருள் திருடியவன், பேசி ஏமாற்றுபவர்கள், சாகசம் (மோசடி) செய்பவர்கள் ஆகியோரும் தேர்தலில் நிற்க தடை செய்யப்பட்டுள்ளனர்.

3. முக்கியமாக கையூட்டு பெற்றவர்கள், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் ஏழு தலைமுறை குடும்பத்தினரும் தேர்தலில் நிற்க முடியாது.

4. ஊரில் பிரச்னைகளை செய்து, மக்களுக்கு தொல்லை தரும் 'கிராம கண்டகன் ' எனப்படும் உள்ளூர் போக்கிரிகளும் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள் ஆவர்.

இன்றைய காலத்தில் தேர்தலில் ஒருவர் போட்டியிட 18 வயது நிரம்பி இருந்தாலே தகுதி பெற்றவர்கள் ஆகி விடுகின்றனர். அவர்களின் குற்றப் பின்னணி , நேர்மை , தகுதி போன்றவற்றை சரியான முறையில் சரிபார்ப்பதும் இல்லை. உறுதியான தகுதி விதிகள் இல்லாததால் வாரிசு அரசியல் நடைமுறையும் , தண்டனை பெற்றவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெல்வதும் , நிர்வாகத்தில் ஊழலும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.