குடுகுடுப்பைக்காரர்கள் யார்? அவர்கள் சொல்வது எப்படி பலிக்கிறது? இதன் பின்னால் இருக்கும் மர்மம்!

kudukuduppai karan
kudukuduppai karan
Published on

நம் பாட்டி, தாத்தா காலத்தில் நடுநிசியில் கேட்கும் குடுகுடுப்பைச் சப்தம் பலருக்கும் கிலியைத் தரும். காரணம், அவர்கள் சொல்வது நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை. கிராமங்களில் இன்றும் வலம் வரும் இவர்கள் நகரங்களிலும் அவ்வப்போது தென்படுகிறார்கள். பல வண்ண உடைகள் அணிந்து முகத்தில் மஞ்சள், குங்குமத்தை பெரிய பொட்டுக்களாக வரைந்து கைகளில் உடுக்கை ஏந்தி, ‘நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குது …’ என்று சத்தமாக பாட்டுப் பாடி இவர்கள் வீதியில் வரும்போது குழந்தைகள் பயந்து ஒளிந்து கொள்வார்கள்.

இந்த குடுகுடுப்பைக்காரர்கள் யார்? அவர்கள் சொல்வது எப்படி பலிக்கிறது என்பதற்கு சுவாரஸ்யமான புராண வரலாறு இருப்பதாக சொல்கிறார்கள். ஆதி காலத்தில் பூமியைப் படைத்த ஈசுவரன் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்ன தொழிலைச் செய் என்று கூறிப் படியளக்க, அந்த நேரம் ஒரு ஆள் மட்டும் தூங்கிவிட்டானாம்.

பின்னர் விழித்தெழுந்த அவன், ஈசுவரனிடம் சென்று தனக்கு ஏதாவது தொழில் தருமாறு கேட்டான் என்றும், எல்லாத் தொழில்களும் ஏற்கெனவே பங்கிடப்பட்டுப் பிரித்துக் கொடுத்து விட்டமையால் என்ன செய்வது என யோசித்த  ஈசுவரன், தனது கையில் வைத்திருந்த சித்துடுக்கையையும் சீங்குழலையும் அவனிடம் கொடுத்து, ‘நீ சொல்வது அஞ்சுக்கு ரெண்டு பலிக்கும். இவற்றை வைத்துப் பிழைத்துக்கொள்’ என்று கூறினாராம். அப்போதிருந்து அந்த மனிதனின் குலத்தோன்றல் வழி வந்த இவர்கள் பிறருக்கு குறி சொல்லிக் கொண்டு குடுகுடுப்பைக்காரர்களாக வாழ்வதாக இவர்களே கூறுகின்றனர்.

இரவுகளில் குடுகுடுப்பையை அடித்துக்கொண்டு குறி சொல்லிக் கொண்டு செல்பவர்களை, ‘சாமக்கோடாங்கி’ என்பர். மறுநாள் காலை வீடுவீடாகச் சென்று குறி சொல்லி பணம் மற்றும் அரிசியை வாங்குவர். பெண்களும் பகல் நேரங்களில் ஏடு போட்டு, கைரேகை பார்த்து குறி சொல்கின்றனர்.

முன்பெல்லாம் குடுகுடுப்பைக்காரர்கள் தங்களைப் பார்த்து குரைக்கும் நாய்களின் வாயைக்கட்ட சுடுகாட்டிலிருந்து இரவு கிளம்பும் போது தாங்கள் அணிந்திருக்கும் கம்பளியில் ஒரு முடிச்சு போடுவார்களாம். பிறகு மறுநாள் காலையில்தான் அதை அவிழ்ப்பார்களாம். இதனால் நாய்கள் குரைக்காதாம். இப்போது அப்படி முடிச்சு போடுவதும் கிடையாது. சுடுகாட்டுக்குப் போய் வரும் சாமக் கோடங்கிகளும் குறைவு என்கின்றனர். இப்படி இவர்களைப் பற்றிய நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.

இதையும் படியுங்கள்:
மைசூர் தசரா: தங்க அம்பாரியை சுமக்கும் யானையும் அதன் பெருமைகளும்!
kudukuduppai karan

இன்றைய தலைமுறையினர் குடுகுடுப்பைத் தொழிலை விரும்பாமல் கல்வி பயின்று வேறு பணிகளுக்குச் செல்ல விரும்புவது ஆரோக்கியமான விஷயம். ஆனாலும் இன்னும் இத்தொழிலையே செய்து வரும் சிலர் கிராமம் மற்றும் நகரங்களில் குறி சொல்லியும் ஆசிகள் தந்தும் பிழைத்து வருவதை அவ்வப்போது காண முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com