மைசூர் தசரா விழா, பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழாவாகும். மைசூர் தசரா திருவிழா, நவராத்திரி சமயத்தில் பத்து நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.
மைசூர் தசரா விழாவின் இறுதி நாளன்று தங்க அம்பாரி சுமக்கும் யானை மற்றும் ஊர்வலம் வரும் யானைகளின் விபரங்கள் மிகவும் சுவாரசியமானவைகள்.
மிகவும் கோலகலமாக கொண்டாடப்படும் தசரா ஊர்வலத்தில், யானைகள் முக்கிய இடம்பிடித்துள்ளன. முன்னணியில் கம்பீர நடை போட்டு வரும் யானை, சாமுண்டேஸ்வரி தேவியுடன், தங்க அம்பாரியையும் சுமந்து வரும். முழுக்க - முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அம்பாரி, 750 கிலோகிராம் எடை கொண்டது.
தசரா பண்டிகைக்காக வருகின்ற யானைகள், விழா தொடங்குவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே மைசூர் நகருக்கு குழுவாக வந்து, தங்கள் அணிவகுப்புக்கான பிரத்தியேகப் பயிற்சியை மேற்கொள்கின்றன.
யானைகளுடன் அந்தந்த காவலர்கள் அல்லது யானைப்பாகர்கள் இருப்பார்கள். யானைகள் வழக்கமாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு, நாகர்ஹோளே தேசிய பூங்காவிலிருந்து மைசூர் வரை 70 கிலோமீட்டர் தூரம் நடந்து வருகின்றன.
தசரா யானைகள், வனப்பகுதியில் இருந்து அன்சூரு தாலுகாவில் உள்ள வீராண ஹோசஹள்ளி வனச் சோதனைச் சாவடிக்கு பகுதி-பகுதியாக கொண்டு வரப்படும். ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த யானைகள் வருகையில், மாவட்ட அமைச்சர், மைசூரில் இருந்து ஏராளமான அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் யானைகளை உற்சாகமாக வரவேற்கின்றனர்.
தசரா யானைகள், கெத்தா நடவடிக்கை மூலம் யானைப் பயிற்சியாளர்களால் பிடிக்கப்படுவது வழக்கம். உடையார் ஆட்சியின் போது, இவ்வாறு பிடிபட்ட யானைகள் வலிமை, ஆளுமை மற்றும் பண்புக்காக திறந்தவெளியில் பரிசோதிக்கப்பட்டன.
யானைகளின் நடையழகு, மயக்கும் பலவீனங்கள், முக கவர்ச்சி ஆகியவை தேர்வுக்குக் கருதப்பட்ட சில காரணிகளாகும். தேர்வு செய்யப்பட்ட யானைகளுக்கு திருவிழாவிற்கான பயிற்சி அளிக்கப்படுகையில், ராஜாவே பயிற்சியை மேற்பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. சில சமயங்களில் கைவிடப்பட்ட இளம் யானைகளுக்கும் தசரா விழாவில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
தசரா யானைகளுக்கு கன்னடத்தில் பெயரிடப்பட்டுள்ளன என்றாலும், இந்துக் கடவுள்கள் மற்றும் வரலாற்று நபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. துரோணர் மற்றும் பலராமர் பெயரைக் கொண்ட யானைகள் அநேக ஆண்டுகள் தங்க அம்பாரியில் இருக்கும் சாமுண்டேசுவரி தேவியின் சிலையை சுமந்தனர்.
1998 ஆம் ஆண்டு நாகர்ஹோளே தேசியப் பூங்காவில், எதிர்பாராத விதமாக துரோணர் யானைக்கு மின்சாரம் தாக்கியதை அடுத்து பலராமர் யானை அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு பலராமர் யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
பலராமன் யானை, தங்க அம்பாரியை 19 க்கும் மேற்பட்ட தசராத் திருவிழாவில் சுமந்த பெருமையைக் கொண்டதாகும். பின்னர், அர்ச்சுனன் யானை, அக்டோபர் 24, 2012 அன்று மைசூரில் நடந்த தசரா விழாவில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தின் போது, பலராமன் யானைக்குப் பதிலாக தங்க அம்பாரியைச் சுமந்து சென்றது. இந்நிகழ்ச்சியில் பரதா, காந்தி, காயத்திரி, கோகிலா, ஸ்ரீராமன், அபிமன்யு, கஜேந்திரா, பிலிகிரிரங்கா, விக்ரம், வரலட்சுமி, சரோஜினி ஆகிய யானைகள் பங்கேற்றன. 2020 ஆம் ஆண்டு முதல் அபிமன்யு யானை, தங்க அம்பாரியைச் சுமக்கின்றது.
ஆண்டு முழுவதும் யானைகளின் தங்குமிடம், அவைகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் சுற்றியுள்ள தேசிய பூங்காக்கள் ஆகும். துபாரே, ஹெப்பல்லா, மூர்கல், கல்லல்லா, நாகரஹோளே, வீரனஹோசஹள்ளி, மெட்டிகுப்பே, சுங்கடகட்டே, பந்திப்பூர், மூலேஹோல், மற்றும் பீமேஸ்வரி ஆகிய இடங்களில் உள்ள பிரத்யேக முகாம்களில், 70 பழக்கப்பட்ட யானைகள் உள்ளன. சுமார் 240 யானைப்பாகன்கள் மற்றும் காவடிகள் இந்த யானைகளின் தேவைகளை கவனித்து அவற்றுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்கின்றனர். தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஏராளம்.
தங்க அம்பாரி தகவல்கள்
தங்க அம்பாரி, யானைத் தந்தங்கள், சந்தனக் கட்டைகள், வைரம், ரத்தினம், தங்கம், வெள்ளி ஆகியவைகளால் செய்யப்பட்டதாகும். தங்க அம்பாரி, பாரம்பரிய அலங்காரமான இருக்கை. மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வந்தபின், தசரா விழாவில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிம்மாசனமாக விளங்குகிறது.
தங்க அம்பாரியின் நான்கு புறங்களிலும், மூன்று செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. இது கிரீடத்தை ஒத்த விதானத்தால் மூடப்பட்டு, அதன் மீது ஐந்து புனிதக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. இருக்கை வெள்ளியினால் ஆனது. அழகிய வடிவமைப்பைக் கொண்ட தங்க அம்பாரி, தசரா அன்று வெளிக்கொணரப்படும்.
தங்க அம்பாரியின் மீது, மகிஷாசுரனை வென்று, வெற்றி வாகை சூடிய சாமுண்டேஸ்வரி தேவி கம்பீரமாக அமர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாகும்.