
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாங்காங்கை சேர்ந்த கேசிங் லுங் என்பவர் 'தி மான்ஸ்டர்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் வித்தியாசமான முயல் போன்ற காதுகளைக் கொண்ட லபுபு என்ற கதாப்பாத்திரம் உலகளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
லபுபு உருண்டை கண்களும், புசுபுசு உடலும், பெரிய காதுகளும் கொண்டு, சிரித்த முகத்துடன் இருக்கும் பொம்மையாகும். இது குறும்புத்தனம் செய்யக்கூடிய இளகிய மனம் உடையதாகும். லபுபு பெண் கதாபாத்திரம் என்று ரசிகர்களால் சொல்லப்படுகிறது.
இந்த கதாபாத்திரத்தைக் கொண்டு சீனாவை சேர்ந்த வாங் நிங் என்பவர் Pop mart என்ற பொம்மை தயாரிக்கும் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த பொம்மையை அறிமுகப்படுத்தினார். லபுபு பொம்மை இணையத்தில் மிகவும் பிரபலமானது. இது இளம் தலைமுறையிடம் அதிக வரவேற்பை பெற்றது.
இந்த பொம்மையை வாங்க உலகம் முழுவதும் மக்கள் போட்டி போடும் அளவிற்கு விற்பனை தாறுமாறாக இருந்தது. பிரபல பாடகியான ரிஹானா, பிளேக் பிங்க் லிசா போன்றவர்களும் இந்த லபுபு பொம்மையின் ரசிகர்களாக இதை பயன்படுத்துகின்றனர். இதுவும் இந்த பொம்மை உலகளவில் பிரபலமடைய ஒரு முக்கிய காரணமாகும்.
இதனால் அமேரிக்கா மற்றும் சீனாவில் இந்த பொம்மையை வாங்க மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர். இதனால் வாங் நிங் ஒரே நாளில் 13,700 கோடி சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வாங் நிங்கின் சொத்து மதிப்பு 1.54 லட்சம் கோடி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இதன் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம், Blind box விற்பனை முறையாகும். இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த நிறத்திலான லபுபு பொம்மை வந்திருக்கிறது என்பது தெரியாது. அந்த பாக்ஸை திறந்துப் பார்க்கும் போது அது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு சீரிஸில் வரும் பொம்மைகளை சேகரிப்பதற்காக நிறைய பொம்மைகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். 'Secret' என்னும் லபுபு கிடைப்பது அரிது என்பதால் அதை வாங்குவவற்கான போட்டியே மக்களிடத்தில் அதிகமாக இருக்கிறது.
பிரபலங்கள் பயன்படுத்துவதால் மக்கள் வாங்க விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், சோஸியல் மீடியாவான டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இந்த பொம்மையை அதிகமாக ஹைப் செய்ததும் இது பிரபலமடைய காரணமாகும். இது தற்போது ஃபேஷன் டிரெண்டாக மாறிவிட்டது. பர்ஸ், போன், உடைகளில் இதை அணிந்துக் கொள்வதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.