

2017 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து விண்வெளி வீரர் ஒருவர் அனுப்பிய புகைப்படத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தீவுகள் டெக் (Dek) மற்றும் டாகா (Daga).
எத்தியோப்பியா நாட்டில், பாசிகள் நிறைந்து பால்பச்சை நிறத்தில் காணப்படும் டானா (Tana) என்ற ஏரியின் நடுவே அமைந்துள்ளன இந்த தீவுகள். மடாலயங்கள், மதம் சார்ந்த திருச்சின்னங்கள், பழங்கால பேரரசர்களின் எச்சமிச்சப் படிவுகள் போன்றவற்றால் நிறைந்துள்ளன இத்தீவுகள்.
டானா ஏரி சுமார் 1,200 சதுர மைல் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரி யுனெஸ்கோவின் உயிர்க்கோளக் காப்பகப் (Biosphere reserve) பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பியன் ஹைலாண்டில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,800 அடி உயரத்தில் அமைந்துள்ள டானா ஏரியின் ஆழம் சுமார் 50 அடியாகும்.
சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உண்டான எரிமலை வெடிப்பின் காரணமாய் உற்பத்தியான, 900 மைல் நீளமான ப்ளூ நைல் உள்ளிட்ட பல நதிகளின் கொடையினால் உருவானதே இந்த ஏரி என கூறப்படுகிறது.
இந்த இரண்டு தீவுகளில், அளவில் பெரியது டெக். சுமார் 4.5 மைல் நீளம் கொண்ட இத்தீவில் 5,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். டாகா தீவின் அகலம் சுமார் ஒரு மைல் அளவே உள்ளது. மேலும் இங்கே நிரந்தரமாக குடியிருப்போர் எவருமில்லை எனத் தெரிகிறது. எரிமலை வெடிப்பின் மூலம் வெளிவந்த வளம் மிக்க மண் மற்றும் அதிகளவு மழையின் காரணமாக டெக் தீவில் விவசாயத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
மக்காச் சோளம், சிறு தானிய வகைகள், காபி மற்றும் மாம்பழங்கள் இங்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த தீவுகளில் குறைந்தபட்சம் ஒரு தேவாலயம் அல்லது துறவிகள் வாழ்ந்து வந்த மடாலயங்கள் இருந்திருக்கக்கூடும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
மதம் சார்ந்த கலாச்சாரங்கள் கொண்ட இத்தீவுகளில், போர்க் காலங்களில் ஏற்பட்ட அழிவுகளைத் தாண்டி எஞ்சி நிற்கும் புத்த விகாரம், துறவி மடம் போன்ற பழைய நினைவுச் சின்னங்கள் எத்தியோப்பியாவின் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
டெக் தீவில் நினைவுச் சின்னமாக நிற்கும், 18 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நார்கா ஸெலஸ்ஸி (Narga Selassie) என்ற தேவாலயத்தில் எத்தியோப்பியாவின் வரலாற்றை கூறும் சித்திரங்கள் பிரமிப்பூட்டும் வகையில் வரையப்பட்டுள்ளன.
வெவ்வேறு காலங்களில் (1270-1730) எத்தியோப்பியாவை ஆண்டு வந்த ஐந்து பேரரசர்களின் உடல்கள் மம்மியாக்கப்பட்டு (Mummy), டாகா எஸ்டிபனோஸ் பகுதியில் கண்ணாடிப் பேழைகளில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக, தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அருகில் அவர்களது கிரீடம் மற்றும் அவர்கள் காலத்து கலைப்பொருட்களும் காணப்படுவதாக 'Lake Tana Biosphere Reserve' website கூறுகிறது.
விதிமுறைப்படி, இத்தீவுகளையும் இங்குள்ள நினைவுச் சின்னங்களையும் பார்வையிட பெண்களுக்கு அனுமதி இல்லை. 'No Female' விதிப்படி அங்கு விலங்குகளில் கூட பெண் இனத்தை வளர்ப்பதற்கு தடை உள்ளது.