
தொழில்நுட்ப வசதிகள் அதிகம் நிறைந்த இன்றைய உலகில், எதுவும் சாத்தியம் என்ற நிலை உருவாகி விட்டது. விஞ்ஞானிகள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், தற்போது மண்டை ஓட்டை மட்டுமே பயன்படுத்தி ஒருவருடைய முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை இங்கிலாந்து விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அதுவும் கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டை ஓட்டை வைத்துக் கொண்டு முகத்தை வடிவமைத்தது உண்மையிலேயே பாராட்டத் தகுந்த விஷயம் தான்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கெண்டல் எனும் பகுதியில் நீர் மேலாண்மைப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் ஒருசில எலும்புக் கூடுகள் கிடைத்தன. அதிகாரிகள் இந்த எலும்புக் கூடுகளைத் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்தனர். எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்ததில் அவை சுமார் 900 ஆண்டுகள் பழமையானது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவை ஒரு பெண்ணின் எலும்புக் கூடுகள் என்பதும் கண்டறியப்பட்டது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் பெண்ணின் எலும்புக் கூடுகள் மறு கட்டமைப்புக்கு ஏற்றவையாக இருந்தது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
900 ஆண்டுகளைக் கடந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடுகள் இத்தனை ஆண்டுகளாய் சிதைவடையாமல் இருந்ததே மிகப் பெரிய ஆச்சரியம். இதனால் இந்த எலும்புக் கூட்டுக்கு சொந்தமான பெண் எப்படி இருப்பார் என்பதை வெளிக் கொண்டு வர அவரது முக அமைப்பை உருவாக்க லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நினைத்தனர். இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், தற்போது அந்தப் பெண்ணின் முகத்தை வடிவமைத்து விட்டனர். விஞ்ஞான உலகில் இதுவொரு மிகப்பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.
தொழில்நுட்ப உதவியின் மூலம் 900 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் முகத்தை வடிவமைத்து இருப்பதன் மூலம் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன. எங்கிருந்து எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதோ, அதே இடமான கெண்டல் தேவாலயததிலேயே தற்போது இந்தப் பெண்ணின் முகத் தோற்றம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பழமையான எலும்புக் கூடுகள் கிடைத்தால், அவற்றைக் கொண்டு இன்னும் பல முயற்சிகளை விஞ்ஞானிகள் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.