லம்பாடி நடனம்: வண்ணமயமான உடைகளும்... மண்ணின் மணமும்!

lambadi-folk-dance
lambadi-folk-dance
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ம்பாடி அல்லது லம்பானி நடனம் (Lambadi folk dance) என்பது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள பஞ்சாரா (Banjara) பழங்குடியினரால் ஆடப்படும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும். ராஜஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து தென்னிந்தியாவில் குடியேறிய பஞ்சாரா பழங்குடியினர் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறார்கள்.

இவர்கள் ஆடும் லம்பானி நடனமானது நல்ல விளைச்சலை வேண்டி, முக்கியமாக பெண்களால் ஆடப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா கலாச்சாரத்தின் கலவையான இந்த நடனம், துடிப்பான உடைகள் மற்றும் பின்தங்கிய பாணிகளுடன், விவசாயம், விதைப்பு, அறுவடை மற்றும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் அமைகிறது.

தெலுங்கானாவில் பல நாட்டுப்புற நடனங்கள் தோன்றின. பெரியதோ சிறியதோ, ஏறக்குறைய ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கே உரிய கலாச்சாரம் உண்டு. அவர்களுக்கென்று தனியாக சொந்த நடன வடிவங்கள், கதைகள் மற்றும் இசை உள்ளன. அவர்களில் சிலருக்கு தங்களுக்கென சொந்த இசைக் கருவிகளும் கூட உண்டு.

லம்பாடி நடனம் ஆந்திர பிரதேசத்தின் நாகார்ஜுனகொண்டா அருகே உள்ள அனுபு கிராமத்தில் (Anupu Village) உருவானது. நடனக் கலைஞர்கள் பிரகாசமான வண்ணங்களிலான சட்டை, நீண்ட பாவாடை மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட 'ஓதனி' (துப்பட்டா) என ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட வண்ணமயமான உடைகளை அணிவார்கள். வேலைப்பாடுகள் மிகுந்த கனமான வெள்ளி நகைகள், மணிகள், முத்துக்கள் மற்றும் நாணயங்கள் கோர்க்கப்பட்ட அணிகலன்களை அணிந்து, கைகளை அசைத்து மென்மையான தாளத்துடன் நடனமாடுவார்கள். இவர்களின் நடனம் பிரகாசமான ஆடைகள், நுணுக்கமான நகைகள் மற்றும் உற்சாகமான இசை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இவை பொதுவாக திருவிழாக்கள், அறுவடை காலங்கள் மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் ஆடப்படுகிறது.

"இந்தியாவின் ஜிப்ஸிகள்" என்று குறிப்பிடப்படும் இவர்களின் நடனம் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இனத்தின் கலாச்சார நடைமுறைகள் மற்றும் வரலாற்றை எதிர்கால தலைமுறைகளுக்கு பாதுகாத்து வழங்குவதற்கான ஒரு வழியாகவும் செயல்படுகிறது. முற்காலத்தில் இவர்கள் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து பொருட்களை வர்த்தகம் செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:
நினைவாற்றலை வளர்க்கும் "Encoding Effect": கையால் எழுதுபவர்கள் புத்திசாலிகளா?
lambadi-folk-dance

காலப்போக்கில் இந்த சமூகம் மற்ற சமூகங்களைப் போலவே ஓரிடத்தில் வாழத் தொடங்கியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்யத் தொடங்கினர். அத்துடன் இவர்களின் லம்பாடி போன்ற நடன வடிவங்கள் வெளிச்சத்திற்கு வந்து பிரபலமடைந்தன.

இந்த நடனம் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே ஆடப்படுகிறது. நடன அசைவுகள் மிகவும் மென்மையாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். லம்பாடி நடனத்தை உன்னிப்பாக கவனித்தால், பெண்கள் விதைத்தல், நடவு செய்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற கை அசைவுகளைச் செய்வதை நம்மால் உணரமுடியும்.

காலப்போக்கில் லம்பாடி நாட்டுப்புற நடனம் ஒரு கொண்டாட்ட நடனமாக மாறியது. பாடல்கள் லம்பாடி மொழியில் பாடப்படுகின்றன. தசரா, ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் பொழுது பழங்குடியினர் இந்த நடனத்தை ஆடி மகிழ்கின்றனர்.

லம்பானி நடனம், தென்னிந்தியாவின் பழங்குடி சமூகத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நாட்டுப்புற கலை வடிவமாகும்.

logo
Kalki Online
kalkionline.com