
புடவை இந்திய கலாச்சாரத்தோடு தொடர்புடையது. மேலும் உலகில் அணியப்படும் ஆடைகளில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்திய நாட்டில் பல்வேறு வகையான புடவைகள் இருக்கின்றன. இதில் காஞ்சிபுரம், கலம்காரி, பனாரசி, சந்தேரி, மகேஸ்வரி மற்றும் கோசா போன்ற புடவைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில் கோசா புடவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சத்தீஸ்கரின் ஜஞ்ச்கீர் - சம்பா மாவட்டத்திலிருந்து சர்வதேச சந்தையில் தனது முத்திரையைப் பதித்தது தான் கோசா புடவை. கோசா என்றால், பட்டுப்புழுக்கூடு என்று அர்த்தம்.
பட்டுப்புடவைகளைப் பொறுத்தவரை, பட்டுப்புழுக்களை வளர்த்து அதிலிருந்து பட்டு நூலை அறுவடை செய்து புடவை நெய்வார்கள்.
கோசா பட்டுக்கோ, காட்டில் வாழ்கிற பட்டுப்புழுக்களின் கூடுகளைச் சேகரித்து அதிலிருந்து பட்டு நூலை எடுத்து, புடவை நெய்வார்கள். அதனால் கோசா பட்டுகள் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருக்கின்றன. வெள்ளி ஜரி அல்லது தங்க ஜரியுடன் டிசைன்ஸ் உருவாக்கப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது இந்தக் கோசா பட்டு.
கோசா பட்டு என்பது நூலை உலர்த்தி நெய்வதன் மூலம் தயாரிக்கப்படுவதால் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு பிளாக் பிரிண்ட் மற்றும் கலம்காரி போல தோற்றமளிக்கிறது.
நூலில் இருந்து புடவை தயாரிக்க ஏழிலிருந்து எட்டு நாட்கள் ஆவதோடு, மூன்று கைவினைஞர்கள் தேவைப்படுகிறார்கள். சத்தீஸ்கரின் பல இடங்களில், சுமார் 80 ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இந்த வேலையைச் செய்து வருகின்றனர். இதில் பெண்களும் முக்கிய பணியாற்றுகிறார்கள்.
கோசா பட்டு மற்ற வகை பட்டுகளை போலல்லாமல் சேதமடையும் வாய்ப்பு குறைவு மற்றும் காலப்போக்கில் அதன் அழகை தக்க வைத்துக் கொள்கிறது. மேலும் ஒவ்வொரு கோசாப்பட்டும் ஒரு கலைப் படைப்பாகவும் நெசவாளர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.
கோசா பட்டு அல்லது டஸ்ஸர் பட்டு என்று அழைக்கப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் கையால் வரையப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் பழங்குடி மையக்கருத்துகளுடன் ஒரு பழமையான ஈர்ப்பைக் கொண்டுள்ளன. கோசா புடவையின் விலை 4 ஆயிரம் ரூபாயில் தொடங்கி சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோசா பட்டுப்புடவை அணிவது வெறும் ஃபேஷனை பற்றியது மட்டுமல்ல. பாரம்பரிய கலைத்திறனை கொண்டாடுவதும் பாதுகாப்பதும் கூட.