பலவித வண்ணங்களில் பெரிய பெரிய பார்டர் போட்ட மின்னும் ஜரிகை சேலைகளில் எத்தனை பெண்கள் இருந்தாலும் மெலிதான ஜரிகை போட்ட மைசூர் பட்டுச்சேலை அணிந்த பெண் அனைவரையும் கவர்வார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம் பெண்களுக்கு கம்பீரமும் அதேசமயம் அணிவதற்கு எளிமையைத் தரும் விதத்தில் அமைந்ததுதான் மைசூர் பட்டுச்சேலை.
பட்டுச்சேலைகளில் இளம்பெண் முதல் முதிய பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கிறது மைசூர் பட்டு. தமிழகத்தின் பிரபலமான ஆரணிப்பட்டு, காஞ்சிப்பட்டு, தர்மாவரப்பட்டு, திரிபுவனப்பட்டு, இராசிப்பட்டு வரிசையில் கர்நாடகாவின் மைசூர் பட்டுக்கும் தனி இடமுண்டு.
பெண்கள் விரும்பி அணியும் மைசூர் பட்டின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா? எத்தனை வருடங்கள் ஆனாலும் இதன் ஜரிகை மங்காமல் புதுசு போலவே இருக்கும் என்பதுடன் இதன் மென்மைத் தன்மை உடலுக்கு சுகமாக இருக்கும். மேலும் தோற்றத்தையும் மெல்லியதாகவும் அழகாகவும் காட்டும். முக்கியமாக எத்தனை கசக்கினாலும், சுருங்காது. புத்தம் புதிதாகவே தென்படும். சலவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால்தான் எவ்வளவு பழசு என்றாலும் சில வீடுகளில் இது எங்கள் பாட்டி அணிந்த மைசூர் பட்டு என்று பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
ஜரி பிரின்டெட் சேலை, சிறிய மாங்காய் டிசைன் சேலை, டிஷ்யூ, புட்டா சேலை என சுமார் 115 வகையான 300க்கும் மேற்பட்ட வர்ணங்கள் கொண்ட அழகிய மைசூர் பட்டு சேலைகள் கிடைக்கின்றன. இது கே எஸ் ஐ சி யின் கீழ் காப்பூர்மை பதிவு செய்யப்பட்ட தயாரிப்பு ஆகும். கே எஸ் ஐ சி நிறுவனம் (கர்நாடக சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்) அரசு கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. தற்போது எதிலும் போலிகள் இருப்பதால் வாடிக்கை யாளர்கள் ஏமாறுவதைத் தடுக்கும் நோக்கில், மைசூரின் ஜே.எல்.பி., ரோடு, நீலகிரி ரோடு, மிருகக்காட்சி சாலை உட்பட, பல்வேறு இடங்களில் அரசின் மைசூரு பட்டுச்சேலை விற்பனை கடைகள் உள்ளன என்றும் குறிப்புகள் கூறுகிறது. போலிகளிடம் சிக்காமல் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மைசூர் பட்டு உருவான கதை இதுதான். மைசூர் மன்னரான நால்வடி கிருஷ்ணராஜ உடையார் 1912ல் ராணி விக்டோரியாவின் பட்டாபிஷேக பொன் விழா நிகழச்சியில் கலந்து கொண்டபோது பிரிட்டீஷ் அரச குடும்பத்தினர் அணிந்திருந்த, இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பட்டு உடைகள் அவரது கவனத்தை ஈர்க்க இதை மைசூரில் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது.
தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இருந்து 32 மின் விசை இயந்திரங்களை, மைசூருக்கு வரவழைத்தார். மைசூரின், மானந்தவாடி ரோட்டில் பட்டுச்சேலை தயாரிப்பு தொழிற்சாலையை துவக்கினார். இது இந்தியாவின், முதல் பட்டு உற்பத்தி தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேலைகள் கலப்படம் இல்லாத, தங்க ஜரிகை கலந்த சுத்தமான பட்டாகும் என்பதாலேயே இதன் விலை சற்று கூடுதலாகத் தெரிகிறது.
இருந்தாலும் மைசூர் பட்டுச்சேலை கட்டி தலையில் மல்லிகைப் பூ வைத்த எளிய அலங்காரம் பெண்களுக்கு மேலும் அழகு தரும் என்பதில் சந்தேகமில்லை.