

பெண்கள் வெளியே வந்து பாடுவதை குற்றமாக கருதிய குடும்பத்தில் பிறந்து புகழ்பெற்ற பாடகியானவர் டி.கே.பட்டாம்மாள். இந்தியா சுதந்திரம் பெற்றதை "ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..." என்று பாடி முதல் முறையாக சுதந்திர தின செய்தியை அகில இந்திய வானொலியில் அறிவித்தவரும் இவரே. மிகச்சிறிய வயதிலேயே மேடையில் கச்சேரி செய்தவர். இவருக்கு மிருகங்கள் மீது நிறைய பிரியம். அதனால் அவர் 10 பசுமாடுகளையும்,10 நாய்களையும் வளர்த்து வந்தார்.
'சங்கீத கலாநிதி' விருது பெற்ற முதல் இளம் வயது பெண் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.எல்.வசந்த குமாரி. "ராகங்களின் அரசி" எனப் புகழப்பட்டவர். திரைப்படங்களில் 150 பாடல்கள் பாடியவர். உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். இந்தியா- சீனா போரின் போது தான் அணிந்திருந்த நகை முழுவதையும் நம் நாட்டு நல நிதிக்கு வழங்கியவர்.
கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டிப் பறந்த மூன்று பெண்களில் ஒருவர் என்.எஸ்.வசந்த கோகிலம் (மற்ற இருவர் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி). திரைப்படங்களில் நடித்தும், பாடியும் உள்ளனர். பாடகிகளுக்கான பரிசை வென்ற முதல் பாடகி இவர் தான்.1938 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'மெட்ராஸ் மியூசிக் அகடமி' மாநாட்டில் இவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், 32 வயதிலேயே காலமானார். காசநோயால் இறந்து போனார் என்பதால், தான் இசை மூலம் சம்பாதித்த சொத்துக்களை காசநோய் மருத்துவ மனைக்கு எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.
கர்நாடக இசைத்துறையில் புகழ் பெற்ற பாடகராகவும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி என்று பல மொழிகளில் பாடல்களைப் பாடி, இசையரசி, இசைப் பேரரசி, இசைக்குயில், இசை ராணி என்று பலராலும் இன்றும் அழைக்கப்படுபவர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் அவையில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். போப் ஆண்டவர் முன்னிலையில் பாடல் பாடி தங்கப் பதக்கம் பெற்றவர். இவர் முதல் முறையாக சென்னை மியூசிக் அகடமியில் பாடிய போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 13. அப்போது பஜன் பாடல்களைத் தான் முதல் முதலாக பாடினார்.
நாட்டிலேயே முதல் முறையாக சட்ட சபை மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை, பாடகி என்ற பெருமை பெற்றவர் தன் வெங்கலக்குரலால் மக்களைக் கவர்ந்த கே.பி.சுந்தராம்பாள் (கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்). 1953-ல் வெளியான 'ஔவையார்' என்ற திரைப்படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். ஒளவையார் படத்தில் அமைந்த 48 பாடல்களில் சுந்தராம்பாள் பாடியவை முப்பது. இத்திரைப்படத்திற்காக ரூபாய் ஒரு லட்சம் ஊதியம் பெற்றார்!
கர்நாடக சங்கீதம், திரை இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் என்று மூன்று தளங்களிலும் பயணித்த ஒரே பாடகி வானி ஜெயராம் மட்டும் தான். இந்த பெருமை இந்தியாவிலேயே வேறு எந்த பிண்ணனி பாடகிக்கும் கிடையாது. வானி ஜெயராம் ஆரம்பத்தில் ஒரு வங்கியில் மும்பையில் வேலை பார்த்தார். ஹிந்துஸ்தானி இசை கற்பதற்காக தன் வேலையை ராஜினாமா செய்தார். இதன் காரணமாகவே அவருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அவர் 'குட்டி' எனும் ஹிந்தி திரைப்படத்தில் பாடிய "போலுரே பப்பி ஹரா" என்ற பாடல் சரித்திரம் படைத்த பாடல். 'பினாகா கீத் மாலா' நிகழ்ச்சியில் அந்த பாடல் தொடர்ந்து 16 வாரங்கள் முதலிடத்தில் இருந்தது.
1950-ஆம் ஆண்டு நடந்த ஒரு வானொலி போட்டியில், சுசீலா பாடிய பாடலே அவரது இசை வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது. 25,000 பாடல்களுக்கு மேல் பாடி 5 தேசிய விருதுகள், 10 க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும், பத்மபூசன் விருதையும் பெற்றவர். திரைப்பட பின்னணி இசைக்கு என 1969 ல் முதல் முறையாக தேசிய விருது வழங்கப்பட்டது. அதனைப் பெற்றவர் பி.சுசிலா தான். படம் உயர்ந்த மனிதன்.
P. லீலா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி, கர்நாடகப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். 1969-ல் கேரள அரசின் முதல் சிறந்த பின்னணிப் பாடகி விருது பெற்றவர் இவர் தான். குருவாயூர் கோவிலின் நடை திறக்கும்போது ஒலிக்கும் 'ஸ்ரீமன் நாராயணீயம்' பாடலைப் பாடியவர் இவர் தான் .