திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு அறிவோம்!

திருப்பதி பெருமாள்
திருப்பதி பெருமாள்www.hindutamil.in

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டு பிரசாதமும்தான். அந்த காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. திருப்பதியில் கி.பி. 1445ம் ஆண்டு வரை திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு எளிதில் கெட்டுப்போகாமல் இருக்கும் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. 1455ம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினர். 1460ம் ஆண்டிலிருந்து அது வடையாக மாற்றப்பட்டது. 1468ல் வடைக்கு பதில் அதிரசமும் 1547 முதல் மனோகரம் எனப்படும் இனிப்பு வகையும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு மதராச அரசாங்கம் 1803ம் ஆண்டிலிருந்து பிரசாதங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. அன்றிலிருந்து ஸ்ரீவாரி ஆலயத்தில் பிரசாத விற்பனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தியே இனிப்புப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக உருப்பெற்றது.

திருப்பதியில் லட்டை அன்றாட பிரசாதம் ஆக்கிய பெருமை அப்போது ஆலய பிரசாதங்களை தயாரித்து வழங்கிய கல்யாணம் அய்யங்கார் என்பவரையே சேரும். லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை திட்டம் என்று அழைப்பார்கள்.  கல்யாணம் அய்யங்கார் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி சீனிவாச ராகவன். இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பூதேரி என்ற கிராமத்தில் இருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்கு கைங்கரியம் செய்ய தம்மையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டவர். நாள்தோறும் திருமலைக்கு நடந்து படி ஏறிச் சென்று பெருமாளுக்கு அன்றாட பிரசாதங்களை தயாரித்து அளிக்கும் திருப்பணியை செய்து வந்தார்.

ஒரு நாள் பெரும் செல்வம் படைத்த வியாபாரி ஒருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றினால் மலை போன்ற பிரம்மாண்டமான லட்டை தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உத்ஸவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக் கொண்டாராம். பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானதுதான் லட்டு பிரசாதம். அதன் பிறகு கல்யாணம் அய்யங்கார் அப்போது இருந்த திருமலை தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மிகப் பிரம்மாண்ட லட்டுவை தயாரித்து அதை உடைத்து வழங்குவதை விட சிறிய லட்டாக அன்றைய தினம் கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு அளிக்கலாமே என்று யோசனை தெரிவித்தார். பின்னர் அதுவே இன்றளவும் அனைத்து சேவைகளுடன் லட்டு அளிக்கும் முறையாக மாறி உள்ளது.

இந்த லட்டு பிரசாதம் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னை வகுளா தேவியின் நேரடி பார்வையில் மடைப்பள்ளி அறையில் தயாரிக்கப்பட்டது. அங்கு மகனுக்கு தயாரிக்கப்படும் பிரசாதங்களை தாய் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம். நாளடைவில் லட்டு விற்பனை அதிகரித்ததை ஒட்டி ஆலயத்தின் உள்ளே மட்டுமல்லாமல் வெளிப்பகுதியிலும் லட்டு தயாரிக்கும் முறைகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த லட்டுவை தயாரிக்க 51 பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 5100 லட்டுகள் தயாரிக்க 185 கிலோ பசு நெய், 200 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரிப் பருப்பு, 17.5 கிலோ உலர்ந்த திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது 5100 லட்டுகள் தயாரிக்க 852.5 கிலோ பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திருப்பதி லட்டு பிரசாதம்
திருப்பதி லட்டு பிரசாதம்https://tamil.oneindia.com

திருப்பதி லட்டு என்பது திருமலையில் உள்ள மடைப்பள்ளியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 307 ஆண்டுகளாக திருப்பதி லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஆஸ்தான லட்டு, கல்யாண உத்ஸவ லட்டு, புரோகிதம் லட்டு என்று மூன்று வகைப்படும். இது விசேஷ உத்ஸவ நாட்களில் மட்டுமே தயாரிக்கப்படும்.

ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடனும் பிற லட்டுக்களை வட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

கல்யாண உத்ஸவ லட்டு என்பது, கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கு தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டுவை விட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பார்சிகள் என்பவர் யார்? அவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தவர்களா?
திருப்பதி பெருமாள்

புரோகிதம் லட்டு என்பது, பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மூன்று வகை லட்டுக்களில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள்தான் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

திருப்பதி லட்டுக்கு ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் அவரது கைக்கு அது வந்து விடாது. அந்தப் பிரசாதம் அவரது கைக்குக் கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும்.. அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com