
தேநீர் போல உலகளவில் விரும்பப்படும் வேறு பானங்கள் உண்டா? சீனாவின் பரபரப்பான சந்தைகள் முதல் இங்கிலாந்தின் வசதியான சமையல் அறைகள் வரை தேநீர் முக்கியத்துவம் பெற்றிருப்பதை உங்களால் நம்பமுடிகிறதா?
தேநீர் ஒரு சடங்கு. ஒரு ஆறுதல். அது ஒரு வாழ்க்கை முறையாகும். அதன் ஒவ்வொரு கோப்பையிலும் ஒரு அதிசய உலகம் இருப்பதை உணரமுடிகிறது.
உலகில் அதிகம் அருந்தும் பானமாக தேநீர் இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகளவில் மூன்று பில்லியன் கப் தேநீர் சுவைக்கப்படுகிறது.
தேநீர் என்பதை பல பெயர்களில் அழைத்து சுவைத்து மகிழ்ச்சி அடைகிறோம். தேத்தண்ணி, தேயில குடிப்பம், என்றும், இதையே ஆங்கிலத்தில் Tea (டீ) என்றும், சீன மொழியில் Cha ( சா ) என்றும் அழைக்கிறார்கள். தேநீர் என்றால் ஓய்வு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது.
சிறிய பெரிய விஷேசங்களில், சுவையில், நட்பு, விருந்தோம்பல், உத்வேகத்தின் தருணங்களில் உன்னதமாக தேநீர் அதன் இருப்பை காட்டுகிறது.
அன்புக்குரியவர்களுடன் நேசத்திற்குரிய நினைவுகளை உருவாக்கும் தேநீர் சுவாரசியங்களை ஒரு கோப்பை அருந்தி மகிழ்வோமா?
சீனா
கி.மு 2737 ஆம் ஆண்டு சீனப் பேரரசர் ஷெனாங் தேநீர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. ஷெனாங் அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்துக் கொண்டிருக்கும் போது, கொதிக்கும் நீரில் இலைகள் எதிர்பாராத நிலையில் விழுந்துவிட்டன. அதன் நறுமணம் ஷெனாங்கை கவர்ந்தது. அதனை ஆராய்ந்தார். பின்னர் குடித்தும் பார்த்தார். “ஆஹா... என்ன சுவை... என்னே மணம்“ என்று வியக்கத் தொடங்கினார். தேநீர் பிறந்தது. உலகின் மிகவும் தனித்துவம் கொண்டு தேநீரில் சீனா சிறந்து விளங்குகிறது.
உலகளவில் 1500 வகை தேயிலைகள்
உலகளவில் 1500 தேயிலை வகைகள் உள்ளன. எண்ணற்ற கலவைகள், சாகுபடி வகைகள், செயலாக்கப்பாணிகள் மூலம் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு சுவை, மணம், திடம், பாரம்பரியம் கொண்டு சுவையுடன் உலகம் சுற்றி வருகிறது.
தேயிலை மீதான பிரிட்டிஷ் காதல்
1650 களில்தான் முதன் முதலில் பிரிட்டனில் தேநீர் அறிமுகம் ஆனது. 1662 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய இளவரசி கேத்தரின் ஆஃப் பிராகன்சாவுடன் மன்னர் இரண்டாம் சார்லஸ் திருமணம் செய்து கொள்ளும்வரை பரவலாக பிரபலம் அடையவில்லை. கேத்தரின் தேநீர் மீதான தனது அன்பை தன்னுடன் கொண்டு வந்தார். அப்போதுதான் தேநீர் விரைவில் உயர் வகுப்பினரிடையே ஒரு நாகரிகமாக பரவியது.
ஒரு நாளைக்கு 100 மில்லியன் கோப்பை தேநீர்
பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 100 மில்லியன் கோப்பை தேநீர் பருகுவதாக சொல்லப்படுகிறது. அதாவது வருடத்திற்கு 36 பில்லியன் கோப்பை தேநீர் அருந்துகிறார்களாம்.
உலகின் மிக விலை உயர்ந்த தேநீர்
அரிய சீன தேயிலை “டா ஹாங் பாவோ“ அல்லது “பெரிய சிவப்பு அங்கி“தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேநீராகும். சுமார் ஆயிரம் பவுண்ட். இந்திய ரூபாயில் ரூ.1,15,120 ஆகும். இதன் இலைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படுகிறது. பண்டைய தேயிலை புதர்களிலிருந்து இலைகள் கொண்டு வரப்படுகிறது. இது மிக குறைந்த அளவே அறுவடை செய்யப்படுகிறது.
கிரீன் டீ
கிரீன் டீ யில் எல்-தியானைன், காஃபின் போன்ற சேர்மங்கள் இருப்பதால், மனநிலை, அறிவாற்றல் செயல் பாடு சிறப்பாக இருப்பதாகவும், நினைவாற்றலை மேம்படுத்துகின்றன என்பதையும் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
தேநீர் பை
1900 களின் முற்பகுதியில் அமெரிக்க தேயிலை வியாபாரி தாமஸ் சல்லிவன் தனது தேநீரின் மாதிரிகளை சிறிய பட்டுப் பைகளில் அனுப்பினார். அதனை தவறாகப் புரிந்துகொண்ட வாடிக்கையாளர்கள் இலைகளை தனியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, முழுப்பைகளையும் சூடான நீரில் மூழ்கச் செய்து தேநீர் தயார் செய்தனர். இப்படித்தான் தேநீர்ப் பை பிறந்தது. அதன் பிறகு அது துணிகளில் பொட்டலங்களாக இடப்பட்டு, பின்னர் தான் காகிதப்பைகளில் பயன்படுத்தி ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய புரட்சியை உருவாக்கியது.
ஐஸ் தேநீர்
1904 ஆம் ஆண்டு செயிண்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியில், ஒரு வெப்ப அலை காரணமாக, கண்காட்சிக்கு வருபவர்கள் சூடான தேநீரை அருந்துவதை தவிர்த்து வந்தார்கள். இதைக்கண்ட ஒரு தொழில் முனைவோரின் மூளையில் திடீரென்று பொறி தட்டியது. உடனே அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க என்ன செய்யலாம் என யோசித்ததால், காய்ச்சிய தேநீரை ஐஸ் கட்டிகளின் மீது கொட்டினார். கோடைக் காலத்திற்கு ஏற்ற ஐஸ் டீ யாக வெற்றி பெற்றது.
மூலிகைத் தேநீர்
தேயிலைச் செடியல்லாத பிற மூலிகைச் செடிகளின் பகுதிகளிலிருந்தும் தயாரித்து, மூலிகைத் தேநீர் எனவும் வழங்கப்படுகிறது.
இதுவரை அருந்திய தேநீரின் மிடக்கு தந்த இனிமை இன்னும்... இன்னும்... என்று கேட்கத் தூண்டுகிறது அல்லவா.