
மா, பலா, வாழை எனும் முக்கனிகளில் கடைசியாக, வாழைப்பழம் இருந்தாலும் உலக மக்களால் நாள்தோறும் விரும்பிச் சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழம்தான். எந்தக்காலத்திலும், எப்போதும், எந்த இடத்திலும் கிடைக்கக்கூடியது இந்தப் பழம், இந்து சமயத்தினர் வழிபாட்டு நிகழ்வுகளிலும், குடும்பங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்திலும் முதலிடம் பெறும் பழமாகவும் இருக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப் பொருளாகவும் வாழைப்பழம் இருக்கிறது.
இந்த வாழைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மக்கா எனுமிடத்தில் பன்னாட்டு வாழை அருங்காட்சியகம் (International Banana Museum) அமைக்கப் பட்டிருக்கிறது.
1972ஆம் ஆண்டில் புகைப்படக் கருவி உற்பத்தி நிறுவனத்தின் தலைவராக இருந்த கென் பன்னிஸ்டர் என்பவர், ஒரு உற்பத்தியாளர் மாநாட்டில் சிக்விடா வாழை ஸ்டிக்கர்களை வழங்கினார். இந்த ஸ்டிக்கரில் வாழைப்பழம் புன்னகைப்பதுபோல் வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்த ஸ்டிக்கர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அவர் வாழைப்பழம் தொடர்புடையப் பல்வேறு பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அத்துடன் ‘பன்னாட்டு வாழை மன்றம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கினார்.
அவருடைய சேகரிப்புகளை அறிந்த நண்பர்களும், பொதுமக்களும் தங்களிடமிருந்த வாழை தொடர்புடைய புகைப்படங்கள், பொருட்கள் போன்றவைகளை அவருக்கு அஞ்சலில் அனுப்பி வைத்தனர். அவரிடம் வாழை தொடர்பான பொருட்களும், படங்களும் நிறையச் சேர்ந்துவிட்டன. அவற்றையெல்லாம் வீட்டில் வைக்க இடமில்லாமல், அல்தடேனாவில் ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பிடித்து அங்கு அந்தப் பொருட்களையெல்லாம் கொண்டு போய் வைத்து, அவற்றையெல்லாம் காட்சிப்படுத்தி 1976 ஆம் ஆண்டில் பன்னாட்டு வாழை அருங்காட்சியகத்தை அமைத்தார்.
வாழைப்பழம் தொடர்பான ஒரு பொருளை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்குவதன் மூலம், ஒருவர் பன்னாட்டு வாழை மன்றத்தில் உறுப்பினராகச் சேரமுடியும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பன்னாட்டு வாழை மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இம்மன்றத்தில் 17 நாடுகளிலிருது 35 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்திருக்கின்றனர். அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ரொனால்ட் ரீகன் இம்மன்றத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1999ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை தொடர்புடைய பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, இந்த அருங்காட்சியகம் ஒரு பழத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரும் அருங்காட்சியகம் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தது.
இந்நிலையில், 2005 ஆம் ஆண்டில் ஹெஸ்பெரியா நகரசபைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று வாடகையில்லாமல் கிடைத்ததால், பன்னிஸ்டர், பன்னாட்டு வாழை அருங்காட்சியகத்தை அல்தடேனாவில் இருந்து ஹெஸ்பெரியாவிற்கு மாற்றினார். 2010 ஆம் ஆண்டில் ஹெஸ்பெரியா நகரசபை அந்தக் கட்டிடத்தை, பொழுதுபோக்கு மற்றும் பூங்காவுடன் கூடிய புதிய கண்காட்சிக்காகத் தேவைப்படுவதால் பன்னிஸ்டரின் அருங்காட்சியகத்தை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவித்தது.
அதனால் கவலையடைந்த பன்னிஸ்டர், பன்னாட்டு வாழை அருங்காட்சியகப் பொருட்களைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்ற நிலைக்கு வந்தார். பன்னிஸ்டர் தன்னிடமுள்ள வாழை அருங்காட்சியகப் பொருட்கள் அனைத்தையும் 45 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப் போவதாக அறிவித்தார். அவர் அறிவித்த விலைக்கு யாரும் அதனைப்பெற விரும்பாத நிலையில், ஃப்ரெட் கார்பட் என்பவர் அதனை 7 ஆயிரத்து 500 டாலருக்கு எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். அந்த விலையைவிட வேறு யாரும் உயர்வான விலைக்குக் கேட்காத நிலையில், பன்னிஸ்டரும் வேறு வழியின்றி, அதனை 7 ஆயிரத்து 500 டாலருக்கு விற்பனை செய்தார்.
வாழை அருங்காட்சியகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிய ஃப்ரெட் கார்பட் மக்கா எனுமிடத்தில் பன்னாட்டு வாழை அருங்காட்சியகத்தை அமைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் வாழை தொலைபேசிகள், கடிகாரங்கள், வண்ணமயமான புத்தகங்கள், பொம்மைகள், பதிவு வீரர்கள், உடைகள், கோல்ஃப் கிளப்புகள், அடைத்த விலங்குகள், வாழை படுக்கை, வாழை சோடா, தங்கமுலாம் பூசப்பட்ட வாழைப்பழம், வாழை பூகி போர்டு மற்றும் வாழை காதுகள் என்று வாழை தொடர்பான 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்பவர்கள், வாழைப்பழ உடையினைப் பெற்று இங்கிருக்கும் வாழைப்பழச் சிலை முன்பு படமெடுத்துக் கொள்கின்றனர். இங்கு வாழைப்பழ ஐஸ் கிரீம்கள், வாழைப்பழ சேக்குகள், என்று வாழைப்பழத்தில் தயாரிக்கப் பெற்ற பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் திங்கள் கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அன்று விடுமுறை நாளாக இருக்கிறது. மற்ற நாட்களில் அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியும். சிறியவர், பெரியவர் என்று அனைவருக்கும் நுழைவுக் கட்டணமாக 1 டாலர் பெறப்படுகிறது.