
கதிரவன் தன்னொளியைப் பரப்பி விட்டு சற்றே ஓய்வெடுக்க, மலைமகளின் மடியினில் துயிலப் போகின்றது. அந்த வேளையில் முல்லை மலர்கள் பூத்து நறுமணத்தை காற்றில் பரப்பி விடுகின்றன. நிலா மங்கை வானவீதியில் உலா போகின்றாள்.
அப்பொழுதுதான் தலைவன், தலைவியை தேடி வருகின்றான்.
வெகுநாட்கள் கழித்து வந்ததால் வார்த்தைகள் வெளிவரவில்லை. ஆனால் விழிகள் நான்கும் ஒன்றோடு ஒன்றாக கௌவிக் கொண்டன. தலைவியின் செம்பவள இதழ்கள், தலைவனின் இதழ்களோடு சேர துடிக்கின்றன. ஆனால், நாணம் தடுக்கின்றது.
நங்கை நாணுகிறாள், துவள்கிறாள் அவளின் நிலைப் பார்த்து, அவளின் தோளினில் சாய்த்துக் கொள்கிறான் தலைவன்.
தலைவனின் கரங்கள், தலைவியின் கரங்களோடு இணைகின்றன. இதழ்கள் செம்பவள இதழ்களோடு, மலரில் தேனெடுப்பது போல படர்கின்றன.
தலைவியின் செம்பவள இதழ்களின் சிவப்பு, அவளின் கண்களில் செவ்வரிகளாக படர்கின்றன. இதழ்களில் வெளுப்பேறுகின்றன.
தலைவியின் மயக்கத்தில் நாணம் காணாமல் போய்விட, அதுதான் நல்லதொரு சந்தர்ப்பமென்று, தலைவனும், காதல் மயக்கத்தினை கரைசேர்க்க ஈருடலும், ஓருடலாக்குகின்றான்.
தலைவி இன்பக்களிப்பில் இன்புற்று மகிழ்ச்சி கடலில் நீந்தும் போதுதான்…. “கூவித்தொலைக்கிறது கொண்டைச் சேவல்” அலுத்துக் கொள்கிறாள் தலைவி.
காலை புலர்ந்து விட்டது, தன் தோழியைப் பார்க்கிறாள். தோழியிடம், கதிரவன் மறைந்து வான் சிவந்தாலும், முல்லை மலர்கள் மலர்ந்திருக்கும் வேளையை மாலை என்கிறார்கள் பேதைகள். எனக்கு கொண்டைச் சேவல் கூவும் வேளையும், சுட்டெரிக்கும் பகல்வேளைக் கூட மனம் மயக்கும் மாலைதான் என்கிறாள் தோழி. அதைக் கேட்ட தோழியோ உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டே வெட்கத்தோடு ஓடுகிறாள்.. இப்படி வர்ணிக்கும் பாடல்தான் இது
“ சுடர்செல் வானமே சேப்ப, படர் கூர்ந்த
எல்லூறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே !
குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்
பெரும்புலர் விடியலும் மாலை
பகலும் மாலை – துணைஇ லோர்க்கே !”
குறுந்தொகையின் பாடல்