
காதலுக்கும் கடமைக்கும் இலக்கணம் கூறிய ஓர் இலக்கண நூல் தொல்காப்பியம். மற்ற உலக மொழிகளில் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் உண்டு. தனிமனித வாழ்க்கைக்கு இலக்கணம் இல்லை. தொல்காப்பியம் மட்டுமே காதல் என்பது திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் இப்படித்தான் இருக்கும் என்று இலக்கணம் கூறியுள்ளது.
இன்று விளக்கப்படும் காதலின் ஏழு நிலைகளான
1.Attraction
2. Infatuation or attachment
3.Love
4.Trust or reverence
5. Worship
6. Madness and
7. Death
ஆகியவை தொல்காப்பியத்துடன் ஒற்றுமை உடையன. தெய்வக் காதலிலும் (Mystic Love) இந்த ஏழு நிலைகளே விளக்கப்படுகின்றன.
காதல் மலர்ந்ததும் காதலர் என்ன செய்வர் என்று தொல்காப்பியர் படிப்படியாக விளக்குகிறார்.
வேட்கை, ஒரு தலை உள்ளுதல், மெலிதல்/
ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல்/
நோக்குவ எல்லாம் அவையே போறல்/
மறத்தல், மயக்கம், சாக்காடு என்றச்/
சிறப்புடை மரபின் களவென மொழிப (1046)
1. வேட்கை (Attraction) - ஒருவர் மீது ஒருவர் குறையாத விருப்பத்துடன், பார்க்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பதாகும்.
2. ஒருதலை உள்ளுதல் (Infatuation)- எப்போதும் தன் காதலரையே நினைத்துக் கொண்டிருப்பதாகும்.
மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே நீதானே
என்ற திரையிசைப் பாடல் வரி இந்நிலைக்கு ஒரு சான்றாகும்.
3. மெலிதல் - (Love) காதலரை நினைத்தபடி இருப்பதால் ஆணும் பெண்ணும் சரியாக உணவு உண்ணாமல் உறக்கம் கொள்ளாமல் கனவு நிலையில் வாழ்ந்து உடல் மெலிந்து காணப்படுவதாகும்.
பாலும் கசந்ததடி சகியே,
படுக்கை நொந்ததடி
என்ற பாரதியாரின் பாடல் இதற்குச் சான்றாகும்.
4. ஆக்கம் செப்பல் - காதலை நிறைவேற்றும் வகைகளை ஆராய்வதாகும். இனி என்னென்ன நடக்க வேண்டும் எங்கு சந்திக்கலாம்? என்ன பேசலாம்? என்ன செய்யலாம்? இத்தகவலை யார் மூலம் பெற்றோருக்கு தெரிவிக்கலாம்? பெற்றோர் மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? என்று பல வகையிலும் காதலை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்ல சிந்திப்பதாகும்.
5. நாணுவரை இறத்தல் - பெண்கள் நாணம் என்ற எல்லையை மீறிச் செல்வதாகும். ஒரு பெண் காதல் வேட்கையின் காரணமாக சமூகக் கட்டுப்பாடுகளை மீறுவாள். தன் காதலன் மீது கொண்ட நம்பிக்கையின் (trust) காரணமாக அவனுடைய சொற்களை மீறாமல் அவனுக்கு கட்டுப்பட்டு அவன் சொன்னபடி எல்லாம் கேட்பாள். இச்சூழலில் அவள் பொது இடங்களில் வெட்கம் நாணம் ஆகியவற்றை மீறி நடந்து கொள்வதும் உண்டு.
6. நோக்குவ எல்லாம் அவையே போறல் -
இது திரையிசைப் பாடல் வரியான
காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல்
சொல்லும் கருத்தாகும். பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் பாட்டில் நக்மா காணும் மனிதரெல்லாம் ரஜினிகாந்தாக தோன்றும். டிராபிக் போலீசும் நாதஸ்வர வித்துவானும் ரஜினிகாந்த் ஆக தோன்றுவது தான் இந்நிலை.
மறத்தல் - தன்னுடைய அன்றாட பணிகளைச் செய்யாமல் மறந்து போய் தன் காதலையே நினைத்துக் கொண்டிருப்பதாகும். சின்னப்பதாசாக வரும் சத்யராஜ் தன் காதலியை நினைத்துக் கொண்டு பல் விளக்காமலேயே வாய் கொப்பளிப்பார். இந்நிலை மறத்தலுக்கு நல்லதொரு சான்றாகும்.
மயக்கம் - (Madness) அறிவிலும் செயலிலும் தெளிவின்மையைக் உணர்த்தும். பல திரைப்படங்களில் காதலர்கள் தம்மை தேவதைகளாகவும் கடவுள்களாகவும் கற்பனை செய்து மகிழ்வார்கள். காதல் மயக்கத்தில் தன் தோழியர் அல்லது உடன்பிறப்புகளைக் கட்டிப் பிடிப்பர். இதுவும் மயக்கம்தான்.
சாக்காடு - (Death) ஒருவரை ஒருவர் நினைத்து ஏங்குவதை விட செத்துப் போவது மேல் என்ற முடிவுக்கு வருவதாகும். சில அவசர முடிவுக்கு ஆளாவது உண்டு. புன்னகை மன்னன் படத்தில் கமலும் ரேகாவும் சாக்காடு என்ற முடிவை நோக்கி செல்லும்போது ரேகா இறந்து போக கமல் பிழைத்து விடுவார்.
காலங்காலமாக மனிதக் காதல், தெய்வக் காதல் என்ற இரு வகையிலும் காதலின் படிநிலைகள் ஒரே தன்மையின. 6000 ஆண்டுகளாக மனித மனம் எதிர்பாலினத்தை இப்படித்தான் வரவேற்கும் என்பதை அன்றே தொல்காப்பியர் ஓர் உளவியல் அறிஞர் போல எடுத்துக்காட்டி உள்ளார்.