
மாட்டுப் பொங்கல் என்பது தமிழ்நாட்டின் கிராமங்களில் பண்ணை விலங்குகளை, குறிப்பாக பசுக்கள் மற்றும் காளைகளை கௌரவிக்கும் நாளாகும். குறிப்பாக விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிர்களை வளர்க்க கடினமாக உழைத்து முக்கிய பங்கு வகிக்கும் காளைகள் நன்றி செலுத்தும் பண்டிகையாகும். உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இவ்விழா இலங்கையின் தமிழ் இன மக்களாலும் அனுசரிக்கப்படுகிறது.
இது போகி பொங்கல், தை பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளையும் கால்நடைகளையும் வழிபடுவது தான் மாட்டுப்பொங்கல் ஆகும். விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளை வழிபடும் பழக்கம் இன்று வரை கிராமப் பகுதிகளில் மற்றும் விவசாயம் செய்பவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
மாட்டுப் பொங்கல் நாளில், கிராமப்புறங்களில் மக்கள் தங்கள் பசுக்களையும், காளைகளையும் நன்றாக கழுவி அலங்கரிப்பர். அவற்றின் கொம்புகள் வர்ணம் பூசப்பட்டு, பளபளக்கும் உலோகத் தொப்பிகளால் அலங்கரிக்கப்படுகிறது. பல வண்ண மணிகள், சோளக்கட்டுகள் மற்றும் மலர் மாலைகள் காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டு, மஞ்சள், குங்குமம் ஆகியவை கால்நடைகளின் நெற்றியில் பக்தியுடன் இடப்படும். பின்னர் கால்நடைகளை கோவிலுக்கு அழைத்துச்சென்று பொங்கல் வைத்து, பூஜை செய்து, வழிபடுகிறார்கள். அடுத்து பசுக்களுக்கும், காளைகளுக்கும் பொங்கல், பழங்களை சாப்பிட கொடுத்து அவைகளுக்கு நன்றி செலுத்துகிறார்கள். விவசாயத்தில் விலங்குகளின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்க மக்கள் அவற்றை வணங்குகிறார்கள். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.
மஞ்சி விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற கிராமிய விளையாட்டுகள் பொதுவாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாலையில் நடைபெறும். கடந்த காலங்களில், காளைகளின் கொம்பில் கட்டப்பட்ட பணத்தை மீட்க, கிராமத்து இளைஞர்கள் காளைகளை துரத்திச் சென்று பிடிப்பார்கள் .
சூரியக் கடவுளான சூரியனுக்கும், இயற்கையின் சக்திகளுக்கும், விவசாயத்தை ஆதரிக்கும் பண்ணை விலங்குகள் மற்றும் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது பொங்கலின் முக்கிய கருப்பொருளாகும். கிராமப்புறங்களில் காளைகள் விவசாய குடும்பங்களில் அண்ணன், தம்பி, நண்பனராக இருப்பதை உணர்த்துவதற்காக தான் மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் போன்ற காளைகளுடன் தொடர்புடைய வீர விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.
கால்நடைகளை சுரண்டவோ, துன்புறுத்தவோ, கசாப்புக் கடைக்கோ அனுப்புவது அல்ல, அவற்றை அன்புடனும் பாசத்துடனும் பராமரிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டும் நாள் தான் மாட்டுப்பொங்கல்.