செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கற்பட்டு மாவட்டம் பிரிக்கப்படும் முன்பு இம்மாவட்டத்தில் மொத்தமாக 909 ஏரிகள் இருந்தன. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ‘ஏரிகள் நிறைந்த மாவட்டம்’ என்று பெயர் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் புதிதாகப் பிரிக்கப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் 381 ஏரிகளும் செங்கற்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் எனப் பிரிந்தன.
சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுராந்தகம் ஏரி, கி.பி. 970 முதல் கி.பி. 980 வரை ஆட்சி செய்த சோழப்பேரரசர் உத்தமசோழனால் வெட்டப்பட்டது. உத்தமசோழனுக்கு மதுராந்தகன் என்பது பட்டப்பெயர். இம்மன்னரின் பட்டப்பெயராலேயே இவ்வூர் மதுராந்தகம் என அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியரான கர்னல் லியோனல் பிளேஸ் என்பவரால் கி.பி.1798ம் ஆண்டு இதன் கரைகள் பலப்படுத்தப்பட்டன.
மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டக் கொள்ளளவு 694 மில்லியன் கன அடியாகும். சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியின் நீர்பிடிப்புப் பரப்பளவு 2,411 ஏக்கர்களாகும். இதன் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராகும். ஏரியின் கலங்கலில் 110 தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏரியிலிந்து வினாடிக்கு 36500 கன அடி அளவிற்கு உபரி நீரை வெளியேற்ற முடியும்.
ஐந்து மதகுகள் வாயிலாகவும் ஏரியின் இரண்டு உயர்மட்ட கால்வாய்கள் வழியாகயும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம ஏரிகளுக்கு இந்த ஏரியிலிருந்து நீர் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரம் ஏக்கர் அளவிற்கு பாசன வசதி கிடைக்கிறது. மதுராந்தகம் ஏரியால் இப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன என கூறப்படுகிறது. மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டினால் மூன்று போகம் சிறப்பாக பயிர் சாகுபடி நடைபெறும்.
இந்த ஏரி ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பெய்யும் பருவ மழையின்போது முழுவதுமாக நிரம்பி பார்ப்பதற்குக் கடல் போலக் காட்சியளிக்கும். மதுராந்தகம் ஏரியின் மதகுகளின் மூலம் உபரி நீரானது கால்வாய்களின் மூலமாக எளிதில் வெளியேறி சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏரிகளைச் சென்றடையும்.
மதுராந்தகத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேருர் ஏரியானது நிரம்பி அதிலிருந்து வெளியேறும் நீரானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து செல்கிறது. இதில் ஒரு பகுதியானது கரிக்கிலி, வெள்ளப்புதூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் உட்பட பல ஏரிகளை நிரப்பி இறுதியாக கிளியாற்றை அடைகிறது. மதுராந்தகம் ஏரியானது நிரம்பியதும் அதிகப்படியான உபரி நீரானது மீண்டும் கிளியாற்றைச் சென்றடையும். கிளியாற்று நீர் கடப்பேரி, விழுதமங்கலம் கிராமங்கள் வழியாகச் சென்று கடைசியில் ஈசூர் எனுமிடத்தில் பாலாற்றுடன் கலந்து கடலைச் சென்றடைகிறது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு சமயம் பெருமழை பெய்தது. இதனால் மதுராந்தகம் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்து உடைந்து ஊரே அழியக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டானது. வெள்ளத்திலிருந்து ஊரைக் காக்குமாறு ஸ்ரீ ராமபிரானிடம் பக்தர்கள் வேண்டிக்கொள்ள இராமபிரான் ஏரி உடையாது ஊரைக் காத்தருளினார். பெரும் வெள்ளத்தால் ஏரி நிறைந்து வழிந்து உடைந்து விடாமல் இருக்க ராமபிரானே தனது தம்பி லட்சுமணனுடன் ஏரியை காத்து நின்றார் என்கிறது இத்தல கோயில் புராணம். இதனால் மதுராந்தகத்தில் எழுந்தருளியுள்ள ராமர், ‘ஏரி காத்த ராமர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சென்னையிலிருந்து செங்கற்பட்டு வழியாக திண்டிவனம், விழுப்புரம் நோக்கிச் செல்லும்போது மதுராந்தகம் ஏரியை பார்வையிட்டுச் செல்லுங்கள். சென்னையிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது.