
உலகின் மிகப் பழைய நகரமான மதுரைக்கு நீண்ட அரசியல் வரலாறும் பண்பாட்டு வரலாறும் உண்டு. இவ்வூரைக் கிராமத்தினர் மருதை என்று சொன்னதுண்டு. மருதந்துறை என்றதன் திரிபு மருதை ஆகும். நகர்ப்புறத்தினர் மதுரை என்பர். கல்வெட்டுகளில் மதிரை என்ற பெயர் காணப்படுகின்றது.
கூடல் மாநகர்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மதுரையில் தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் கூடித் தமிழாய்வு செய்ததால் இந்நகர் கூடல் மாநகர் எனப்பட்டது. 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் கோயில்கள் நான்கும் அமைந்த ஊர் என்பதால் நான்மாடக் கூடல் என்றார். அவர் காலத்தில் இக்கோயில்கள் வந்துவிட்டன.
சங்கம் வளர்த்த மதுரை
சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி 'மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை' என்றது. நல்லூர் நத்தத்தனார் புறநானூற்றுப் பாடலில் 'தமிழ் கெழு கூடல்' என்றார். சிறுபாணாற்றுப்படை 'தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்/ மகிழ் நனை மருகின் மதுரை' என்றது. கிபி 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் ஓங்கு சீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதியெழு அறியா பண்பு மேம்பட்ட மதுரை மூதூர், என்றது.
கடம்ப வனம்
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த சமயம் தமிழகம் வந்தது. புத்த மடாலயங்களில் துறவிகள் மக்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இலவச மருத்துவ சேவை செய்த போது மூலிகைச் செடிகளை சுற்றிலும் வளர்த்தனர். மேலும் ஒரே வகை மரங்களைக் கொண்ட அடர்வனங்களைக் கடம்பவனம், தில்லைவனம், முல்லை வனம், வேணு வனம் என்று உருவாக்கினர். இவர்கள் மதுரையில் கடம்ப வனத்தை உருவாக்கினர்.
மருதை
வைகை ஆற்றின் கரையில். மருத மரங்கள் நிறைய இருந்ததால் மருத நில வேளாண் குடிகள் இம்மரத்தின் பெயரால் இவ்வூரை மருதை என்றனர். பிற்காலச் சங்க இலக்கியமான பரிபாடல், 22 மதுரையை 'திரு மருத முன்றுறை' என்றது. சிலப்பதிகாரம் 'மருதோங்கு முன்றுறை' என்றது. மருத மரங்கள் அடங்கிய நீர்த் துறை - மருதந்துறை ஆகும். மருதந் துறை மருதை ஆனதும் சரியான வழக்கு மொழி ஆகும்.
கல்வெட்டுகளில் மதிரை
கல்வெட்டுகளில் மதிரை என்ற சொல் உள்ளது. உலகின் மிகப் பழைய மிக நெடுங்காலமாக ஆட்சி செய்த பாண்டிய அரசர்கள் மதுரையைச் சுற்றி மதில் சுவர்களை எழுப்பித் தம் தலைநகரைப் பாதுகாத்தனர். மதுரையின் மதில் சுவர்கள் பற்றி மதுரை காஞ்சி, சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம் ஆகியன விரிவாக எடுத்துரைக்கின்றன. மதில் சூழ்ந்த ஊர் என்பதால் மதிரை எனப்பட்டது.
மது தெளித்த ஊர் மதுரை
ஹாலாஸ்ய புராணம் என்ற வடமொழி நூலை கிபி 16ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் என்று தமிழில் மொழிபெயர்த்தார். இந் நூலில் சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து மதுரத்தை இவ்வூரில் தெளித்ததால் இவ்வூர் மதுரை எனபட்டதாகப் பெயர்க் காரணம் கூறப்பட்டது.
மதுராபுரி
15ஆம் நூற்றாண்டில் மகாபாரதத்தை வில்லி தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூல் வில்லிபாரதம் எனப்பட்டது. இதில் காணப்படும்.
'மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்' என்ற வரி மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் மதுரை நகரின் தமிழ்ச் சங்கம் என்ற விளக்கத்தைத் தருகிறது. இவர் மதுரையை மதுராபுரி என்று வடமொழிச் சொல்லாக வழங்கி இருக்கிறார்.
நிறைவு
சங்க இலக்கியத்தில் மதுரை எனப்பட்ட ஊர் மருத மரங்கள் நிறைந்த ஊர் என்பதால் மருதை எனப்பட்டது. இவ்வூர் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டதால் மதிரை எனப்பட்டது. திருவிளையாடல் புராணம் புதிய பெயர்க் காரணத்தைக் கூறிற்று.