
மதுரையில் அன்னை அங்கயற்கண்ணி மீனாட்சி ஆலயத்தை தாமரை மலருக்கு இணையாகக் கூறுகிறது பரிபாடல். எப்படித் தெரியுமா? மதுரை மாநகரின் தெருக்கள் தாமரை மலரின் இதழ்கள் அடுக்கடுக்காக அமைந்துள்ளது போன்ற அதே சீரிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அன்னை மீனாட்சியின் ஆலயம் தாமரை மலரின் நடுவில் உள்ள மொட்டு போல விளங்குகிறது. திருக்கோயிலைச் சுற்றி ஐந்து வீதிகள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு உத்ஸவம் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
அன்னை மீனாட்சி அருளாலயத்தில் திருவிழாக்களுக்கு குறைவே இல்லை. இதில் முக்கிய திருவிழாக்கள் மூன்று. சித்திரை திருவிழா, ஆவணி மூல திருவிழா, தெப்ப திருவிழா. இவையல்லாமல் மாதம்தோறும் பன்னிரண்டு தமிழ் மாதங்களிலும் ஒவ்வொரு விழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் நடப்பது வசந்த விழா. ஆனி மாதத்தில் நடைபெறுவது ஊஞ்சல் திருவிழா. ஆடி மாதத்தில் நடைபெறுவது முளைக்கொட்டு விழா. ஆவணி மாதத்தில் நடைபெறுவது ஆவணி மூல பெருவிழா. புரட்டாசி மாதத்தில் நடைபெறுவது நவராத்திரி கொலு விழா.
ஐப்பசி மாதத்தில் நடைபெறுவது கோலாட்ட திருவிழா. கார்த்திகை மாதத்தில் நடைபெறுவது தீபத் திருவிழா. மார்கழி மாதத்தில் நடைபெறுவது எண்ணெய் காப்பு திருவிழா. தை மாதத்திலே நடைபெறுவது தெப்ப திருவிழா. மாசி மாதத்திலே நடப்பது மக விழா. பங்குனியில் நடைபெறுவது கோடை வசந்த விழா.
மதுரை மீனாட்சியை மாணிக்க மூக்குத்தியுடன் தரிசிப்பது சிறப்பு. வைர கிரீடத்துடன் அம்மனை தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தை அமாவாசை நாட்களில் தரிசிக்கலாம். ஆனி பௌர்ணமி அன்று மீனாட்சி அம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் முக்கனிகளான மா, பலா, வாழைப்பழ அபிஷேகம் செய்வார்கள்.
மீனாட்சி சன்னிதி எதிரில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் இருப்பதால் சித்திர கோபுரம் எனப்படுகிறது. இந்த கோபுரத்தில் அமைந்துள்ள இருபத்தைந்து முகம் கொண்ட சதாசிவம் சிற்பம் அற்புதமானது.
பொற்றாமரை குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், வணிகரான தனஞ்செயன்ஆகியோரின் சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. அதனால் மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்றொரு பெயரும் உண்டு.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும் அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பில் என பன்னிரண்டு தமிழ் மாதங்கள் பெயரில் தெருக்கள் காணப்படுகின்றன. இந்த வீதிகள் தமிழ் மாதங்களின் பெயர்களில் அழைக்கப்படுவது சிறப்பு.
மதுரையில் மீனாட்சி அம்மனை வழிபட்டுவிட்டு சுந்தரேஸ்வரரை வணங்கச் செல்லும் வழியில் எழுந்தருளியுள்ள பிரம்மாண்ட விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு பதினெட்டு படி அரிசியை கொண்டு செய்யப்பட்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பிரசாதம் தாழம்பூ குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.
மீனாட்சி அம்மன் சன்னிதிக்கும் சுந்தரேஸ்வரர் சன்னிதிக்கும் இடையே உள்ள மண்டபத்தின் கூரையில் சுழலும் லிங்கம் உள்ளது. எந்தவித அறிவியல் நுட்பங்களும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட இந்த சுழலும் லிங்கத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. நீங்கள் எந்த திசையில் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இந்த லிங்கத்தின் அடிப்பாகம் உங்களை நோக்கியே இருக்கும்.
மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு பகுதியில் கிளிக்கூண்டு மண்டபம் அல்லது ஊஞ்சல் மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் தங்க விக்கிரகங்களை வைத்து ஊஞ்சல் உத்ஸவம் நடத்தப்படும். அந்த சமயத்தில் இந்த மண்டபத்தில் உள்ள கிளிகள் மீனாட்சி அம்மனின் பெயரைச் சொல்லி அழைப்பதும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள இருபத்தெட்டு தூண்களில் இருந்து பலவிதமான இசைக்கருவி இசைகள் இசைக்கப்படுகின்றன.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன்கள் எதுவும் வசிப்பது கிடையாது. இங்கு மீன் போன்ற கண்களால் அன்னை மீனாட்சியே பக்தர்களைக் காத்து வருவதால் இங்கு மீன்கள் வளர்வது கிடையாது.
மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளை அள்ளித் தரக்கூடியதாகும். இந்த பள்ளியறை பூஜையை நேரில் கண்டாலும் இந்த பூஜைக்கு பால், பழம், பூ போன்றவற்றை வாங்கிக் கொடுத்தாலும் மிகப்பெரிய புண்ணிய பலனும் நன்மைகளும் கிடைக்கிறது. ஆனால், இதில் அனைவரும் கலந்து கொள்ள முடியாது என்பது ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காண வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று ஆயிரம் கால் மண்டபம். ஆனால், இங்கே தொள்ளாயிரத்து எண்பத்தைந்துதூண்களே உள்ளன. பதினைந்து தூண்களுக்கு பதிலாக இரண்டு கோயில்கள் உள்ளன. மண்டபத்தின் தூண்களை எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும். இந்த மண்டபத்தின் மையத்தில் இருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காத வகையில் சிறந்த கணிதவியல் முறையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் பிரசித்தி பெற்றது. பொற்றாமரை குளத்தின் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் தங்க மூலாம் பூசப்பட்ட தாமரை ஒன்று குளத்தில் மிதக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பொற்றாமரை குளத்தின் படியில் லிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த லிங்கம் இன்றும் மதுரை ஆதீனத்தின் வழிபாட்டில் உள்ளது.
தமிழ் வருடங்களைக் குறிக்கும் சக்கரம் மதுரை கோயில் ஆயிரம் கால் மண்டபத்தின் வாயில் மேற்புறத்திலே அமைந்திருக்கின்றது.
‘நான்மாடக் கூடல்’ என்பது மதுரை திருத்தலத்தின் பெயராகும். வருணன் பெய்த பெரும் மழையிலிருந்து மதுரையை சிவபெருமான் நான்கு பக்கங்களிலும் மாடம் போல பாதுகாத்தார் இதனால் மதுரைக்கு இந்த பெயர் வந்தது.
‘வாக் வாகினி’ என்ற தேவதையின் அடையாளம்தான் கிளி. மீனாட்சியை வழிபட, வாக் தேவதையின் அருள் கிடைத்து வாக்கு வன்மை ஏற்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒரு சிற்பக் களஞ்சியம் ஆகும். இங்கு சுமார் முப்பத்தி மூன்றாயிரம் சிற்பங்கள் உள்ளன.
சிம்ம யாளியும் கஜ யாளியும் பல கோயில்களில் காணப்படும். ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றோடு சேர்த்து வேறெங்கும் காண முடியாத வகையில் நாய் யாளியும் காணப்படுகிறது.