
மேக்னா கார்ட்டா என்பது, 1215-ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஜான் என்பவரால் கையெழுத்திடப்பட்ட ஒரு வரலாற்று ஆவணமாகும். இது 'பெரிய சாசனம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆவணம், அரசரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி, தனிநபர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்தது. இது ஆங்கிலேய சட்ட அமைப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது மற்றும் நவீன ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.
'மாக்னா கார்ட்டா' என்றால் லத்தீன் மொழியில் 'பெரிய சாசனம்' என்று அர்த்தம். இந்த சொல் முதன்முதலில் 1217 ஆம் ஆண்டில் வன சாசனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட பயன்படுத்தப்பட்டது. இந்த ஆவணம் மன்னரின் நிர்வாகத்திற்கான வரம்புகளையும், அதிகாரங்கள் கடுமையான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதையும் வரையறுத்தது.
இரண்டு சாசனங்களும் மன்னர் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை வகுத்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மன்னரும் மற்ற அனைவரும் முதன்முறையாக பின்பற்ற வேண்டிய சட்டங்களை வகுத்தன. மேக்னா கார்ட்டாவின் நகல்கள் இங்கிலாந்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் படிக்க அனுப்பப்பட்டன. இதனால் அதன் சிறப்பு அனைவருக்கும் தெரியும்.
மாக்னா கார்ட்டாவில் 63 பிரிவுகள் உள்ளன. முக்கியமாக, நிலப்பிரபுத்துவ பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீதி அமைப்பின் செயல்பாட்டைப் பற்றியது. வரிகள், நகரங்கள் மற்றும் வர்த்தகம், அரச வனத்தின் பரப்பளவு மற்றும் ஒழுங்குமுறை, கடன், திருச்சபை மற்றும் அமைதியை மீட்டெடுப்பது பற்றிய பிரிவுகள் உள்ளன. மாக்னா கார்ட்டாவில் உள்ள 63 உட்பிரிவுகளில் நான்கு மட்டுமே இன்றும் செல்லுபடியாகிறது.
"எந்தவொரு சுதந்திர மனிதனும் தனது சகாக்களின் சட்டபூர்வமான தீர்ப்பு மற்றும் நாட்டின் சட்டத்தின் மூலம் தவிர, எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ, வெளியேற்றப்படவோ, சட்டவிரோதமாக்கப்படவோ, நாடுகடத்தப்படவோ அல்லது அழிக்கப்படவோ கூடாது, அல்லது எந்த வகையிலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவோ கூடாது."
இந்தப் பிரிவுகள் இன்றும் சட்டமாகவே உள்ளன, மேலும் பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்ட ஆங்கிலச் சட்டத்தில் முக்கியமான கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. மேலும் அவை அமெரிக்கா மற்றும் பிற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த மாக்னா கார்ட்டா உருவாக்கம் ஒரு சுவையான கதை.
1215 ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட ஜான், எதிரி நாடான பிரான்சிடம் நார்மண்டிப் பகுதியை இழந்ததுடன் ஆட்சியும் சீராக இல்லாததினால், பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் அரசருக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தனர். ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி, கடுமையான வரிவிதிப்பு, போப்புடன் தகராறு, போரிடவும் தெரியவில்லை, ஆகியன கோபமாக மாறியன. பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என்று ஒரு பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.
பின்னர் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது. சாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். ஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது.
இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதன்படி அரசரின் முடிவு தன்னிச்சையாக இராது; 'சுதந்திர' மனிதர்களை தண்டிக்க இயலாது. அவர் மகாசபையின் அனுமதியைப் பெற்றே செயற்படமுடிந்தது.
"மேக்னா கார்ட்டா" 1946 ம் ஆண்டு முதல் ஹார்வர்டு சட்டப் பள்ளியில் ஒரு பாடத்திட்டமாக இருந்தது. உலகின் மிக முக்கியமான 7 ஆவணங்களில் இந்த மேக்னா கார்ட்டாவும் ஒன்று. தற்போதும் ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது!