
இந்தோனேஷியாவின் பாரம்பரிய கலாசாரம், ஆன்மிகத்தின் ஆணி வேர் மற்றும் சிற்பக் கலையின் சங்கமம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும், பாலி தீவிலுள்ள, கருடா விஷ்ணு கென்கனா (GWK) சிலையே தற்போது சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கக் கூடியதாக உள்ளது. இந்தோனேஷியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த சிலையின் அருகில் உள்ள பார்க், விழாக் கோலம் பூண்டுள்ளது. 2025, ஆகஸ்ட் 13 முதல் 17 வரை கொண்டாடப்படும் இவ்விழாவின் கடைசி நாளில் பிரம்மாண்டமான மியூசிக் கச்சேரியும் நடக்க உள்ளது.
கடவுள் சிலைகளில், உலகிலேயே மிக உயரமான சிலையாகக் கருதப்படும் இந்த கருடா விஷ்ணு கென்கனா, புகிட் உங்ஹாசன் (Bukit Ungasan) என்ற இடத்தில், லைம்ஸ்டோன் மலைகளின் உச்சியில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பகவான் கருட வாகனத்தின் மீது அமர்ந்திருப்பதுபோல் உள்ளது இந்தச் சிலை. இதன் கட்டுமானப் பணிகள் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறை காரணமாக நடுவில் நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் தொடரப்பட்டு, 2018ல் முழுமை பெற்றது.
சுமார் 400 அடி உயரமுள்ள இந்த சிலையில், கருடனின் இறக்கை 64 மீட்டர் அளவுக்கு நீண்டு விரிந்து காணப்படுகிறது. நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட அதிக உயரமான இந்த கருடா விஷ்ணு கென்கனா, 3000 டன் காப்பர் மற்றும் ப்ராஸ் ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பாலியில் நிலவும் வெப்ப நிலை, மழை மற்றும் அவ்வப்போது வெளியாகும் பூகம்பம் ஆகியவற்றை தாக்குப்பிடிக்கும் வகையிலான தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பகவான் மகாவிஷ்ணு அகில உலகத்தின் பாதுகாவலராக உள்ளார். சுதந்திரம், பலம், விசுவாசம் போன்றவற்றின் அடையாளமாக கழுகு உள்ளது. மேலும், கருடன் இந்தோனேஷியாவின் தேசிய சின்னமாகவும் (Garuda Pancasila) உள்ளது. பாலி தீவிலுள்ள மக்களின் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக உள்ள, பழங்கால கதைகள், ஒற்றுமை, பன்முகத்தன்மை போன்றவற்றை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைந்துள்ளது.
மத நம்பிக்கை, சமுதாய ஒற்றுமை, இயற்கை ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதில் பாலி இனத்து மக்கள் பொறுப்புணர்வோடு ஈடுபட்டு பாலினீஸ் ஹிந்து கலாசாரத்தை (Balinese Hindu Culture) உருவாக்கியுள்ளனர். கோயில்களில் தினசரி பூஜைகளும், படையல்களும் தவறாமல் நடைபெற்று வருகின்றன.
இந்த சிலையை சுற்றியுள்ள பூங்காக்களில் தினமும் பாலினீஸ்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்று வருகிறது. பார்க்கில் ஆங்காங்கே புராணக் கதையில் வரும் காட்சிகள் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. உணவு விடுதிகளும் நிறைந்துள்ள இந்த பார்க், விழாக்கால கலை நிகழ்ச்சிகளிலிருந்து அணி வகுப்புகள் வரையிலான பல வகை நிகழ்வுகளால் மக்கள் மனங்களை வெகுவாக மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.