மறைந்து வரும் பாரம்பரியக் கலை கழைக்கூத்து!

Marainthuvarum Paarampariya kalai Kazahikoothu
Marainthuvarum Paarampariya kalai Kazahikoothuhttps://tamilandvedas.com
Published on

க்காலங்களில் பொங்கல் போன்ற விடுமுறை தினங்களில் மேள சப்தம் கேட்டு தெருக்களில் கூடும் கூட்டம் கைதட்டிக் கண்டு களிக்கும் கழைக்கூத்து எனும் கலை இன்று  பெரும்பாலும் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். கழைக் கூத்தாடிகள் என சொல்லப்படும் பாரம்பரியக் கலைஞர்கள் இந்தக் கலைக்காக தரும் உழைப்பும் பயிற்சியும் அதீதமானது எனலாம்.

கழைக் கூத்தாடிகளின் ஒருமுகப்பட்ட உழைப்பை அடிப்படையாகக் கொண்டே, ‘ஆரியக் கூத்தாடியானலும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்’ என்ற பழமொழி உண்டு. அதாவது, அந்தரத்தில் நடந்தாலும் கூத்துக் கலைஞர்கள் அவர்களின் காரியத்தில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். அதேபோல் நாமும் நாம் செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

கூத்து என்பது, சங்ககாலம் தொட்டு மக்களை மகிழ்விக்கும் தமிழர்களின் பழங்காலப் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்று. கடந்த காலங்களில் பொழுதுபோக்கிற்காக மக்கள் ஒன்று கூடி, ஆடி பாடி மகிழ்ந்து அதுவே பின்னாளில் பல்வேறு வளர்ச்சிகளுடன் பலவிதக்  கலைகளாக மாற்றம் கண்டு வந்துள்ளது. இந்தக் கூத்துக் கலைகளில் தெருக்கூத்து, சாந்தி கூத்து, அபிநய கூத்து , நாட்டுக்கூத்து, வினோத கூத்து, குரவை கூத்து, கவிநடன கூத்து , குடக்கூத்து, மரப்பாவை கூத்து, தோற்பாவை கூத்து போன்ற எண்ணற்ற  வகைகள் உண்டு. இவற்றில் இரு மூங்கில் கம்புகளுக்கிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்தபடி வித்தை காட்டுவதே, ‘கழைக்கூத்து’ ஆகும். மூங்கிலை குறிக்கும் கழை என்ற சொல்லுடன் கூத்தும் சேர்ந்து கழைக்கூத்து ஆனது. வடநாட்டிலிருந்து வந்த கூத்து என்பதால் இதற்கு, ‘ஆரியக் கழைக்கூத்து’ என்ற பெயரும் உண்டு.

தமிழகத்தின் பல  நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் கழைக்கூத்தாடிகளின் வித்தைகளை பார்த்திருக்கலாம். இந்த கழைக்கூத்து வைகாசி, ஆடி, ஆவணி மாதங்களில் ஊர் கோயில் விழாக்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. கம்பு அல்லது கயிற்றில் நடக்கும்போது வெளிச்சம் வேண்டும் என்பதால் இந்தக் கூத்து காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே  நிகழ்த்தப்படுகிறது. அதேபோல் இதில் சிறிய தவில் மேளம் மட்டுமே இசைக்காக உபயோகிக்கப்படுகிறது.

விளையாடத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து அதில் 9 மீட்டர் உயரத்தில் இருந்து 18 மீட்டர் உயரம் வரை நான்கு வலிமையான மூங்கில்களை குறுக்கு வாக்கில் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டிரண்டாக நட்டு  அவை அசையாமல் நிற்க உறுதியான மாட்டுத்தோலால் ஆன கயிறுகளைக் கொண்டு இரண்டையும் இணைத்து, தொய்வில்லாமல் இறுக இழுத்து தரையோடு  இருக்கும்  இரும்புக்கம்பியில் கட்டி விடுவர். இது தயாரானதும்  கூத்துத் தொடங்குவதை மக்களுக்கு அறிவிக்க சிறிய மேளம் இசைக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
Be Careful மக்களே..  இந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்! 
Marainthuvarum Paarampariya kalai Kazahikoothu

கூத்தாடுபவர்கள் தரையில் கிடக்கும் ஊசியை கண்களால் எடுப்பது, கண்ணை கட்டிக்கொண்டு பெண்கள் மீது கத்தியை வீசுவது, ஆண்கள் தரையில் நின்றபடி குட்டிக்கரணம் அடிப்பது  போன்ற பல சாகசங்கள் நடைபெறும். கயிற்றில் நடக்கும் வித்தையை பெரும்பாலும் பெண்களே செய்வது குறிப்பிடத்தக்கது. இதில் சிறு குழந்தைகள் வைத்துக் காட்டப்படும் வித்தைகள் உண்மையில் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தைத் தரும்.

இந்தக் கழைக்கூத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்கு பெறுவதால் இது குடும்பக் கலையாகிறது. கூத்து முடிந்த பின் கண்டு களித்த மக்கள் மகிழ்ந்து அன்பளிப்பாகக் தரும் பணம், அரிசி போன்ற பொருட்களே அவர்களின் வருமானமாகிறது.

எங்கேனும் கழைக்கூத்தாடிகளைக் கண்டால் சற்று நேரம் ஒதுக்கி அவர்கள் கலையை ரசித்து சன்மானம் அளித்து ஆதரவு தருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com