நம் உடலில் ஏற்படும் மோசமான நோய்களில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மரணத்திற்குக் கொண்டு செல்லும் புற்றுநோய் மிக மோசமானது. நம் உடலில் உள்ள செல்களின் அதிக வளர்ச்சியால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது புற்று நோய்க்காக பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும் மக்கள் மத்தியில் புற்றுநோய் சார்ந்த பயம் அதிகமாக உள்ளது எனலாம்.
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய மோசமான உணவுப் பழக்கத்தின் காரணமாக புற்றுநோய் அபாயம் அதிகரித்துவிட்டது. நமது ஆரோக்கியத்தில் நேரடி தொடர்பில் இருப்பது உணவுப்பழக்கம் என்பதால், புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் சார்ந்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் அது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அதிலும் ஒரே எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சமையல் செய்யும்போது, புற்றுநோய் அபாயம் மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள் நம் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என சொல்லப்படும் நிலையில், அதில் அதிகப்படியான உப்பு மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. அந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்க அதில் பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் கேன்சர் அபாயத்தை அதிகரிக்கும் ஒன்றாகும். மேலும் அதில் பலவகையான ரசாயனங்கள் சர்க்கரை போன்றவை கலக்கப்படுவதால், புற்றுநோய் ஏற்படுத்துவது மட்டுமின்றி உடற்பருமனையும் அதிகரிக்கும்.
அதேபோல அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை ஒருவர் அடிக்கடி அருந்தி வந்தால், மார்பகம் மற்றும் வயிற்றுப் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சொல்கின்றனர். இதன் மூலமாக உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கிறது. அதிக இனிப்பு சுவையுடைய பானங்கள் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு வழிவகுக்கிறது.
அதிக அளவு மதுபானத்தை உட்கொள்ளும்போது அது நம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை கெடுத்துவிடுகிறது. குறிப்பாக மதுபானமானது கல்லீரலை பாதித்து கல்லீரல் புற்றுநோய் உண்டாக வழி வகுக்கும். உடலில் உள்ள ஹார்மோனை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் மதுபானத்தால், உடலில் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே ஆரோக்கியமான உணவை உட்கொண்டு புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் பொதுவான கருத்துக்களாகும். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.