இந்த வருட இசை விழா சீசனில் பல்வேறு சபாக்களும் பல வித்வான்களுக்கு விருது அளித்து கௌரவிக்கின்றன. எந்தெந்த சபாக்களில் யார் யாருக்கு என்னென்ன விருது என்று ஒரு ரவுண்டு சுற்றிப் பார்க்கலாமா?
மியூசிக் அகாடமியின் 97வது ஆண்டு இசைவிழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமைதாங்கி, பாம்பே ஜெயஸ்ரீக்கு ’சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குகிறார். ஜன 3ம் தேதி துவங்கும் நாட்டிய விழாவில் ’நிருத்ய கலாநிதி’ விருது பெறுகிறார் வசந்த லட்சுமி நரசிம்மாச்சாரி.
பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தது வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். அங்கே, கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இந்துஸ்தானி, மேற்கத்திய கிளாசிகல் இசை, நாட்டுப்புற இசை, இவற்றையும் கற்றுக் கொண்டார். ஹிந்தி சினிமா பாடல்களைக் கேட்கவும், பாடவும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ’அவந்தி சேம்பர் ஆர்கெஸ்டிடாவின்’ நிகழ்ச்சியில் சங்க இலக்கியப் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இதைத் தவிர, ஆப்பிரிக்காவின் சூலு கார்னிவல், ஸ்பெயின் நாட்டின் மிகப் பழைமையான தேவாலயம், அர்ஜென்டைனாவில் உள்ளஅருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இசை நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறார். “எனக்குப் பிடித்த இசையே என் வாழ்க்கையாக அமைந்ததும், அப்படி எனக்குப் பிடித்ததைச் செய்யும்போது உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் பாராட்டு கிடைப்பதும் நான் பெற்ற பாக்கியம்” என்று முக மலர்ச்சியோடு சொல்லி நெகிழ்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ.
சென்னையின் மிகப்பழைமையான சபாவான பார்த்தசாரதி ஸ்வாமி சபாவின் 123வது வருட இசை விழாவில் ’சங்கீத கலாசாரதி’ விருது பெறுகிறார் வயலின் வித்வான் நாகை முரளீதரன். விருது பெறும் நாகை முரளீதரன் பத்து வயதில் வயலில் கற்றுக்கொள்ளத் துவங்கி, கடந்த ஐம்பது ஆண்டுகளாக கர்நாடக இசை உலகில் முத்திரை பதித்து, வலம் வருபவர்.
எம் டி ராமநாதன், பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு, ராஜம் ஐயர். சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சேஷகோபாலன், கே ஜே யேசுதாஸ், சஞ்சய் சுப்ரமணியம் என பல தலைமுறை வித்வான்களுக்கும், பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். நிறைய வயலின் சோலோ கச்சேரிகளும் செய்து பாராட்டுப் பெற்றவர். 1985ல் ஸ்ரீரங்கம் கோவிலில் தொடர்ந்து 26 மணி நேரம் வயலின் வாசித்தவர் இவர். உள்ளூர் சபாக்கள் முதல்
சங்கீத நாடக அகாடமி வரை பல பட்டங்களும், விருதுகளும் பெற்றவர் இவர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஜப்பான், குவைத் என பல்வேறு நாடுகளிலும் கச்சேரிகள் செய்தவர்.
இந்த ஆண்டுக்கான “நாத வல்லபா” விருது பெறுபவர்கள் குரலிசைக் கலைஞர்கள் ரஞ்சனி - காயத்ரி. மூன்று வருட வயது வித்தியாசம் கொண்ட சகோதரிகள் அக்கா ரஞ்சனியும், தங்கை காயத்ரியும். பிறந்தது பம்பாயில். பாரம்பரிய இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட குடும்பம். இரண்டரை வயதிலேயே ரஞ்சனி நூற்றுக்கும் அதிகமான ராகங்களைக் கண்டறியும் திறமை பெற்றிருந்தார்.
வயலின் கலைஞர்களாக தங்கள் இசைப்பயணத்தைத் துவக்கிய இவர்கள் பி எஸ் நாராயணசாமியிடம் கர்நாடக இசை கற்றுக் கொண்டு குரலிசையிலும் 1997 முதல் தடம் பதிக்கத் துவங்கினார்கள். சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, மராத்தி என பல்வேறு மொழிகளிலும் பாடல்கள் பாடுகிறார்கள். அகில இந்திய வானொலி தேசிய வயலின் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் இவர்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை விருது (2004) உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சங்கீத சூடாமணி விருது பெறுகிறார்கள் வித்வான்கள் மைசூர் நாகராஜும், மைசூர் மஞ்சுநாத்தும். ’நிருத்திய சூடாமணி’ விருது பெறுகிறார் டாக்டர் ஸ்ரீலதா வினோத்.
மைசூரை சேர்ந்த சகோதரர்கள் நாகராஜ், மஞ்சுநாத் இருவரும் கர்நாடக இசை உலகில் மைசூர் சகோதரர்கள் என்று பிரபலமானவர்கள். இவர்களின் வயலின் வாசிப்பு சர்வதேச அளவில் புகழ் பெற்றது. மஞ்சுநாத் இசையில் எம்.ஏ. படித்தவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் முதல் இடம் பிடித்து நான்கு தங்க மெடல்கள் பெற்றவர். உலகின் பல முக்கிய இசைத் திருவிழாக்களில் இவர்களின் வயலின் கச்சேரி நடைபெற்றுள்ளது.
ஸ்ரீலதா வினோத் எட்டு வயதில் குரு தஞ்சை அருணாசலம் பிள்ளையிடம் பரத நாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தனஞ்செயன் தம்பதியினரின் பரத கலாஞ்சலி நாட்டியம் பயின்றார். இவரது சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் பலதரப்பினரது பாராட்டினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.