மருதாணி, இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான செடியாகும். எண்ணற்ற பயன்கள் ஒவ்வொரு செடியின் மூலமாக நமக்கு கிடைக்கின்றன. அதில் மருதாணியும் ஒன்று. இதை மெஹந்தி என்றும் ஹென்னா ஹென்னா அழைப்பார்கள்.
மெஹந்தி என்பது மெந்திகா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. அதே நேரத்தில் ஹென்னா ஹினா என்ற அரபு பெயரிலிருந்து வந்தது.
மருதாணி குறைந்தது 5,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இடம்பெயர்வு மற்றும் கலாச்சார தொடர்புகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கை விரல்களில் மருதாணியை பூசுவது நகங்களில் உள்ள கிருமிகளைக் கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகிறது. மேலும் மனக்குழப்பத்தைத் தவிர்க்கிறது. அது மட்டுமல்லாமல் மருதாணியை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் நரை நிறம் மாறி சிகப்பாகி விடும். Dye அடித்து கொள்வதை காட்டிலும் இது தான் நல்லது.
அந்த காலத்தில் மருதாணி இலைகளைப் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று பார்க்க போட்டியே நடக்கும்.
நமது கைகளில் வைத்தவுடன் சிவப்பாகவும் , அரக்கு நிறமாகவும் ஒவ்வொருவர் உடல் நிலை பொருத்து இருக்கும். மருதாணி சிவக்க அதிலுள்ள ஆட்டோ சயனின் (auto cyanin) எனும் வேதிப்பொருளே காரணமாகும்.
இந்த காலத்தில் ஒரு பெண் தான் மணக்க போகும் கணவனின் குணாதிசயங்களை அறிய பல வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால் அந்த காலத்தில் பெண்கள் திருமணம் வரை கணவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். ஒரு பெண்ணிற்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை இரண்டு விஷயங்களின் வாயிலாக அறிய முடியும் என நம் முன்னோர்கள் நம்பினார்கள்:
1. ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின் வாயிலாக அறிவது.
2. திருமணமாக இருக்கும் பெண்ணிற்கு மருதாணி இடுவதன் மூலம் அறிவது.
ஒரு பெண்ணின் கையில் இடும் மருதாணி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் அவள்மேல் அதிக காதலுடன் இருப்பான் என்றும் அதனால் அவளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் நம் முன்னோர்கள் கருதினார்கள். மருதாணி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.
சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். மருதாணி சிவக்காமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டால் அது பித்த உடம்பை குறிக்கும்.
சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதாணி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்கு அசோக வனம் என்ற பெயர் ஏற்பட்டது. சீதை இலங்கையில் அசோக வனத்தில் இருக்கும்போது சீதைக்கு மருதாணி தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது.
ஆகவே சீதை இந்த மரத்திற்கு உன்னை பூஜிப்பவர்க்களுக்கு, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு, உன் இலைகளை கையில் பூசி கொள்பவர்களுக்கு துன்பம் வராது என்று வரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது.
ஆனால் இன்றைய நாட்களில் செடி கொடிகள் எல்லாம் அழிக்கபட்டுவிட்டன. எங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி கட்டிடங்கள். முன்பு போல் இப்போது நம்மால் மருதாணி செடியை காண முடியாது. ஆகவே இப்போது செயற்கை முறை மருதாணி தான் கிடைக்கிறது. அதுவும் பேஸ்ட் செய்யப்பட்டு ஒரு கூம்பு வடிவத்திலே அதை நிரப்பி இடுகிறார்கள்.
அந்த காலத்தில் மணமகளுக்கு மட்டும் தான் இடுவார்கள். ஆனால் இப்போதோ கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் மெஹந்தி பங்க்ஷன் என்று ஒரு விழா நடைபெறுகிறது. திருமணத்திற்கு வந்திருக்கும் எல்லோரும் அன்று அதை தடவிக் கொண்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் குதுகலமாக இருப்பார்கள்.
எதுவாக இருந்தாலும் சரி, தயாரிக்கும் முறை மாறினாலும் அல்லது கொண்டாடும் முறை மாறினாலும் இன்னும் நம் இந்திய கலாச்சாரம் மட்டும் மாறவில்லை.