திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

Maruthi Rao
Maruthi Rao
Published on

ற்காலத்திய காமிராக்கள், கம்ப்யூட்டர் வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்நாளைய திரைப்பட ஒளிப்பதிவாளர், காமிராவை மட்டுமே நம்பி படம் எடுக்கவில்லை; காட்சி, அந்தச் சூழ்நிலை, ஒளியமைப்பு, தனது சொந்த கற்பனை என்று மனசையும், மூளையையும் கசக்கிப் பிழிந்து, காமிராவுக்குள் செலுத்தி படம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர், ஒளிப்பதிவாளர் மாருதிராவ்.

தஞ்சாவூரில் 1921ம் ஆண்டு பிறந்த ராவுக்கு சிறு வயதிலிருந்தே காமிரா மீது தீராக் காதல். பள்ளிக்கூடம் மற்றும் பிற அமைப்புகள் நடத்திய புகைப்படப் போட்டிகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறார். சொந்த ஆர்வத்துடனும் பெற்றோர் அனுமதியுடனும் சென்னை அடையாரில் இருந்த கார்த்திகா ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக (அப்ரென்டீஸ்) சேர்ந்தார். அவர்கள் தயாரித்த ‘சூடாமணி‘ தெலுங்குத் திரைப்படத்தில் (இந்தி நடிகை ரேகாவின் தாயார் புஷ்பவல்லி கதாநாயகி) உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அடுத்தது ‘கவி காளமேகம்’ படத்தில் ஒளிப்பதிவாளர் எல்லிஸ் ஆர். டங்கனுக்கு சீடரானார்.

Maruti Rao on the shoot
Maruti Rao on the shoot

வேல் பிக்சர்ஸ் தயாரித்த ‘பக்திமாலா‘ தெலுங்கு படத்திற்கு பம்பாய் ஒளிப்பதிவாளரை நியமித்திருந்தார்கள். ராவுக்கு மராத்தி தெரியும் என்பதால் அவருக்கு உதவியாளராகப் பொறுப்பேற்றார். அந்த நாட்களில் பாடல் காட்சியை ஒளிப்பதிவு செய்வது சுலபமல்ல. குறிப்பிட்ட நடிகரே (உதாரணமாக இந்தப் படத்தில் நடிகை பானுமதி) பாட வேண்டும். முன்னதாகவே, இசையமைக்கப்பட்டபடி, ஒளிப்பதிவின்போது அவர் பாட, கூடவே இசைக்குழுவினர் தத்தமது கருவிகளை இசைக்க வேண்டும். இதை அப்படியே காமிராவுக்குள் பதிய வேண்டும்.

நடிகைக்கு மேலே ஒரு மைக் தொங்கிக் கொண்டிருக்கும், இந்த மைக்கோ, இதன் நிழலோ காட்சியின் எந்தப் பகுதியிலும் தெரிந்துவிடாதபடி எச்சரிக்கையாகப் படம் எடுக்க வேண்டும். இசைக் குழுவினருக்கு தனி மைக். பானுமதி சத்தம் போட்டுப் பாடினால்தான், சற்றுத் தொலைவிலிருக்கும் ஒளிப்பதிவாளருக்குக் காதில் விழும்! இதுபோன்ற காட்சிக்காக 40, 50, 75, 100 என ஃபோகல் லெங்த் கொண்ட லென்ஸ்களை அடுத்தடுத்துப் பொருத்திய காமிராவைப் பயன்படுத்தினார் ராவ். பிறகு இப்படி சுட்ட பிலிமைத் தொகுத்து லாங் ஷாட், மிட் ஷாட், க்ளோஸ் அப் என்று பாடல் வரியின் பொருளுக்கேற்ப, நடிகரின் முகபாவத்துக்கு ஏற்ப, காட்சியின் சூழலுக்கு ஏற்ப, எடிட் செய்து, அந்தப் பாடல் காட்சியை முழுமையாக்கினார்.

MGR - Sarojadevi in ​​Anbe Vaa
MGR - Sarojadevi in ​​Anbe Vaa

‘பராசக்தி‘ படத்துக்காக சிவாஜி கணேசனுக்கு ஒப்பனை செய்து பல கோணங்களில் அவரைப் படங்கள் எடுத்து, இவர் கதாநாயக வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று ஏவிஎம் செட்டியருக்குத் தெரிவித்தார் மாருதிராவ். செட்டியாருக்கு அரை மனசு, ‘தம்பி தேறுவானா?’ என்று ஏகப்பட்ட சந்தேகம். ஆனால் ராவ், ‘அவனது கண்கள் ஒன்றே போதும் - எந்த உணர்வையும் கண்களாலேயே வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்தப் பையனிடம் இருக்கிறது. பளிச் பளிச்சென்று மாறும் முகபாவம், கணீரென்ற குரல், பிசிறில்லாத வசன உச்சரிப்பு எல்லாமே அபாரம்’ என்று ராவ் தனது கருத்தைச் சொல்ல, தயக்கத்தோடேயே அதை ஏற்றுக்கொண்டார் செட்டியார். பிறகு பராசக்தியின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்த செட்டியார், ‘நல்ல தேர்வு’ என்று ராவைப் சொல்லிப் பாராட்டினார்.

பராசக்தி படத்தில் ‘பொருளே இல்லார்க்கு...’ என்ற பாடல் காட்சி. இரவுச் சூழல். சோகமான அந்தப் பாட்டுக்கு பனி மூட்டமான பின்னணி பொருத்தமாக இருக்கும் என்று மாருதிராவுக்குத் தோன்றியது. அதை இயக்குநரும் ஏற்றுக்கொள்ள, உடனே நியுஜெல் என்ற ஒரு பொருளை வரவழைத்தார் ராவ். அது பாரஃபின் போன்ற வேதியல் பொருளின் திரவ நிலை. அதை அப்படியே செட்டினுள் மேலே, கீழே, பக்கவாட்டில் தெளித்துவிட்டார். அதிலிருந்து வெளியான புகை, பனிமூட்டப் பின்புலமாக அமைந்து காட்சியின் சோகத்தை மேலும் வலியுறுத்தியது; பாராட்டு பெற்றது.

இதையும் படியுங்கள்:
பாமாயிலில் தயாராகும் இனிப்புகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் தெரியுமா?
Maruthi Rao

‘குழந்தையும் தெய்வமும்‘ படத்தில் ஒரு நிலைக்கண்ணாடியில் பிம்பத்தை விழச்செய்து ஒரு குட்டி பத்மினி, இன்னொரு குட்டி பத்மினிக்கு கொடுக்கும் முத்தத்தால், முதல் பத்மினிக்குக் கன்னத்தில் குழிவிழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அதுமட்டுமல்ல, இரு குட்டி பத்மினிகளும் கைகுலுக்கிக்கொள்ளும்போது, ஒரு பத்மினியின் கை நிழல் அடுத்த பத்மினியின் கைமீது விழும் அற்புதமும் பலராலும் பாராட்டப்பட்டது.

‘அன்பே வா‘ படத்தில், ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...’ பாடல் காட்சி. அது கனவுக் காட்சி என்பதால் விண்ணில், பால்வெளி பின்னணி அமைவது பொருத்தமாக இருக்கும் என்று தீர்மானித்தார் ராவ். உடனே சென்னை அமெரிக்க தூதரகத்தில் இருந்த நூல் நிலையத்துக்குச் சென்று விண்வெளி சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் பார்வையிட்டார். நூல் நிலைய அதிகாரியின் அனுமதியுடன் அந்தப் படங்களைத் தனது காமிராவில் ‘காபி’ செய்துகொண்டார். அதைப் பின்னணியில் (‘பேக் ப்ரொஜக் ஷனா’க) ஓட விட்டு, அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார். எம்.ஜி.ஆர். அந்தக் காட்சியமைப்பைப் பெரிதும் பாராட்டினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல திரைப்படங்களைத் தனது ஒளிப்பதிவால் சிறப்பித்த மாருதிராவ், 79வது வயதில் (வருடம் 2000) ‘அன்பே வா‘ படக்காட்சி போல விண்ணுலகப் பால்வெளியில் கலந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com