பாமாயிலில் தயாராகும் இனிப்புகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் தெரியுமா?

Palm oil sweets
Palm oil sweets
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவுப் பண்டம் இனிப்புகள். ஆனால், கடைகளில் விற்கப்படும் இனிப்புகளில் பெரும்பாலானவை தீங்கு விளைவிக்கும் பாமாயிலில் செய்யப்படுகின்றன. அவற்றை உண்பதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

குலோப் ஜாமுன்: அனைவருக்கும் பிடித்த இந்த இனிப்பு வகையில் பால் திடப்பொருட்கள் சர்க்கரை மற்றும் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பாமாயிலில் உள்ள அதிக கொழுப்பு கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து எடையைக் கூட்டும்.

ஜிலேபி: கண்களைப் பறிக்கும் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஜிலேபிகள் பெரும்பாலும் பாமாயிலில் ஆழமாக வறுக்கப்படுகிறது. இது அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்புள்ள பண்டம்.

காஜு கத்லி: குழந்தைகளுக்கு மிக விருப்பமானது. முந்திரி கொண்டு, பெரும்பாலும் பாமாயிலில் தயாரிக்கப்படுகிறது. இதிலுள்ள அதிக கொழுப்பு இதய நோய்க்கு வித்திடும்.

பால் பேடா: இது பால் பொருட்கள், சர்க்கரை மற்றும் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அல்வா: கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான இந்திய இனிப்பு வகையான இது பெரும்பாலும் பாமாயிலில் தயாராகிறது.

மைசூர் பாக்: பிரபலமான தென்னிந்திய இனிப்பு வகைகளில் ஒன்று. கடலை மாவு, சர்க்கரை மற்றும் பாமாயிலில் தயாராகும் இனிப்புப் பண்டம்.

பாமாயிலில் செய்த இனிப்புகளை உண்ணுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள்:

கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல்: பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது எல்.டி.எல் அதாவது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இது இதய நோய்க்கு வித்திடும்.

எடை அதிகரிப்பும், நீரிழிவு நோயும்: அதிக கலோரி மற்றும் கொழுப்பு காரணமாக, உடல் பருமனும், இன்சுலின் எதிர்ப்பிற்கும் வழிவகுக்கும். இது டைப் டு நீரிழிவு நோயை உருவாக்கும்.

அழற்சி: பாமாயிலில் அதிக அளவு ஒலிக் அமிலம் உள்ளது. இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட வீக்கம், கீல்வாதம், மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வித்திடும்.

செரிமான பிரச்னைகள்: பாமாயிலில் செய்யப்படும் இனிப்புகளை உண்பதால் உடலில் வாயு அதிகரிக்கும். வயிற்று அசௌகரியம், வயிறு வீங்குதல், செரிமான கோளாறுகள் ஏற்படும்.

புற்றுநோய் அபாயம்: பாமாயிலில் காமா- லினோலெனிக் அமிலம் என்ற கலவை உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும்போது மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், இதில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்திற்கும் வழி வகுக்கும்.

ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் குறுக்கீடு: பாமாயிலில் அதிக அளவு பால்மிடிக் அமிலம் உள்ளது. இது மற்ற உணவுகளில் இருந்து கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ மற்றும் கே போன்றவற்றை உறிஞ்சுவதில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும். இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

இதையும் படியுங்கள்:
இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!
Palm oil sweets

இரத்த அழுத்தம் அதிகரிப்பு: பாமாயிலில் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. இது இருதய நோய் மற்றும் பக்கவாதத்துக்கு வழிவகுக்கும்.

அறிவாற்றல் வீழ்ச்சி: பாமாயிலில் பீட்டா கரோட்டின் எனப்படும் ஒரு கலவை உள்ளது. இது மூளையில் குவிந்து அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் முதியவர்களுக்கான டிமென்ஷியாவிற்கு வழிவகுக்கும்.

சுற்றுச்சூழல் நச்சுகள்: பாமாயிலை உற்பத்தி செய்யும்போது அது காடழிப்பு மற்றும் வாழ்விட அழிப்புடன் தொடர்புடையது. இது பூச்சிக்கொல்லிகள் மற்றும் கன உலோகங்கள் போன்ற சுற்றுச்சூழல் நச்சுக்களை வெளியிடுகிறது. பாமாயில் உட்கொள்ளும்போது இந்த நச்சுக்கள் தனி நபர்களை பாதிக்கும்.

எனவே. கடைகளில் இனிப்புகளை வாங்கி சாப்பிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உத்தமம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com