மட்டப்பாவின் மைசூர்பாகு! எப்படி வந்தது மைசூர்பாகு?

Mysore pak
Mysore pak
Published on

தீபாவளி என்றாலே ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுவதுதான் வழக்கம். அதிலும் புராதன வகை இனிப்புகளுக்கு இன்றும் கிராக்கி இருக்கத்தானே செய்கிறது.

அந்த ஸ்வீட் வகைகளில் மைசூர்பாகு குறிப்பிடத்தக்கது. லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, மாலாடு, அதிரசம் என்ற தீபாவளி இனிப்புப் பட்டியலில் மைசூர்பாகு கட்டாயம் இடம் பிடிக்கும். பெயர்தான் ‘மைசூர்பாகு‘வே தவிர, பொதுவாக சிலர் வீட்டில் செய்யப்படுவதெல்லாம் மைசூர் பாறையாகவே ஆகிவிடுகின்றன. அந்தகால தீபாவளி மலர் புத்தகங்களில், ‘கணவன் தன் கையில் சுத்தியலுடன் தயாராகக் காத்திருப்பான், மனைவி கொண்டு வரும் மைசூர்பாகை (பாறையை) உடைத்து சாப்பிட‘ என்றெல்லாம் ஜோக் வரும். இப்போதான் வாயில் போட்டவுடனேயே கரைந்து போகிறதே!

சரி, இப்போது நம் கதாநாயகன் மைசூர்பாகு ஜனித்த சரித்திரம் காண்போம், வாருங்கள்.

மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் ஒரு டிபிகல் மகாராஜாதான் - வாரி வழங்குவதிலும் சரி, விருந்தினரை உபசரிக்கும் நேர்த்தியிலும் சரி.

இவர்தான் சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகருக்குச் செல்ல பயணச் செலவை அளித்தவர்; இவர்தான் ஜம்ஷட்ஜி டாட்டாவுக்கு நிலம், நிதி உதவி அளித்து இந்தியாவின் முதல் விஞ்ஞான ஆராய்ச்சி கூடமான தி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் அமைவதற்கு உதவியவர்; இவரே கிருஷ்ணராஜ சாகர் அணையை நிறுவி, நீர் மேலாண்மையை காத்தவர்; ஒவ்வொரு வருடமும் தம் முன்னோர் சிறப்புற நடத்தி வந்த தசரா விழாவை எந்தக் குறையுமில்லாமல் நடத்தி வந்தவர்.

இவருடைய விருந்துபசாரத்தை அனுபவிப்பதற்காகவே பல பிரமுகர்கள் விரும்பி இவருடைய அரண்மனையை நோக்கி வருவார்கள்.

வழக்கமாக கிருஷ்ணராஜ உடையார் தம் சாப்பாட்டிற்குப் பிறகு ஏதாவது ஒரு ஸ்வீட்டை, டெஸட்டாக சுவைப்பது வழக்கம். தன் சாப்பாட்டு நேரத்தில் விருந்தினர் வந்திருந்தார்களானால், அவர்களுக்கும் அந்த ஸ்வீட்டைப் பரிமாறச் சொல்லி, அவர்கள் சுவையால் கிறங்கிப் போவதைக் கண்டு ஆனந்தப்படுவார்.

இதையும் படியுங்கள்:
விதவிதமான லட்டுகள் பிடிக்கலாம் வாங்க!
Mysore pak

ஒருமுறை அரண்மனை தலைமை சமையல்காரரான காக்கசூரா மட்டப்பா, கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார். அன்றைக்கு ஏதாவது புது ஸ்வீட்டைத் தயாரித்து மன்னருக்கும், புது விருந்தினருக்கும் அளித்து அவர்களை அசத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். சம்பிரதாய ஸ்வீட் தவிர வேறு என்ன செய்யலாம்? அந்த காலத்தில் அவருக்கு அவரே யூட்யூப், கூகுள், வாட்ஸ் ஆப் எல்லாம். ஆகவே தீவிரமாக யோசித்த அவருடைய கண்களில் கடலைமாவு டப்பா பட்டது. வெறுமே கையைப் பிசைந்து கொண்டிருக்காமல் இப்போது அந்தக் கடலைமாவை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டுப் பிசைந்தார். ஒரு வாணலி எடுத்து அடுப்பில் ஏற்றி, நெய் ஊற்றி உருக்கினார். சர்க்கரையையும் சேர்த்துக் கொண்டார். ஏற்கெனவே பிசைந்து வைத்திருந்த கடலை மாவை அதில் கொட்டி, மொத்தமாகக் கிளறினார்.

அவர் எதிர்பார்த்த பதத்துக்கு வந்த பிறகு, அந்தக் கலவையை ஒரு தட்டில் பரத்தினாற்போலக் கொட்டி ஆற வைத்தார். பிறகு அதைக் கத்தியால் கீறி துண்டங்களாகப் பிளந்தார். மன்னருக்குப் பரிமாறினார்.

மன்னரும், விருந்தினரும் அந்த புது ஸ்வீட்டை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். ‘‘மட்டப்பா, இது என்ன ஸ்வீட்? பேரு என்ன?‘‘ என்று மன்னர் ஆவலுடன் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
இனிப்பான மினி பாதுஷா-தோதா பர்பி செய்யலாம் வாங்க!
Mysore pak

‘‘நளபாகு‘‘ என்றார் மட்டப்பா.

‘‘ஆனால் இது பாகாக இல்லையே, கொஞ்சம் கடினமாக இருக்கிறதே!‘‘ என்று தன் சந்தேகத்தைக் கேட்டார் மன்னர்.

‘‘நான் கொண்டு வந்தபோது இளகிய பாகாகத்தான் இருந்தது; இப்போது இறுகிய பாகாகிவிட்டது,‘‘ என்றார் மட்டப்பா.

‘‘பிரமாதம். இது நம் சொந்த தயாரிப்பு என்பதால், இதனை இனிமேல் மைசூர்பாகு என்று அழைப்போம்,‘‘ என்று பேடன்ட் உறுதி செய்தார் மன்னர்.

இதுதான் நான் இன்றளவுக்கும் ருசிக்கும் மைசூர்பாகு பிறந்த கதை. இன்னொரு பெருமிதமும் இந்த மைசூர்பாகுவுக்கு உண்டு. ஆமாம், உலகிலேயே மிகச் சிறந்த ஐந்து ஸ்வீட்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பது நம் மைசூர்பாகுதான்!

மைசூர்பாகுடன் அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com