வணக்கம் நண்பர்களே! நீங்கள் எப்போதாவது தமிழ்நாட்டில் ஓடும், பாயும் ஆறுகளைப் பற்றி எண்ணியதுண்டா? மழைக்காலத்தின் போதும் வெள்ளத்தின் போதும் காவிரி மற்றும் தாமிரபரணி ஆறுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இவை மட்டும்தான் தமிழ்நாட்டில் உள்ளனவா? வாருங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் அவற்றின் பயன்களைக் காண்போம்.
ஆறுகள் பெயர்க்காரணம்:
பொதுவாக ஆறுகள் என்பவை பல பெயர்கள் கொண்டு இன்றைக்கு வழங்கப்படுகின்றன. அதில் ஆறு, நதி, பெருக்கு என்பவை பெரும்பாலும் மக்களால் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். 'ஆறு' என்ற சொல் ஓடுதல், பாய்தல், செல்லுதல் என்ற பொருள்களைக் குறிக்கின்றன. மேலும், இந்தச் சொல் தமிழில் இருந்து பெறப்பட்டதாகும்.
அதாவது, இயற்கையாகப் பெய்யும் மழை நீர் அல்லது சுரக்கும் ஊற்று நீர் மலைப்பகுதிகளிலிருந்து நிலத்தின் சரிவை நோக்கிப் பாய்ந்து தொடர்ந்து ஓடி ஏரியினையோ, குளத்தினையோ, கடலினையோ சென்று அடைவதால் ஆறு எனப் பெயர் பெற்றது.
'நதி' என்ற சொல் 'நத்' என்ற வேர் கொண்ட சமஸ்கிருத மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்கும் ஓடுதல், பாய்தல், நகர்தல் என்று பொருள்.
அணைகள் பெயர் காரணம்:
இத்தகைய ஆறுகள் நமக்கு பல நன்மைகளைத் தந்து செல்கின்றன. ஆனால், அதன் பயன்பாடுகளை ஆறு ஓடிக்கொண்டே இருந்தால் முழுவதுமாக நம்மால் பெற முடியாது எனக் கருதிய நம் முன்னோர்கள், ஆறுகளின் குறுக்கே அணைக்கட்டுகளைக் கட்டினர். ஓடும் ஆற்றின் குறுக்கே நீரைத் தடுத்து நிறுத்தி, அடைத்து, மேலும் அதனைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது திறந்து விடுவதால் அணை என்ற பெயர் பெற்றது.
ஆறுகளின் பயன்கள்:
விவசாயத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய முக்கிய ஆதாரமாக ஆறுகள் விளங்குகின்றன.
இன்றும் பல கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகப் பயன்படுகிறது.
ஆறுகளின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் நீர்மின் சக்தி தயாரிக்கப்படுகிறது.
மீன் பிடிக்கும் தொழில்களுக்கு ஆறு முக்கிய பங்காற்றுகிறது.
தொழிற்சாலை வளர்ச்சிக்கும் வர்த்தக வளர்ச்சிக்கும் துணையாக இருக்கிறது.
சங்ககாலத்தில் ஆறுகள்:
நமது தமிழரின் பண்டைய கால வரலாற்றினை சங்க கால இலக்கியத்தினைக் கொண்டு நாம் அறிந்து வருகிறோம். அப்படிப் பார்க்கும்பொழுது, சங்க காலத்தில் ஆறுகள் விவசாயத்திற்கும் வணிகத்திற்கும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. அதில் இன்றைய காவிரி அப்பொழுது பொன்னி என அழைக்கப்பட்டது. வைகை, தாமிரபரணி, பெரியாறு ஆகிய ஆறுகள் சங்ககால நூல்களில் பாடப்பெற்றுள்ளன.
ஆறுகள் மனிதனின் நாகரிகம் வளர்ந்த இடங்கள்
ஆறுகள் நீர் ஆதாரமாக மட்டும் விளங்கவில்லை. மனிதனின் நாகரிகம் வளர்ந்த இடமாகவும் பல வரலாற்று அறிஞர்களால் அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மிகவும் பழமையான நாகரிகங்களாகக் கருதப்படும் எகிப்து-நைல் நதி, மெசபடோமியா-டைகிரிஸ் மற்றும் யூப்ரடீஸ், சீன நாகரிகம்-மஞ்சள் நதி, சிந்து நாகரிகம்-சிந்து நதி மற்றும் தற்போது சொல்லப்படும் கீழடி-வைகை நதி என மனிதனின் வரலாற்றை அறியவும் ஆறுகளும் நதிக்கரைகளும் உதவுகின்றன.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 18 முக்கிய ஆறுகள் உள்ளன. அதில் சில வேறு பகுதிகளில் பிறந்து தமிழ்நாட்டின் வழியே பாய்ந்து கடலை நோக்கி பயணிக்கின்றன. பல இங்கேயே பிறந்து பயணத்தைத் தொடர்கின்றன.
1. காவிரி/பொன்னி
2. பவானி
3. அமராவதி
4. நொய்யல்
5. மொய்யாறு
6. பாலாறு
7. கிருஷ்ணகிரி
8. செய்யாறு
9. பொன்னையாறு
10. தென்பெண்ணை ஆறு
11. வெள்ளையாறு
12. மணிமுத்தாறு
13. வைகை
14. தாமிரபரணி
15. சித்தாறு
16. அனுமாந்நதி
17. குண்டாறு
18. வைப்பாறு