முகலாயப் பாணி மீனாகாரி (Meenakari) வளையல்கள் என்பவை முகலாயப் பேரரசின் அரசவை மற்றும் கைவினைத் திறனால் உருவானவை. வண்ணமயமான எனாமல் வேலைபாடுகளைக் கொண்ட வளையல்களில் பூக்கள், இலைகள், பறவைகளின் உருவங்கள், தங்கம் மற்றும் வெள்ளி அலங்கார வேலைகளுடன் முத்து வெள்ளை, தூய நீலம், மை நீலம், ரத்த சிவப்பு, பச்சை போன்ற ஐந்து முக்கியமான வண்ணங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் குந்தன் வேலைப்பாடுகளுடன் இணைக்கப்பட்டு ஆடம்பரமான நகைகளை உருவாக்குகின்றன.
வரலாற்றுப் பின்னணி:
வரலாற்றுச் சான்றுகளின்படி மீனாகாரி வேலைப்பாடு பெர்சியாவில் தோன்றி, பின்பு முகலாய படையெடுப்பாளர்கள் மூலம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் ராஜஸ்தான் மாநிலத்துடன் கலாச்சார ரீதியாக தொடர்புடையதாக இருந்து வருகிறது.
இன்று ஜெய்ப்பூர் மீனாகாரி வேலைப்பாட்டின் மையமாக உள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த கைவினைஞர்கள் மீனாகாரி வேலைபாடுகளை தயாரிப்பதில் பெயர் பெற்றவர்கள்.
உருவாக்கம்:
வண்ணக் கண்ணாடி பொடிகளால் ஆன தனித்தனி துண்டுகளை கலைநயத்துடன் இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. தனித்துவமான வண்ணங்களைப் பெற பல்வேறு கனிம ஆக்சைடுகளைப் பயன்படுத்துகின்றனர். கண்ணாடியைத் தவிர பல்வேறு விலையுயர்ந்த கற்களின் பொடியும் வண்ணமயமாக்கல் செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
வடிவமைப்புகள்:
முகலாய ஆட்சியின் செல்வாக்கு காரணமாக இவை மிகவும் ஆடம்பரமானதாகவும், அரசு தர்பாரில் அணிவதற்கு ஏற்றவாறும் உருவாக்கப்பட்டன. இந்த வளையல்களில் பெரும்பாலும் பூக்கள், இலைகள், மரங்கள் மற்றும் பறவைகள் போன்ற இயற்கை வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முகலாய ஆட்சியின்போது அரச குடும்பத்தின் 'கர்கானா' (நகை பட்டறைகளில்) திறமையான கைவினைஞர்கள் குந்தன் மற்றும் மீனாகாரி வேலைபாடுகளை ஒருங்கிணைத்து அழகிய நகைகளை தயாரித்தனர்.
வளையல்களில் பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ரூபி கற்கள் போன்ற ரத்தின கற்களும் பதிக்கப்படுகின்றன. முகலாயப் பேரரசு காலத்தில் இந்த கலை முக்கியத்துவம் பெற்று, வளையல்களின் வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முகலாய பாணி:
16ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசு காலத்தில் இந்த மீனாகாரி கலை ராஜபுதனத்தில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. முகலாய அரசர்கள் இந்தக் கலையை ஆதரித்து, அதை அரசவை நகைகளில் பயன்படுத்தினார்கள். இதன் விளைவாக முகலாயபாணி மீனாகாரி வளையல்கள், முகலாய ராணிகளின் ஆடம்பரத்தையும், அரச அழகையும் பிரதிபலிக்கும் வண்ணம் இருந்தன. இன்றளவும் இந்த வளையல்கள் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நகைத் தயாரிப்பு முறைகளின் ஒரு பகுதியாக திகழ்கின்றது.
பல்வேறு வகையான மீனாகாரி பொருட்கள்:
மீனாகாரி வேலைபாடுகளை உருவாக்கும் கைவினைஞர்கள் மீனகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் கைவினை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறது. சந்தையில் பலவகையான மீனாகாரி பொருட்கள் கிடைக்கின்றன. நகைகள், ப்ரூச்கள் முதல் நாற்காலிகள், புகைப்பட பிரேம்கள், மணிகள், சாவிக்கொத்துகள், தட்டுகள் வரை பல்வேறு புதுமையான தயாரிப்புகள் உள்ளன. பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் அடிப்படை உலோகங்கள் தங்கம், வெள்ளி, தாமிரம் என்றாலும் இப்பொழுது வெள்ளை உலோகமும் பயன்படுத்தப்படுகிறது. இது இந்த தயாரிப்புகளை மிகவும் மலிவு விலையில் வைத்திருக்கிறது.
பராமரிப்பு:
மீனாகாரி நகைகள் நீடித்து உழைக்கக்கூடியவை. இவற்றை தினமும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றின் நீண்ட ஆயுளை அதிகரிப்பதற்கு அதனை பராமரிப்பது மிகவும் அவசியம். அதன் பளபளப்பை இழக்காமல் இருப்பதற்கு அவற்றை உலர்ந்த துணியால் சுத்தம் செய்து, பருத்தி துணியில் சுற்றி சேமித்து வைக்க வேண்டும். மீனாகாரி நகைகள் ஜெய்ப்பூரில் மிகவும் பிரபலமாகும். டெல்லி, பனாரஸ் மற்றும் ஹைதராபாத்தின் சில பகுதிகளிலும் கூட மீனாகாரி வேலைபாடு கொண்ட வளையல்களைக் காணலாம்.
மீனாகாரி கைவினைப் பொருட்களில் பெரும்பாலானவை செம்பு அல்லது பித்தளையை அடிப்படையாக பயன்படுத்துகின்றன. எனவே அவற்றை சுத்தம் செய்வதற்கு பிராஸோ போன்ற சிறப்பு பொருட்களை பயன்படுத்தலாம்.